வியாழன், 8 அக்டோபர், 2015

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகளும் (?) ஈழமும்

வைகோ ஆதரவு பெரியாரிஸ்டுகள் என்ற சொற்பதத்தை படித்ததும் என்னால் நகைக்காமல் இருக்க முடியவில்லை. வைகோ வை எனக்கு பிடிக்கும், பிடிக்காது என்பதல்ல விஷயம். ஆனால் வைகோ பெரியாரிஸ்டுகள், கருணாநிதி பெரியாரிஸ்டுகள், பிரபாகரன் பெரியாரிஸ்டுகள் என்றெல்லாம் பிராண்டட் பெரியாரிஸ்டுகளை பார்க்கும் போது நகைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஒரு பகுத்தறிவாளனுக்கு மக்கள் பற்றை தவிர, இனம், மொழி, தேசியம் குறித்த பற்றெல்லாம் அறவே கூடாது என்கிறார் பெரியார். இதன் பொருள் பகுத்தறிவாளன் நாட்டைப் பற்றியோ, இனம் , மொழி பற்றியோ கொஞ்சமும் கவலைப்படக்கூடாது என்பதோ அவைகளைப் பற்றி சிந்திக்க கூடாதோ என்பதல்ல. எந்த ஒரு செயலும் மக்களை , மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி தான் அமைய வேண்டும் என்பதே.
ஆபாச புராண, இதிகாச கதைகளின் குப்பையாக காணப்படுகிற தமிழ் இலக்கியங்களை கண்டித்த தந்தை பெரியார் தான், மக்கள் எளிதாக பயன்படுத்தும்படி மாபெரும் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தார். காங்கிரசை மிக கடுமையாக எதிர்த்த பெரியார் தான், காமராஜரை ஆதரிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ஒன்றை எதிர்ப்பதாயினும், ஆதரிப்பதாயினும் மக்கள் நலனை மட்டுமே கண்முன் கொண்டு சிந்தித்தனால் மட்டுமே பெரியாரால் அப்படி செயல்பட முடிந்தது. பகுத்தறிவாளனின் இயல்பும் அழகும் அது தான்.
ஆனால் கடவுள் மறுப்பை மட்டுமே பகுத்தறிவாக, பெரியாரிசமாக முன்னெடுப்பவர்கள் தான் நாளடைவில் ஏதேனும் ஒரு தனிநபர் ஆதரவு நிலையெடுத்து பிராண்டட் பெரியாரிஸ்டுகளாய் உருவெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களை பெரியாரிஸ்டுகளாய் காட்டிக்கொண்டே, பெரியாரியக் கொள்கைகள் நீர்த்துபோகச் செய்யும் வேலையையும் இவர்கள் செவ்வனே செய்கிறார்கள்.
பெரியாரை படித்தவருக்கு அம்பேத்கர் அந்நியமாய் பட நியாயமில்லை. அம்பேத்கரைப் படித்தவருக்கு பெரியார் அந்நியமாய் பட நியாயமில்லை. இருவரது நோக்கமும் கொள்கையும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் தங்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிற சிலர் திட்டமிட்டே அண்ணல் அம்பேத்கரை புறக்கணிக்கிறார்கள், ஒதுக்கி வைக்கிறார்கள். தங்களை அம்பேத்கரிஸ்டுகள் என்று காட்டிக்கொள்கிற சிலர் , தந்தை பெரியாரை தலித் மக்களின் விரோதி என சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
பெரியாரையும் அம்பேத்கரையும் ஒருவர் மாற்றி ஒருவர் புறக்கணிக்கிற இவர்கள், பிரபாகரன் என்று சொன்னால் மட்டும் கூட்டாக சேர்ந்து காவடி தூக்க முண்டியடிக்கிறார்கள். கடவுளேயாயினும் கேள்வி கேட்ட பூமியில் கடவுளுக்கும் மேலானவராக பிரபாகரனை உயர்த்தி , எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவராக அவரை காக்க துடிக்கிறார்கள்.
பிரபாகரன் பெயரோடு வாழ்க என்பதை தவிர வேறு எதை சேர்த்து சொன்னாலும் உடனடியாக தமிழின துரோகி பட்டம் கட்டி தங்கள் தமிழினப் பற்றை பறை சாற்றுகிறார்கள். ஆனால் மூச்சுக்கு முன்னூறு முறை இவர்கள் உச்சரிக்கிற தமிழினப் பற்றை அலசிப்பார்த்தால் ஒரே சாதி வெக்கையாக இருக்கிறது.
கடல்கடந்து இருக்கிற இலங்கை நாட்டில் சிங்கள ஆதிக்கவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தி கொன்று குவிக்கிறார்கள், தமிழீழம் வேண்டும், ஒழிக சிங்கள பவுத்த ஆதிக்கம், வளர்க தமிழ் தேசியம் என்று கூவி தங்கள் இனப்பற்றை காட்ட தெரிந்தவர்களுக்கு இங்கே, இதே நாட்டில், இதே ஊரில், இதே தெருவில் நடக்கிற எதுவும் காதுக்கு எட்டுவதுமில்லை, கண்ணுக்கு புலனாவதுமில்லை.
ஆதிக்க சாதி வெறியர்களின் திட்டமிட்ட வன்முறைகளால் ஆண்டாண்டு காலமாக அடிப்பட்டு மிதிப்பட்டு கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் கண்ணீரோ கூக்குரலோ அவர்களுக்கு அந்நியமாய் படுகிறது. எதுவெல்லாம் ஈழத்தில் நடக்கும் அநீதி என பொங்குகிறார்களோ அவைகளை மிஞ்சிய அநீதிகள் இங்கும் தினந்தோறும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எவையெல்லாம் ஈழத்திற்கு தேவையோ, அதே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டிதான் இங்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லை தாண்டி நீளும் உங்கள் இரக்கம் மிகுந்த கைகள், எதிரே வீழ்த்தப்படுகிற தாழ்த்தப்பட்டவனைக் கண்டால் மட்டும் முடக்கிக்கொள்கிறது.
தங்களை அம்பேத்கரிஸ்டுகள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள் என்பவர்களும் பிரபாகரனைக் கொண்டாடுவதில் காட்டும் முனைப்பை தந்தை பெரியாரை கொண்டாடுவதில் காட்டுவதில்லை.
ஆதிக்க சாதியினர் பிரபாகரனை, தமிழ் தேசியத்தை கொண்டாடுவதில் லாபமிருக்கிறது. தமிழராக இணையுங்கள் என்று கூவிக்கொண்டே தங்களின் சாதி அக்கிரமங்களை மூடி மறைக்க அல்லது பங்காளி சண்டை என்று அதை நியாயப்படுத்திக்கொள்ள பிரபாகர முகமூடி அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது.
ஆனால் தன் மண்ணில் சாதிக்க முடியாத சமத்துவத்தை, சுதந்திரத்தை , சகோதரத்துவத்தை ஈழத்தில் மட்டும் சாதித்துவிட முடியுமென முஷ்டி உயர்த்துவது அப்பட்டமான , மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம்.
திமுகவை எதிர்க்கிற தமிழ்தேசியவாதிகள் கூட வைகோவிடம் தங்கள் திராவிட எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு வாலை குழைக்க அவரின் ஆதிக்க சாதிக்கு ஆதரவான தமிழ்தேசிய பற்றும் காரணம்.
பிரபாகரன், வைகோ, ஜெயா, கருணாநிதி என எந்த தனிப்பட்ட நபர் ஆதரவு நிலை கொண்டும் பகுத்தறிவாளனாய் இருக்க முடியாது. தனி நபர் துதி மதியை மழுங்கடிக்கிற யுக்தி. பிரபாகரனை கொண்டாடுங்கள், ஆனால் அந்த கொண்டாட்டங்களினால் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறு துளி நன்மையுமில்லை. ஆனால் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒரு சேர முன்னெடுப்பது பார்ப்பனியத்திற்கெதிரான மாபெரும் ஆயுதம். நீங்கள் யார் என்பதை பகுத்தறிவின் துணைகொண்டு நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.
- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக