திங்கள், 15 டிசம்பர், 2014

சாதி ஒழிப்பும் சாதி வளர்ப்பும்



    சாதி ஒழிப்பும் சாதி வளர்ப்பும்

 சாதியை வளர்க்கிறதா சாதிச் சான்றிதழ்?

எது சாதியை ஒழிக்கக் கூடியதென அண்ணலும் இன்னும் பிற ஆன்றோரும் பரிந்துரைத்தார்களோ அதையே சாதி வளர்ப்புக்கான ஆயுதங்கள் போன்ற மாயை உருவாக்கி மக்களை திசை திருப்பக்கூடிய காரியங்களை பலர் செய்து வருகிறார்கள். நீங்களும் இந்த கேள்விகளை கடந்து வந்திருக்கக் கூடும் அல்லது உங்களுக்குள்ளேயும் இப்படியான கேள்விகள் எழுந்திருக்கக்கூடும். அவைகளை பொதுவெளியில் வைத்து விடை தேடல் அவசியமென்பதால் இந்த பதிவை தொடர்கிறேன்.
சாதிகள் ல்லையடி பாப்பா என்று புத்தகங்களில் போதித்துக்கொண்டே பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கப்போனால் முதல் வேலையாக சாதியையல்லவா கேட்கிறார்கள்? இப்படி பிஞ்சு மனதிலேயே சாதியை பதிய வைத்துவிட்டு பின்பு சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி? முதலில் பள்ளிகளில் சாதியை கேட்டு குறிப்பதை நிறுத்தவேண்டும். அப்போதுதான் சாதி ஒழிப்பு சாத்தியமாகும். இல்லையேல் ஒருபுறம் சாதியை வளர்த்துக்கொண்டே சாதி ஒழிப்பு பற்றியும் பேசுவதே இரட்டை வேடமல்லவா? இது முதல் கேள்வி.
கலப்பு திருமணம் செய்வதால் சாதியை ஒழித்து விடலாம் என்பதே சுத்த பித்தலாட்டம். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களும் கூட தங்கள் சாதியை தொடர்ந்து சாதிச் சான்றிதழ்களில் குறிக்கத்தானே செய்கிறார்கள்? அதுவுமல்லாமல் என்னதான் அவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களும் கூட தங்கள் பிள்ளைகளை தங்களின் சாதி அடையாளத்தோடல்லவா சாதிச் சான்றிதழ்களில் குறிக்கிறார்கள், பின்பு எப்படி சாதி ஒழியும்? சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் தங்களை சாதியற்றவர்களாக அறிவிக்காமல் தங்களின் சாதியை தங்கள் பிள்ளைகள் மேலும் திணிப்பதன் மூலம் சாதி வளர்ப்பையல்லவா செய்கிறார்கள்? பின் கலப்பு திருமணம் சாதியை எப்படி ஒழிக்கும்? இது இரண்டாவது கேள்வி.
வாருங்கள் , விடை தேடலாம்...


ஏதோ ஒரு நோயினால் உங்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? முதலில் ஒரு மருத்துவரை சென்று பார்ப்போமல்லவா? மருத்துவர் நமது உடல் நிலையை ஆராய்ந்து நமக்கு என்ன வகையான நோய், அதற்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆய்ந்தறிந்து அதற்குரிய மருந்துகளை பரிந்துரைச் சீட்டில் எழுதி தருகிறார். பின் நாம் அதை மருந்து கடையில் கொடுத்து உரிய மருந்துகளைப் பெற்று சிகிச்சையை தொடர்கிறோம்.
சில வகையான நோய்கள் உடனே குணமாகிவிடும். சிகிச்சையை அதன் பிறகு தொடர்வதற்கான எந்த தேவையுமில்லை. ஆனால் சில வகை நோய்கள் எளிதில் குணமாகக் கூடியவை அல்ல. அதற்கு நீண்ட சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் பராமரிப்பும் அவசியமாகிறது. சரி, இதை இப்படியே நிறுத்திவிட்டு இப்போது நமது கேள்விக்கான பதிலை தேடலாம்.
இந்த சமூகத்தை பீடித்திருக்கும் மிக கொடிய நோய் சாதி என்பதை சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த சாதி என்னும் கொடூர நோயால் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டு நசுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த சாதி நோயினால் பீடிக்கப்பட்டு முடக்கப்பட்டதையே அவர்களின் பலவீனமாக்கி அந்த குறிப்பிட்ட சமூக பிரிவினர்களின் அனைத்து வகையான செல்வங்களும் சூறையாடப்பட்டன. அவர்களின் பொருளுடைமைகள் வஞ்சிக்கப்பட்டு பறிக்கப்பட்டன. அவர்கள் அறிவுடைமையை அடைவதற்கே தகுதியற்றவர்களாக விரட்டியடிக்கப்பட்டார்கள். அவர்களின் நிழலும் தீட்டென கால்நடைகளை விடவும் கீழ்நிலைப் பிறவிகளாக புறந்தள்ளப்பட்டார்கள்.
இந்த சாதி ஆதிக்கச் சுரண்டலை எதிர்த்து வரலாறு நெடுகிலும் குரல் கொடுத்தவர்களும் அதற்காய் உயிர்விட்டவர்களும் ஏராளம், ஏராளம். ஆன்றோர் பலருடைய அயராத கோரிக்கைகள் மற்றும் தொடர் போராட்டங்களின் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடர் சாதிய வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளான மக்கள் தொகுப்பை கணக்கிட்டு பட்டியலினத்தவர்கள் என்ற சாதி தொகுப்பை உருவாக்கினர். இப்படியே பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற சாதி தொகுப்பும் உருவாக்கப்பட்டது. சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்களுடைய மறுக்கப்பட்ட உரிமைகளை சட்டரீதியாக அவர்களுக்கே திருப்பியளிக்கும் பொருட்டு இட ஒதுக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது.
சாதி என்பது சமூகத்தை பீடித்திருக்கும் மிக கொடிய நோய் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்குரிய சிகிச்சையும் மிக அவசியமல்லவா? அந்த சிகிச்சை தான் இட ஒதுக்கீடு. அதற்குரிய பரிந்துரைச் சீட்டு தான் சாதிச் சான்றிதழ்.
எப்படி ஒரு நோயாளியானவன் தகுந்த மருந்து சீட்டு இல்லாமல் சிகிச்சையை பெற முடியாதோ அதே போல சாதிச் சான்றிதழ் இல்லாமல் சாதி நோயை விரட்டுவதற்கான சிகிச்சையளிப்பதும் இயலாத விஷயம். நோயாளியானவன் தனக்கு என்ன வகையான நோய் என்பதை கண்டறியாமலேயே, அதற்குரிய சிகிச்சை முறைகளையும் நிறுத்திவிட்டாலே நோய் குணமாகிவிடுமென்பது அறிவுடைய செயல் ஆகுமா?
சாதிச்சான்றிதழ்களில் சாதியை குறிப்பிட்டால்தான் சமூகத்தில் அவர் இத்துணை ஆண்டுகாலமாய் எவ்வகையான சாதிய கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார் என்பதை அறிந்து அதற்கேற்ற இட ஒதுக்கீட்டு நிவாரணத்தை அளிக்க இயலும். அதை விடுத்து, இந்த சாதி நோயால் நீ பாதிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை சொல்வதால்தானே நோயை பற்றி மற்றவர்களுக்கு தெரிய வருகிறது, உனக்கு நோய் இருப்பதையே முற்றிலுமாக மறைத்துவிடு என்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

ஒருவன் குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட சிகிச்சை அவசியம் என்று உணர்ந்தோமல்லவா? ஆனால் சிகிச்சை அளிக்க வேண்டிய மருத்துவரே தவறான மருந்தை பரிந்துரைச் சீட்டில் எழுதி தந்தால் என்ன செய்வது? அல்லது உன்னிடம் நோய் இருந்தாலும், உன் வீட்டு பெரியோர்கள் நீ நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை ஒத்துக்கொள்வதில்லையே, அதனால் இந்த சிகிச்சையை உனக்களிப்பது இயலாத விஷயம் என்று ஒதுக்குதல் முறையாகுமா?
ஆனால் இங்கு இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி பேயினால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு கடித்து குதறப்பட்டு ஒன்றுமற்றவர்களாய் முடக்கப்பட்டவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்திற்கும் முஸ்லீம் மதத்திற்கும் மாறினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.
கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் சாதி பிரிவுகள் இல்லை என்பதால் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்குரிய இட ஒதுக்கீடூ மற்றும் அரசியல் சாசன பாதுகாப்புரிமையை பெற இயலாது என்று தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.
கிறிஸ்தவ மதத்தில் சாதி இல்லை என்று சொல்வதை யார் தான் நம்ப இயலும்? ஒரு ஊரில் ஒருவன் தொடர்ந்து மற்றவர்களால் கொடுமைக்குள்ளாகிறான் என்று வைத்துக் கொள்வோம். எல்லோரும் ஒன்றுசேர்ந்து அந்த குறிப்பிட்ட குடும்பத்தினனை தலைமுறை தோறும் கொடுமைப்படுத்தி அவனது உடைமைகளையெல்லாம் பறித்து கால் தூசியினும் இழிவாய் அவனை நடத்துகிறார்கள். இது இப்படியே தொடர்கதையாக, பக்கத்து ஊரில் இப்படியேதும் கொடுமைகள் இல்லை என்பதை அறிந்து அந்த குடும்பம் பக்கத்து ஊருக்கு இடம் பெயர்கிறது. இப்போது நீதி வழங்க வேண்டியவர், நீ தான் பக்கத்து ஊருக்கு போய் விட்டாயே, அதுவே உன் கொடுமைகளுக்கெல்லாம் நிவாரணம் தானே, அதனால் வேறு எந்த உரிமையையும் நீ கோர முடியாது என்பது ஏற்புடைய செயல் தானா?
அவன் இதுவரை அனுபவித்த கொடுமைகளுக்கும் இன்னல்களுக்கும் அவனது பறிக்கப்பட்ட உடைமைகளுக்கும் என்ன தான் தீர்வு? ஆனால் அரசாங்கமோ , அதுவும் ஜனநாயக மதச்சார்பற்ற என்று பிரகடனப்படுத்திக்கொள்கிற நாட்டினுடைய அரசாங்கமோ , கிறிஸ்தவர்களின் சாதிச் சான்றிதழ்களில் அவர்களை மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் என்று குறிப்பிட்டு அவர்களை பிற்படுத்தப்பட்டவர்களாய் இணைக்கிறது.
உண்மையில் இந்திய சமூகத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த மதத்திற்கு மாறினாலும், என்ன பொருள் படைத்தாலும் அவனது தாழ்த்தப்பட்ட முத்திரையானது இறப்பு வரையிலும், ஏன் இறப்புக்கு பின்னுமேயும் மாறுவதே இல்லை. நாடார் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி, வன்னியக் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள தொகுதி என்பதையெல்லாம் யூகித்து அதற்கேற்ப தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்தல்களில் நிறுத்துகிற அரசியல் கட்சிகள், சாதிச் சான்றிதழ் அல்லது இட ஒதுக்கீடு என்ற பேச்சு வரும்போது மட்டும், கிறிஸ்தவத்தில் தான் சாதி இல்லையே என பெருச்சாளியை புளிச்சோற்று மூட்டைக்குள் அடைத்து நமட்டு சிரிப்பு பூக்கிறார்கள்.
இதனால் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது மட்டும் இங்கே முக்கிய அம்சம் அல்ல, ஆதி திராவிடர்கள் என்ற வகையில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாதுகாப்பையும் அவர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது.
உதாராணமாக ஒரு இந்து தாழ்த்தப்பட்டவரின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டாலோ, வன்முறை தாக்குதல்களுக்குள்ளானாலோ, சாதிரீதியாக இழிவுப்படுத்தப்பட்டாலோ, அவரால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கான பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்ய முடியும். ஆனால் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கு இந்த வாய்ப்பானது இல்லவே இல்லையென மறுக்கப்படுகிறது.
இப்படியாக சமூக ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாக எல்லா நிலைகளிலும் தொடர்ந்தாலும் கூட அரசாங்க பதிவேடுகளில் மட்டும் பிற்படுத்தப்பட்டவர்களாகி இருபுறமும் வஞ்சிப்பிற்குள்ளாகிற பரிதாபத்திற்குரியவர்களாய் தொடர்கிறார்கள் கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள்.
ஆக , உண்மையான சாதி ஒழிப்பு நிகழ வேண்டுமெனில் சாதிச் சான்றிதழ்களில் கிறிஸ்தவ ஆதி திராவிடர்கள் பட்டியலின பிரிவினராக அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்படி சாதி நோய்க்கான சிகிச்சையை முறைப்படுத்த வேண்டுமேயொழிய, சிகிச்சையே தேவை இல்லை, எல்லோரும் நோய் குணமாகிவிட்டதென மனப்பால் குடியுங்கள் என்று சொல்பவர்களை என்ன சொல்வது?


பள்ளியில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது என்று ஆதங்கப்படுபவர்களின் நோக்கம் உண்மையிலேயே சாதி ஒழிப்பாக இல்லை. சாதியைவெல்லாம் ஒழிக்க முடியாதுங்க என்று ஸ்டேட்மெண்ட் விடுபவர்களின் நோக்கம் எப்படி சாதி ஒழிந்துவிடக் கூடாது என்பதையே உள்ளார்ந்த படிமமாக கொண்டிருக்கிறதோ, அப்படியே பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்பதால் சாதி வளர்கிறதென அங்கலாய்ப்பவர்களின் நிலையும்.
பள்ளியில் சாதிச் சான்றிதழ் கேட்பது அவர்களை சாதி ரீதியாக அடையாளப்படுத்தவோ, பாகுபாடு காட்டவோ அல்லது சாதி அடையாளம் மறைந்துவிடாமல் நீடித்து நிலைத்து நிற்கவோ அல்ல. எந்த சாதியின் பெயரால் ஒடுக்கி நசுக்கப்பட்டார்களோ அதே சாதியின் பெயரால் அவர்களுக்கு நிவாரணமும் அளிக்க வேண்டியது ஜனநாயக அரசின் கடமையாகும். எனவே சாதி சான்றிதழ் தான் மாணவர்கள் மனதில் சாதியை பதியவைக்கிறது என்பது அப்பட்டமான பொய் கூற்றாகும்.
பள்ளி பருவ காலங்களில் ஒத்த மனதோடு ஒன்றாக விளையாடி திரிபவர்கள், அதற்கு பின்னான காலங்களில் எதிரெதிர் துருவங்களாய் சாதிய வன்மத்தோடு அலைந்து திரிவதை கண்கூடாக பல நிகழ்வுகளில் கண்டிருக்கிறோம். அப்போது யார் அவர்களுக்கு சாதிச் சான்றிதழைக் காட்டி சாதியை நினைவூட்டியது? யார் அல்லது எது அவர்களுக்கு சாதி வெறியூட்டியது? பள்ளி சேர்க்கையின் போது கேட்கப்படுகிற சாதி குறிப்பா? இல்லை வேறு ஏதேனுமிருக்கலாமா? அந்த வேறு ஏதேனும் என்பது யார் அல்லது எது? இந்த கேள்விக்கான விடைகளை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
சரி, சாதி ஒழிப்பை பற்றி பேசுபவர்களெல்லாம் கலப்பு திருமணம்தான் சாதியை ஒழிக்கும் தீர்வு என்று கூறுகிறார்களே, உண்மையிலேயே கலப்பு திருமணம் சாதியை ஒழிக்குமா? இல்லை வளர்க்குமா?


கலப்பு திருமணம் சாதியை ஒழிக்கிறதா? வளர்க்கிறதா?

இப்பலாம் யாருங்க சாதி பார்க்குறா? - உங்களுக்கெல்லாம் மிகவும் பழக்கமான டயலாக் தானே இது? இதை கேட்கும்போது உங்களுக்குள் என்ன தோன்றும்?
உண்மையிலேயே இப்போது யாரும் சாதி பார்ப்பதில்லையா? காலம் மாறிவிட்டதா? முகநூலில் என்னோடு பழகிய தோழி ஒருத்தி ஒருமுறை, நான் கூட பிராமணச்சி தான், உன்னோடெல்லாம் பேசவில்லையா? என்று கேட்டார். இந்த வார்த்தை உங்களுக்கு அவரின் சமத்துவம் விரும்பும் மனதை எடுத்துக்காட்டுவது ோல தோன்றலாம். ஆனால் 'உன்னோடெல்லாம் ' என்பதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? நான் உசந்த சாதியான பிராமணச்சியாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த உன்னோடெல்லாம் பேசுகிறேனே என்ற சாதி திமிர் வெளிப்படவில்லையா?
யாதவர் திருமண தகவல் நிலையம், பறையர் திருமண தகவல் நிலையம், வன்னியர் திருமண தகவல் நிலையம் என சாதிக்கொன்றாய் முளைத்துக் கிடக்கிறதே , ஏன்? இல்லாத சாதிக்காகவா இவையெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன?
பிராமணர்களுக்கு மட்டும் வீடு வாடகைக்கு விடப்படும் என விளம்பரங்கள் வெளிவருகிறதே, எதனால்? ஆம், சாதி இன்னும் அதன் வீரியத்தை இழந்துவிடாமலிருப்பதை தான் அவ்வப்போது அரங்கேறிவரும் சாதிய படுகொலைகளும் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
ஆனால் இப்படியான சாதிய படுகொலைகளே கலப்பு திருமணங்கள் செய்வதால்தானே நிகழ்கிறது, இது எப்படி சாதியை ஒழிக்கும்? அப்படியே சாதிய படுகொலைகளுக்கு தப்பி கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களும் தொடர்ந்து சாதி சான்றிதழ்களில் தங்களின் சாதியை குறிப்பிடுவதில்லையா? அவர்களின் பிள்ளைகள் சாதியற்றவர்களாகவா வளர்க்கப்படுகிறார்கள்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடலாம் வாருங்கள்..

' இப்போலாம் யாருங்க சாதி பார்க்குறா? எங்கயாச்சும் ஒண்ணு ரெண்டு பேர் பார்க்கலாம்.. காலப் போக்குல அதுவும் மாறிடும்.. யாரோ ஒண்ணு ரெண்டு பேர் பண்றதையெல்லாம் பெரிய விஷயமாக்காதிங்க.. '
' ச்சும்மா பேசிட்டு திரியறதால என்ன ஆகப் போகுது? சாதி ஒழியாது.. அதையெல்லாம் யாராலயும் அழிக்க முடியாது. பெரியார், அம்பேத்கர் லாம் சாதியை ஒழிக்கப் போறேன்னு சொன்னாங்க.. சாதி ஒழிஞ்சுடுச்சா, என்ன? '
சாதி ஒழிப்பு குறித்த விவாதங்களில் மேற்கண்ட இந்த வார்த்தைகளை கேட்டு கேட்டு எனக்கு புளித்துப் போய்விட்டது. ' இப்போலாம் யாருங்க சாதி பார்க்குறா? ' என்பவர்களின் பிரதான நோக்கமானது சாதியவாதிகளுக்கு ஒத்தூதுவதாகவே இருக்கிறது. நாளொருபொழுதாய் சாதிய வன்முறைகள் மற்றும் படுகொலைகள் குறித்த செய்திகளை கண்டபின்னும் இப்படி இவர்கள் கூறுவது தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள மட்டுமே..
நான் ஏற்கனவே விவரித்திருந்தபடி நான் பிராமணச்சியாக இருந்தாலும் உன்னோடு பேசவில்லையா என்ற பெண்மணியின் பேச்சில் எப்படி தனது சாதி குறித்த திமிரும் தன்னை மிக நல்லவராக காட்டிக்கொள்கிற முனைப்பும் தெரிந்ததோ, அப்படி இருக்கின்ற சாதியை இல்லையென பூசி மெழுகுவதிலும் தன்னை நல்லவராக காட்டிக்கொள்கிற யுக்தி மட்டுமே தெரிகிறது.
அடுத்ததாக, சாதியை ஒழிக்க முடியாது என்பவர்களின் கூற்றும் விரக்தியினால் வெளிப்படுவதாக பெரும்பாலும் இருப்பதில்லை. சாதி அழிந்துவிடக்கூடாது என்ற ஆசையும் பதற்றமுமே அவர்களிடத்தில் காண முடிவதாய் இருக்கிறது.
ஆக, சாதி ஒழிப்பை முன்னெடுக்க விரும்புபவர்களுக்கு தற்போது இருக்க கூடிய ஒரே தீர்வாய் இருப்பது சாதி மறுப்பு திருமணங்கள் தான். பெரும்பாலும் சாதிய பெருமை பேசுகிற பெற்றோர்கள் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிப்பது இல்லை. ஆகவே தான் காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று சாதி ஒழிப்பில் அக்கறையுள்ளவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
சாதி மறுப்பு திருமணங்கள் செய்த பின்னும் அவர்களின் சாதியைத்தானே சான்றிதழ்களில் குறிப்பிடுகிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் காதல் திருமணங்களால் சாதி ஒழிவதில்லை. மாறாக ஆண்வழி சாதிய சமூகத்தை வளர்ப்பதற்கே அது பெரிதும் துணை செய்யும் என்பது உண்மையா? எனில் அதற்கு தீர்வுதான் என்ன?

RSS பற்றி அம்பேத்கர் கருத்து: "
இவர்கள் நாவிலே இராமனையும்,
கைகளிலே கூர்வாளையும்
வைத்திருப்பார்கள். யோக்கியர்களைப்
போன்று பேசுவார்கள் ஆனால்
கொலைகாரர்களாக
நடந்து கொள்வார்கள். கடவுள்
எங்கும் நிறைந்திருக்கிறான்
என்பார்கள், ஆனால் விலங்கினும்
கேவலமாய்
மனிதனை நடத்துவார்கள்.
இவர்களுடன் சேராதீர்கள்.
எறும்பிற்கு சர்க்கரையை உணவாய்
இடுவார்கள்,ஆனால் மனிதர்கள்
தண்ணீர் குடிக்க தடை விதிப்பார்கள்"
மேற்கண்ட இந்த கருத்தை சில தினங்களுக்கு முன் முகநூலில் தோழர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் அவர்கள் பகிர்ந்திருந்தார். உண்மையில் இது இன்றைய சூழலில் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதல்ல. ஒரு பக்கம் கல்வியில் வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்போடு பொருளாதார நிறைவை நோக்கிய மக்கள் திரள்; மறுபக்கம் அதற்கு முற்றிலும் முரணாக தனது சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் இழிவானவர்களாக எண்ணி ஒதுக்கி தள்ளுகிற காட்டுமிராண்டிகளின் எண்ணிக்கையும் அசுர அளவில் வளர்ச்சியடைந்து அதிர்ச்சியூட்டுகிறது.
நான் திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்கு நெருங்கிய தோழனென்றால் அது சங்கர் தான். மாதத்தின் எல்லா சுபதினங்களையும் நடமாடும் காலண்டராய் நினைவில் வைத்து கோயில்களுக்கு செல்ல ஒருநாளும் மறந்ததேயில்லை. நானும் சங்கரோடு சேர்த்து ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்கோயில், தெப்பக்குளம், உச்சிப்பிள்ளையார் என சுற்றாத இடங்களே இல்லை.
ஒருமுறை அவன் என்னை தனது வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தான். வீட்டு முற்றத்தில் என்னை நிற்கவைத்துவிட்டு உள்ளே சென்றவனிடம், அவன் அம்மா கேட்ட முதல் கேள்வி, அந்த பையன் என்ன சாதி என்பது தான். என்னை அந்த அம்மா வீட்டிற்குள்ளேயே நுழையவிடவில்லை. அப்படியே திருப்பி அனுப்பினார்கள். நான் விடுதிக்கு திரும்பியபோது நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல்.
இது ஒரு சின்ன உதாரணம் தான். அன்றைய என் தூக்கத்தை பறித்த அந்த சாதிய இழிவு இன்றும் என் நெஞ்சில் அனலாய் கொதித்துக்கொண்டேயிருக்கிறது. இப்படியான சாதி இழிவுகள் முற்றிலுமாக அழிக்கமுடியாவிட்டாலும் அதன் வீச்சையேனும் குறைக்க மனித பண்புள்ளவராய் தன்னை உணர்கிற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமல்லவா?
மனித இனத்தை சேர்ந்த ஒருவர் மற்ற ஏதோ ஒரு விலங்கினத்தை திருமணம் செய்ய நேரிடுமானால் அதை கலப்பு திருமணம் எனலாம். ஆனால் மனித இனத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை கலப்பு திருமணம் என்பதே பொருந்தாத ஒன்றில்லையா? ஆக அதை சாதி மறுப்பு திருமணம் என்பதுதானே சரி.
சாதி மறுப்பு திருமணங்களால் அன்றி வேறு எதனாலும் சாதியை ஒழிக்கவோ, அதன் வீச்சை குறைக்கவோ முடியாதென்பதே திண்ணம். ஆனால் சாதி மறுப்பு திருமணங்கள் குறிந்து பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலானவதாக கேட்கப்படுவது, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏதேனும் ஒரு சாதியோடு அடையாளப்படுத்திதானே வளர்க்கிறார்கள், அதனால் சாதி மறுப்பு திருமணமென்பதே வீண் வேலை தானே என்பது.
சாதி மறுப்பு திருமணங்கள் பெரும்பாலும் எதிர்ப்பிற்குள்ளாவது ஆண் தாழ்ந்த சாதியாகவும், பெண் உயர்ந்த சாதியாகவும் இருக்கும் போதுதான். ஏனெனில் ஆண் உயர்ந்த சாதியாக இருக்கிற பட்சத்தில் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்து கொள்வதைப்பற்றி ஆதிக்க சாதியினர் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஏனென்றால் சாதி மறுப்பு திருமணம் செய்தாலும் கூட அவனது பிள்ளைகள் அவனுடைய ஆதிக்க சாதியின் தொடர்ச்சியாகத்தான் சமூகத்தால் பார்க்கப்படும். ஆனால் பெண் உயர்ந்த சாதியாக இருக்கிறபட்சத்தில் இந்த நிலை அப்படியே தலைகீழ். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஆணினுடைய சாதியின் தொடர்ச்சியாகவே அவனது பிள்ளைகள் சமூகத்தால் பார்க்கப்படுவதால் ஒரு தாழ்த்தப்பட்டவனின் தொடர்ச்சியாக தனது பெண்ணின் வாரிசுகள் இருக்கும் நிலையை ஆதிக்க சாதிகள் ஏற்பதே இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் பல்வேறு சாதியப்படுகொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

ஒரு கொடிய நச்சு பாம்பு உங்கள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். அந்த பாம்பை எப்பாடு பட்டாவது அடித்து கொன்றுவிட நீங்கள் முயற்சிப்பீர்களா, இல்லையா? மாறாக, அந்த பாம்பை அடிக்காதீர்கள், அது விஷப் பாம்பு, ஏற்கனவே தன்னை அடிக்க முயன்ற பலரை விஷக் கங்கு கக்கி சாகடித்திருக்கிறது, நீங்கள் அடிக்க போவதால்தானே இப்படி நிகழ்கிறது. அது விஷ பாம்பு என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அதை அப்படியே விட்டுவிடுவதே உத்தமம் என ஒருவர் உங்களுக்கு அறிவுறுத்தினால்...?
அந்த பாம்பினால் நாம் கடிபட்டு இறந்துவிடக்கூடாதென்பதை விட, அந்த விஷப் பாம்பு செத்து விடாமல் காலம் முழுக்க நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்ற வக்கிர சிந்தனை அவருக்குள் ஒளிந்து கிடப்பதை சற்று நிதானித்து யோசித்தால் எளிதில் புரியும். ஏனென்றால் உண்மையில் அந்த விஷப் பாம்பினால் உங்களுக்கு ஆபத்து என உங்களுக்காய் அக்கறை கொள்பவர்கள் உங்களோடு சேர்ந்தல்லவா அந்த கொடிய நச்சுப் பாம்பை ஒழிப்பதில் முனைப்பு காட்டி இருக்க வேண்டும்? ஆனால் அப்படி செய்யவில்லையே, ஏன்?
கலப்பு திருமணங்களினால் சாதிய படுகொலைகள் அதிகரிக்கின்றன. எனவே கலப்பு திருமணங்களை ஆதரிப்பது நல்லதல்ல என்பவர்களின் வாதமும் இப்படித்தான். ஏனென்றால் இவர்களின் உள்ளார்ந்த நோக்கும் விருப்பமும் சாதிய வளர்ப்புதானே ஒழிய, சாதிய ஒழிப்பு அல்ல.
அடுத்ததாக, கலப்பு திருமணங்களின் பின்பும் அவர்களின் சாதியை குறிப்பது குறிப்பது பற்றியான கேள்வி. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இருவரின் தவறு என்று முடிவெய்துவதைவிட, அரசின் கொள்கை முடிவுகளிலான தவறான போக்கு என்பதையே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் கலப்பு திருமணம் / சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச உதவி தொகை என்பதோடு அரசு தனது கடமையை முடித்துக் கொள்கிறது. அதன் பின்பு அவர்களின் நல்லெண்ண செயல் எந்த வடிவத்திலும் அங்கீகரிக்கப்படுவதோ அல்லது பாராட்டிற்குள்ளாவதோ இல்லை.
இப்போதுள்ள நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் தங்களை சாதியற்றவர்களாக அறிவித்தால் பொது பிரிவினராகிவிடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் அரசின் எந்த சலூகைக்கும் உரியவர்கள் அல்ல. இது ஏறத்தாழ ஏற்கெனவே இந்த பதிவில் சுட்டிக்காட்டிய கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு அரசின் சலூகைகள் இல்லை என்ற வஞ்சிப்பினை ஒத்த செயலாகும்.
எப்படி மதமாற்றம் நிகழ்ந்ததென்பதாலேயே அவர்களுக்கு கடந்தகாலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நிவாரணமாகிவிட்டதென அரசு ஒதுங்கிவிட முடியாதோ, அப்படியே கலப்பு திருமணம் / சாதி மறுப்பு திருமணம் செய்ததாலேயே அவர்கள் பொது பிரிவினராகி விட்டார்கள், அவர்கள் இனியும் எந்த சலூகைக்கும் உரியவர்கள் அல்ல என்பதாக அரசு கருதக்கூடிய போக்கையும் பார்க்க வேண்டும்.
ஒரு தனி நபர் தனக்கு பிடித்தமான மதத்திற்கு மாறுவதோ அல்லது தனக்கு பிடித்தமான ஆணையோ/பெண்ணையோ திருமணம் செய்து கொள்வதோ அரசியல் சாசனம் அவருக்கு அளித்துள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால் ஒரு தனி நபர் அந்த அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார் என்பதினாலேயே அவர் அரசு தனக்கு நியாயமாக வழங்க வேண்டிய உரிமைகளையும் சலூகைகளையும் பாதுகாப்பையும் பெற தகுதியற்றவராகிறார் என அவரை அரசே வஞ்சிப்பது எவ்வகையில் நியாயமான செயலாக முடியும்?
ஆண்வழி சாதி சமூகம் தொடர்கிறதென்பதும் இப்படியான அரசின் தவறான கொள்கை முனைப்பினாலேயாகும். இன்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அல்லது பொதுவான எந்த அரசியல் கட்சியானாலும் சரி, சாதி, மதம் இவற்றை அடிப்படையாக வைத்தே தங்கள் அரசியலை அமைக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சாதி ஒழிப்பை முன்னெடுப்பவர்களாக இல்லை என்பது வேதனை தரும் உண்மை. மக்கள் சாதி மற்றும் மதத்தினால் பிரிந்து கிடப்பதையே தங்கள் அரசியலுக்கு மிக வசதியானதாக கருதுவதால் மக்கள் ஒன்றுபடுவதற்கான வாய்ப்புகள் உருவாவதை விரும்புவதில்லை. சாதி மறுப்பு திருமணங்கள் செய்பவர்களை அரசு ஊக்குவித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பணி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரும்பாலும் பெற்றோரை எதிர்த்தே சாதி மறுப்பு திருமணங்கள் செய்ய வேண்டி இருப்பதால், பதிவு திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் தேவை என்று எழுகிற சாதிய வன்ம கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க கூடாது. சாதிய படுகொலைகளை இனியும் கௌரவ படுகொலைகளெனும் பூச்சோடு அலங்கரிக்கும் வேலையை செய்யாமல் அப்படியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் அதிகபட்ச தண்டனையை அரசு உறுதி செய்ய வேண்டும். இப்படியான சாதிய படுகொலைகளை தூண்டிவிடும் அல்லது பின்னின்று இயக்கும் தனிநபர் , அமைப்பு மற்றும் அரசியல்கட்சிகளும் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு அரசின் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கி அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அரசு மிக தீவிரமான சாதி ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். சாதி என்பது அருவருக்கத்தக்க அடையாளம் என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
இவையெல்லாம் தான் சாதி ஒழிப்பிற்கு உண்மையாக முன்னெடுக்க வேண்டிய விஷயங்களே அன்றி, சாதி சான்றிதழ் கூடாது, சாதிமறுப்பு திருமணம் கூடாது என்பதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் சமநிலை அடைந்துவிடக்கூடாது என்ற விஷத்தை நெஞ்சில் சுமந்தபடி வெளியில் தேனொழுக உதிர்க்கின்ற வார்த்தைகளே என்பதை மனித நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் உணர வேண்டும்.


-          LEO JOSEPH D
-          dleokommedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக