வியாழன், 8 அக்டோபர், 2015

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?

முதலீட்டாளர்கள் மாநாட்டை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சியா?
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகள் கட்டாயம் தேவை என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தங்கள் மாநிலத்திலுள்ள சாதக அம்சங்களை முதலீட்டாளர்களுக்கு விளக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த மாநாடு நடைபெற்ற காலமும் விதமும் அதன் நோக்கமும் தான் முகம் சுளிக்க வைக்கிறது.
ஆளும் அரசிற்கு உண்மையிலேயே மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை இருந்திருக்குமேயானால் ஆட்சிக்கு வந்த முதல் இரு ஆண்டுகளில் இப்படியான முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முதலீடுகளைப் பெற்று அடுத்த மூன்று ஆண்டுகளில் அழகான தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் நடந்தது என்ன?
முதல் சில ஆண்டுகளும் 110விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடுவதை மட்டுமே ஜெ தனது ஆட்சியின் முழுநேர வேலையாகக் கொண்டிருந்தார். அப்படி வெளியிடப்பட்ட அறிவிப்புகள் யாவும் கோப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றன. அடுத்த ஒரு வருட ஒ.பன்னீர்செல்வத்தின் ஆட்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கொட்டாவி விடக் கூட ஜெ கை காட்டினால்தான் ஆச்சு எனுமளவிற்கு பவ்ய பன்னீராக உலாவந்தார். பட்ஜெட் கூட்ட தொடர் கூட பத்திரிக்கைகள் காறி உமிழ்ந்த பிறகு தான் வேண்டா வெறுப்போடு கூட்டப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாத காரணத்தால் எல்லா துறைகளும் முற்றாகவே முடங்கி போயின.
அப்போதே நடக்க வேண்டி திட்டமிடப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஜெ மீண்டும் கோட்டை வந்த பின் நடத்த வசதியாக மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. குமாரசாமி கணக்கால் மீண்டும் கோட்டைக்கு வந்த ஜெ வின் உடல்நிலைப் பற்றி பல்வேறு யூக செய்திகள் வெளிவந்தன. அரசு சார்பிலேயே அவருக்கு உடல்நலம் சரியில்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.
மே மாதம் நடக்கவிருந்த மாநாடும் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவரின் உடல்நிலையை காரணம் காட்டாமல் மே மாத வெயில் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தான் கலைஞர் தனக்கேயுரிய பாணியில், மே மாதம் வெயிலடித்தால் செப்டம்பரில் மழையடிக்குமே என அப்போது கிண்டல் செய்திருந்தார்.
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்போது கூட்டப்பட்டிருக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டால் நமது மாநிலத்திற்கு என்ன பயன்? மாநாடு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அது நடைமுறைக்கு வரும்போதுதான் உண்மையான முதலீடு எவ்வளவு என்பது தெரியவரும். கிடப்பில் கிடக்கிற பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களே இதற்கு சாட்சி.
இனிமேல் ஆட்சி முடிவதற்கு முன் உடனடியாக எந்த முதலீடும் வர வாய்ப்பில்லை. முதலீட்டாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த சசிகலா தன்னிடமுள்ள கருப்பு பணத்தை தனது பினாமிகள் மூலம் கொட்டி தொழில் தொடங்கினால் தான் ஆச்சு. ஆனால் இந்த மாநாட்டை ஆட்சியின் தொடக்கத்தில் நடத்தியிருந்தால் இதன் பாதையே வேறு.
ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் இத்தனை லட்சம் கோடி முதலீடு என வெற்று பம்மாத்து காட்டி மக்கள் தலையில் மஞ்சள் அரைக்க மட்டும் தான் இந்த மாநாடு உதவும் . ஏதோ அதிமுக கட்சி மாநாடு போல கொடி தோரணங்களோடு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருப்பவர்களை நினைத்தால் ஒரு படத்தில் வடிவேலு தனது டவுசர் பாக்கெட்டுகளில் கைவிட்டு உள்துணியை இழுத்துக்காட்டி , ஒண்ணுமில்லையே என ஒய்யாரமாக நடந்து போகிற காட்சிதான் நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக