வியாழன், 8 அக்டோபர், 2015

மாட்டிறைச்சியும் மனுச கறியும்

மாட்டிறைச்சியும் மனுச கறியும்
நேற்று புதிய தலைமுறையில் விவாதத்தை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதிவின் தொடக்கத்திலேயே தமுமுக வைச் சேர்ந்த திரு.ஹாஜா கனி அவர்களுக்கும் எழுத்தாளர் திரு.பெருமாள் மணிகண்டன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த விவாதத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த நபர் இதுவரை நீங்களோ நானோ அறிந்திராத பல புதிய அரிய உண்மைகளை உளறிக்கொட்டினார்... ச்சே.. எடுத்துக்காட்டினார்.
" மாடு வேறு, பசு வேறு, மாடு என்றால் காளையைக் குறிக்கும், பசு எங்கள் கோமாதா. நாங்கள் மாட்டிறைச்சியை எதிர்க்கவில்லை, பசு மாட்டிறைச்சியை தான் எதிர்க்கிறோம். பசு புனிதமா, புனிதமில்லையா என்பதல்ல விவாதம். இந்தியாவில் பசுவதை தடைச்சட்டம் அமலில் உள்ளது. சட்டத்துக்கு விரோதமாக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்? மற்ற மதத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் செயல்பட்டால் எந்த பிரச்சனையுமில்லை"
இப்படியான அறிவாளிகளைவிட்டால் ஊடகங்களில் விவாதிக்க அந்த கட்சிகளில் வேறு யாரும் இல்லை போலும். விலங்குகளில் மாடுகளை மட்டும், இல்லையில்லை, பசுக்களை மட்டும் பாதுகாப்பதில்தான் எங்கள் மத தர்மமிருக்கிறது என்கிறார்கள் காவி டவுசர்கள்.
வேளாண்தொழில் பழகிய திராவிட மக்களுக்கு காளை முக்கிய விலங்காகவும் கால்நடை மேய்த்தலை முக்கிய தொழிலாக கொண்டிருந்த ஆரிய மக்களுக்கு பசு முக்கிய விலங்காகவும் இருந்தது. இந்து சட்டங்களை தொகுத்தளித்த மநு பற்பல குற்றங்களுக்கு தண்டனையாக பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பசுக்களை தானம் செய்யவேண்டும் என்று எழுதி வைத்திருப்பதும் நினைவுகூரத்தக்கது.
இப்படி பார்ப்பனர்களின் முக்கிய விலங்காக விளங்கிய பசு இன்று ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பொதுவான புனித அடையாளமாக திரித்து கூறப்படுவதை எந்த சாதி இந்துவும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. பண்டைய காலத்தில் ஆரியர்கள், திராவிடர்கள் உட்பட்ட அனைத்து மக்களுமே மாட்டிறைச்சியை விரும்பி உண்டதாகவே பல நூல்களின் மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.
வேத காலங்களில் தாங்கள் வழிபட்ட இந்திரன், வருணன், அக்கினி, பிரம்மன் முதலான கடவுள்களை புராணகாலச் சூழலில் கைவிட்ட பார்ப்பனர்கள், தங்கள் புது கடவுள்களை அறிமுகம் செய்கிற கதைகளில் மற்றொன்றையும் மறக்காமல் செய்தார்கள். ஏற்கனவே வேத காலத்தில் இருந்த கடவுள்கள் மேல் இழிகதைகளை சுமத்தி அவர்களை புறக்கணிக்க தக்க காரணங்களை படைத்ததே அது. இதன்படியே பிரம்மன் தன் சொந்த மகளுடன் புணர்ந்தவனாகவும் இந்திரன் அகலிகையோடு சல்லாபித்து உடல் முழுக்க ஆயிரம் பெண் குறிகள் தோன்றும்படியாக சாபம் பெற்றதாகவும் இழிகதைகள் புனையப்பட்டன. வேதங்கள் முழுவதுமே இந்திரனையும் அக்கினியையும் படைப்புக் கடவுளான பிரம்மனையும் புகழ்ந்து எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்க, தங்கள் சுயநலத்திற்காக, தங்களது கடவுளர்களை பற்றியே இழிகதைகளை எழுதிவைத்தவர்கள் தான் பார்ப்பனர்கள்.
புராண காலத்துக்கு பிந்தைய சூழலில் இந்து மதத்தின் சாதிய முறையையும் மூட நம்பிக்கைகளையும் உயிர்பலிகளையும் எதிர்த்து இயங்கிய சமண, பவுத்த இயக்கங்கள் கொல்லாமையை பெரிதும் வலியுறுத்தின. இந்து மதத்தின் அளவற்ற அநீதிப்போக்குகளால் நொறுக்கப்பட்டிருந்த மக்களுக்கு சமத்துவத்தையும் மனித உயிர்கள் மீதான பேரன்பையும் வலியுறுத்திய சமண, பவுத்த இயக்கங்களில்பால் பெரும்பான்மையான மக்கள் ஈர்க்கப்பட்ட பார்ப்பன மதத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
தங்களுக்கு விசுவாசமான அரசர்கள் மூலம் தங்களுக்கு எதிர்ப்பாய் எழுந்த சமணர்கள் மற்றும் பவுத்தர்களை கழுவேற்றி மிரட்டி பார்த்த பார்ப்பனர்களின் அடுத்தகட்ட ராஜதந்திரம் தான் இந்த பசு புனிதமான கதை. சமண மதக்கொள்கையான கொல்லாமையை தங்கள் பார்ப்பன மதத்துக்குள்ளும் புகுத்தினார்கள். பார்ப்பன மதத்தின் நீடித்த நிலைத்த தன்மைக்காக தாங்கள் இதுவரை ஆசைஆசையாக உண்ட மாடு முதலான இறைச்சிகளை கைவிட்டு, இதன் மூலம் மக்கள் பார்ப்பன மதத்திலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் இன்னொரு பரிமாணமாகத்தான் மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்ஜாதி என்றும் கட்டமைத்தார்கள்.
தங்களுக்கு வேண்டிய போது வேத கடவுள்களை புகழ்ந்து பாடிய பார்ப்பனர்கள் கால நகர்வில் எப்படி அக்கடவுளர்கள் மேல் இழிகதைகளை சுமத்தி தள்ளிவிட்டார்களோ, அப்படியே மாட்டிறைச்சியை விரும்பி உண்ட பார்ப்பனர்கள் சமண இயக்கம் உண்டாக்கிய போட்டியை சமாளிக்க மாட்டிறைச்சி உண்பவர்கள் கீழ்ஜாதி என்ற புனைவையும் கட்டமைத்தார்கள். எக்காலத்திலும் மாறாத இந்து மதம் பார்ப்பனர்கள் விருப்பப்பட்டால், அவர்களின் பொருளாதார நலனுக்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் மட்டும், உடனடியாக மாறிக்கொள்ள தயங்கியதேயில்லை.
இப்படி தங்களின் முக்கிய விலங்காக இருந்த பசுவின் மேல் மட்டும் பெருங்கருணைக்கொண்டு புனிதப்பட்டம் ஏற்றியவர்கள் வேத காலத்தில் தங்கள் விருப்புக்குரியதாய் இருந்து பின்பு தூக்கி எறியப்பட்ட கடவுளர்களின் லட்சுமியையும் முப்பது முக்கோடி தேவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, உங்களை பார்த்தால் பாவமாயிருக்கிறது, போனால் போகட்டும், நீங்கள் உங்களுக்குள் சண்டை போடாமல் பசுக்களில் வசித்துக்கொள்ளுங்கள், இன்னும் குறிப்பாக இந்திய எல்லையை தாண்டி விடாதீர்கள் என்றபடி நீண்டகால குத்தகைமுறைப்படி பசுவை இந்த கடவுளர்களுக்கு வாடகை விட்டார்கள்.
( டெயில் பீஸ் : தாங்கள் புனிதமாக கருதுகிற லட்சுமி என்ற பெண் கடவுள் பசுக்களில் குடியிருப்பதாக சொல்கிறவர்கள், அந்த லட்சுமி பெண் என்பதை நினைவில் கொண்டாவது எல்லா பசுக்களுக்கும் சட்டை தைத்து வழங்கலாம். அதுவுமல்லாமல் பெண் கடவுள் உள்ளே இருக்கிறார் என்ற கூச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் பசு மடியிலிருந்து பால் கறக்கிறார்கள். என்ன கொடுமை இது! காவி படையே பொங்கி எழு.. பெண் கடவுளின் மானத்தை, இந்து கலாச்சாரத்தை காக்க உன் நரம்புகள் புடைக்கவில்லையா? )

- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக