ஞாயிறு, 4 ஜனவரி, 2015

தமிழ் தேசியம்

இலக்கண நூல்களும் அறிவுஜீவிகளும் தேசியத்திற்கு கொடுத்துள்ள வரையறைகள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாது அது நடைமுறையில் எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்படுகிறது என்பதையே முதன்மையாக கொண்டுப் பார்த்தால்,
தேசியம் என்படுவதை " எந்த ஒரு பொது அடையாளத்தின் பொருட்டு ஒரு மக்கள்திரள் பெருமையடைகிறதோ அல்லது எது ஒன்றின் பெயரால் மக்களை ஒரு அரசியல் சக்தியாக திரட்ட முடிகின்றதோ அல்லது எது ஒன்றினால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகிறதோ அல்லது அவமதிக்கப்படுகிறதோ, அந்த மக்கள் திரளின் கூட்டு அடையாளமே தேசியம் " எனலாம்.


“ஒரு தேசிய இனம்
தேசியத்தை உருவாக்குவதில்லை.
மாறாக, ஒரு தேசியமே தேசிய
இனத்தை உருவாக்குகின்றது.”

சரித்திரவியலாளர் Eric Hobsbawm
பெரும்பாலும் தேசம், தேசியம், இனம், தேசிய இனம் இவைகளெல்லாம் ஒன்றையே குறிக்கும் சொற்களாகத்தான் பலராலும் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. தேசம் என்பதும் தேசியம் என்பதும் முற்றிலும் வேறு.
உதாரணமாக இந்திய தேசத்திற்குள்ளேயே பலவகையான தேசியங்கள் உள்ளன. இந்திய தேசியம், தமிழ் தேசியம், தலித் தேசியம், சிங்கள தேசியம் போன்ற வார்த்தைகள் நாம் அறிந்த சில.
இனம் என்பது ஒரு குழு அல்லது வகுப்பைச் சார்ந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. அது பழங்காலத்தில் பெரும்பாலும் மதம், சாதி ஆகியவற்றையே சார்ந்திருந்தது.
இன்னும் சொல்லப் போனால் சில நூறு வருடங்களுக்கு முன் தேசியம் என்ற வார்த்தையே பொதுவான பயன்பாட்டில் இல்லை. சர்வாதிகார அரசுகளுக்கெதிராக மக்கள் பெரும் திரளாக இணைந்து போராட ஆரம்பித்ததையே தேசியம் என்பதன் தொடக்கம் எனலாம்.

தேசியம் என்ற சொல்லைப் போல் குழப்பம்தரும் வரையறைகள் கொண்ட சொல்லை தமிழ்மக்கள் கண்டதே இல்லையோ என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு குழப்பமிகு வரையறைகள் இங்கு நிறையவே உண்டு. கம்யூனிசம் எவ்வாறு 'அறிவுஜீவிகளால்' குழப்படிக்கப்பட்டதோ அதே போல தான் தேசியமும்.
மக்கள் ஒன்றாக இணைந்து தேசியத்தை அமைப்பதில்லை. தேசிய உணர்வே மக்களை இணைக்கிறது. அதாவது தாம் எல்லாம் ஒரு குழு என்ற அடிப்படையில் மக்கள் ஒருங்கிணைகிறார்கள்.
இந்து தேசியம் - நாம் எல்லாரும் இந்துக்கள்
இந்திய தேசியம் - நாம் எல்லாரும் இந்தியர்கள்
தமிழ் தேசியம் - நாம் எல்லாரும் தமிழர்கள்
தலித் தேசியம் - நாம் எல்லாரும் ஒடுக்கப்பட்டவர்கள்.
இப்படி ஒத்த சிந்தனைக்குள் ஒரு குறிப்பிட்ட மக்கள் திரளை ஒருங்கிணைப்பதே தேசியம் எனப்படுகிறது.

தேசியம் என்பது கீழ்க்கண்ட கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென பல்வேறு ஆய்வியல்நோக்கர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
* பொது மொழி
* பொது பண்பாடு
* பொது கலாச்சாரம்
* சேர்ந்தாற்போன்ற நில அமைப்பு
* பொது உளவியல் கட்டமைப்பு
இந்த அம்சங்களின் வழியாகவே ஒரு தேசியத்தை கட்டமைக்க முடியும் என்று கூறப்படுகிறது. நாமும் இந்த அம்சங்களை பொருத்தியே இந்து தேசியத்தையும் தமிழ் தேசியத்தையும் அலசிப் பார்க்கலாம்.
அதற்கு முன் ஒன்று, தேசியம் என்ற கருத்தாக்கம் யாருக்கு பயனளிக்க கூடியதாக இருக்கிறது ? தேசியம் என்ற கட்டமைப்பு ஆளும் வர்க்கத்திற்கு துணைபோவதாகவே இருக்கிறது.
மக்கள் எல்லோரையும் தேசியம் என்ற புள்ளியில் இணைத்து, அவர்கள் வேறு எந்த பிரச்சினையிலும் கவனம் செலுத்திவிடாதபடிக்கு மக்களை மழுங்கடிக்கவே தேசியம் என்ற ஆயுதம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத உணர்வை இந்திய தேசியமாகவும் சாதி வகுப்புணர்வை தமிழ் தேசியமாகவும் இவர்கள் உருவகப்படுத்த முடிவதற்கான காரணம், தேசியம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான , உணர்ச்சி அரசியலாகவே இருப்பதே. அதை அறிவுபூர்வமாக அணுகுவது குறித்து இங்கு யாருக்கும் சிரத்தையேயில்லை.

தமிழ்தேசியத்திற்கான தெளிவுப்பெற்ற வரையறைகள் எதுவும் காணப்படவில்லை அல்லது தேசியம் குறித்த பொதுவான வரையறைகளுடன் தமிழ்தேசியம் ஒத்துப்போகவில்லை என கருத வேண்டி இருக்கிறது.
தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து தமிழ்தேசியம் அமைப்பதே இதன் அடித்தளமாக இருக்கிறது. இதன்படி பார்க்கினும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில் தேசியம் என்ற கருத்துநிலையிலிருந்தே தேசிய இனம் உருவாக முடியும். ஆனால் மக்களை ஒன்றிணைத்து பின் தேசியம் அமைப்பதான தலைகீழ் வேலையை செய்கிறார்கள்.
தேசியம் குறித்த வரையறையில் முதலானவதாக வருவது பொது மொழி. இதன்படி பார்த்தால் தமிழ்மொழி பேசும் அனைவரும் தமிழ்தேசியத்திற்குள் வர வேண்டும். ஆனால் தமிழ் தேசியத்தின் கருத்துருவாக்கம் ஈழம் மற்றும் தமிழகப் பகுதியோடு சுருங்கிவிடுகிறது. மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்கள் குறித்த எந்த பிரக்ஞையும் தமிழ்தேசியவாதிகளிடம் இருக்கவில்லை.

தேசியம் குறித்த வரையறையில் அடுத்து வருவது பொது பண்பாடு மற்றும் பொது கலாச்சாரம். தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரும் பொதுவான பண்பாடோ, கலாச்சாரமோ கொண்டவர்கள் அல்ல. தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் மக்கள் பல குழுக்களாக, வகுப்புகளாக பிரிந்தே இருக்கிறார்கள்.
மக்களின் பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது அவர்களின் சாதி, வட்டாரம் மற்றும் மதத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. பல்வேறு சாதியினரும் மதத்தினரும் வட்டாரக்குழுவினரும் வசிக்கும் சூழலில் ஒரே பண்பாடு, கலாச்சாரம் என்பதே சாத்தியமற்றதாகிவிடுகிறது.
ஒவ்வொரு சாதிக்குழுவும் தனக்கென ஒரு கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. அந்த சாதி குழுக்களிலும் வட்டாரங்களுக்கேற்ப இந்த கலாச்சாரம் வேறுபடுகிறது. ஆக தமிழ்தேசியத்திற்கான பொது பண்பாடு மற்றும் கலாச்சாரமாக அதாவது தமிழர் பண்பாடு மற்றும் தமிர் கலாச்சாரமென தமிழ்தேசியவாதிகள் எதை முன்னிறுத்த முடியும் என்பது கேள்வி.
ஈழத்தையும் தமிழ்தேசியத்திற்குள் உள்ளடக்கி பார்த்தால் இந்த பொது பண்பாடு மற்றும் பொது கலாச்சாரமென்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட சாதியினரின், வகுப்பினரின், மதத்தினரின் , வட்டார மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை ஒட்டு மொத்த மக்களுக்குமான பண்பாடு அல்லது கலாச்சாரமாக உருவகப்படுத்துவதையே தமிழ்தேசிய கருத்துருவாக்கம் செய்து வருகிறது.

தேசியம் என்பதற்கான அடுத்த வரையறை சேர்ந்தாற் போன்ற நிலப்பரப்பு. தமிழ் தேசியம் என்பது தமிழகம் மற்றும் ஈழம் இரண்டையும் உள்ளடக்கியது என்கையில் சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு எவ்வகையில் சாத்தியமாகும்? ஈழம் மலர்ந்தால் இங்குள்ள தமிழர்களெல்லாம் அங்கு அழைத்துக்கொள்ளப்படுவார்களா என்ன? அல்லது இங்கு தான் தமிழ்தேசியம் அமைத்த மொத்த தமிழர்களையும் இட்டுக்கொள்வார்களா?
கடைசியான ஒன்று பொதுவான பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினால் கட்டமைக்கப்பட்ட பொது உளவியல். இங்குபொதுவான பண்பாடு மற்றும் கலாச்சாரமே இல்லை எனும் போது பொது உளவியல் மட்டும் எப்படி சாத்தியமாகும்? ஒவ்வொரு மக்கள் குழுவும் வேறுபட்ட கலாச்சார மற்றும் பொருளாதார பின்னனியைக் கொண்டவர்கள். வேறு வேறான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள்.
தமிழகத்தில் இருப்பவர்களும் ஈழத்தில் இருப்பவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றல்ல. தமிழகத்திலேயே ஆதிக்க சாதியினரும் ஒடுக்கப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முற்றிலும் வேறானவை. அவர்களின் சூழலை பொருத்தே உளவியல் கட்டமைக்கப்படுமென்பதால் பொது உளவியல் என்பதும் பேச்சளவிலான கருத்துருதான் என்பது புலனாகிறது.

இந்திய தேசியம் எனப்படுவதன் ஒரே சாதகமான அம்சம் சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு மட்டுமே. ஆனால் அந்த சேர்ந்தாற்போன்ற நிலப்பரப்பு மட்டுமே ஒரு தேசியத்தை கட்டமைப்பதற்கு போதுமானதாக இல்லை. ஏனென்றால் இந்திய தேசம் என்பதே பல இனங்களை, குழுக்களை, பன்மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய ஒன்று. இந்திய தேசம் என்கிற கட்டமைப்பு ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷாருக்கு முன் பல அரசர்கள் படையெடுத்து வென்ற பகுதிகளையும் இணைத்து அகண்ட பாரதம் என்ற இந்து தேசியத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்பினரின் கனவு.
இந்தியா என்பது பல்வேறு நாடுகளின் அல்லது தேசிய இனங்களின் ஒரு கூட்டமைப்பு. நாளடைவில் இந்த தனித்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் முன்பே உள்ளபடி தமக்கான சுத5ஃதிர அரசை நிறுவிக்கொள்வதற்கான சாத்தியங்களே அதிகம் உண்டு.
மேலும் பண்பாடு , கலாச்சாரம், உளவியல் , பொருளாதாரப் பின்னனி போன்ற எந்த பொதுமையான அம்சங்களும் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இது குறித்து " இந்து தேசியமும் இந்துத்துவ காட்டுமிராண்டிகளும் " என்ற பத்தியில் ஏற்கனவே விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

தேசியம் எனப்படுவது எப்போது ஆளும் வர்க்கத்தினருக்கு சாதகமானதாக இருக்கிறது. சகோ உமா தேவி அவர்கள் ஒரு விவாதத்தில் பொதுப் பண்பாடு, பொது கலாச்சாரம் என்பது கார்ப்பரேட்டுகள் பின்பற்றுவது தானே என்று கேட்டார். ஆளும் வர்க்கத்தின் இணைப் பிரிவான முதலாளித்துவமும் இந்த உட்கருத்துக்களை தனக்குள் வரிந்து கொண்டதில் வியப்பேதும் இல்லை.
தேசியம் என்ற கருத்துரு மக்களை எப்போதும் உணர்ச்சி நிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது. உதாரணமாக நாட்டில் ஒரு முக்கியமான பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும். அந்த நேரத்தில்காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் என்ற செய்தி வந்தால் மற்றனைத்தும் தானாக பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும்.
தேசியம் என்பது எல்லோரும் ஒன்று, சமமானவர்கள் என்ற மாயையான தோற்றத்தை மனதில் விதைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நாமெல்லாம் இந்தியர்கள் என்ற கோஷத்தின் முலம் பல்வேறு தனித்த தேசிய இனங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டு மத்திய ஆளும் வர்க்கத்தின் கீழ் மக்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது. ஆளும் வர்க்கத்தை நோக்கி விரல் நீட்டும் எவரும் தேசத்துக்கே துரோகிகளாக முத்திரை குத்தப்படுவார்கள்.
மக்களின் கவனத்தை நாட்டின் பிரச்சனைகளிலிருந்து சிதறடித்து ஆளும் வர்க்கத்துக்கு சாதகமாக மக்கள் திரள் சாய்ந்திருக்க செய்வதற்கான ஒரு ஆயுதமாகவே தேசியம் பேணப்பட்டு வருகிறது.


தமிழ் தேசியம் என்பதே சிக்கலான, வரையறைகளில் தெளிவற்ற ஒரு கருத்துருவமாக காட்சியளிக்கிறது. தமிழர்களுக்கான தனி நாடு என்பதே தமிழ் தேசியத்தின் லட்சியமானால் அந்த நாட்டை எங்கு அமைப்பார்கள் இலங்கையிலா அல்லது தமிழகத்திலா? இலங்கையில் மலர்வதான ஈழ தேசியம் இங்குள்ள தமிழர்களின் இன்னல்களுக்கு எவ்வகையில் தீர்வளிக்க கூடியதாக இருக்கும்? இந்திய இறையாண்மையை மதிக்கிறோம் என முழக்கமிடும் சீமானோ, பழநெடுமாறனோ தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தால் இங்கே தமிழ் தேசியம் மலர்ந்துவிட்டதாக கொள்ள முடியுமா? தமிழ் தேசியம் என்பது ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டும்தானா?
அப்படியெனில் தமிழர்களை தமிழர்களே ஆளவேண்டும் என்பது தவறா? தமிழ் தேசியம் என்பது தேவையற்ற ஒன்றா? தேவையெனில் தமிழ் தேசியத்தை எப்படி சாத்தியமாக்குவது? தமிழ் தேசியத்தின்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தான் என்ன?

தமிழ் தேசியம் என்றல்ல, எந்த ஒரு தேசியமென்றாலும் அது வெற்றியடைவதற்கு கீழ்கண்ட நான்கு அம்சங்கள் தேவையாக இருக்கின்றன.
* தேசியத்திற்கான தேவை
* தேசியத்திற்கான கொள்கை
* தேசியத்திற்கான தலைமை
* வெகுமக்கள் போராட்டம்
தேசியத்திற்கான தேவை :
இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு. ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான சுதந்திர அரசை கட்டியெழுப்புவதற்கான போராட்டங்களென்பது எவ்வகையிலும் தவறானதல்ல. ஆனால் தமிழ்தேசியவாதிகளின் நடைமுறைச் செயல்பாடுகள் மற்ற தேசிய இனங்களின் மீது காழ்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.
மற்ற தேசிய இனங்களை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து, மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் தங்கள் அரசியல் லாபத்தை அறுவடை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்று சுதந்திர வேட்கையுடன் முழக்கமிடுபவர்கள், அதே தமிழினத்தின் பெரும்பகுதி பார்ப்பனீயத்தினால் சீரழிந்து அடிமையில் உழல்வதை பற்று சிறிதும் சிந்திப்பதேஇல்லை. மாறாக என்ன கூப்பாடு போட்டாலும் கடைசியில் இவர்கள் சரணாகதி அடைவது பார்ப்பனீயமாகத்தான் இருக்கிறது. தங்கள் சுயலாப அதிகார அரசியலுக்காக மக்களின் பெரும்பகுதி அடிமைகளாக தொடர்வதே தங்களுக்கு பாதுகாப்பானதென தமிழ்தேசிய ஆளுமைகள் நினைப்பதாலேயே, பார்ப்பனர்களும் தமிழ்தேசியத்தை தங்களுக்கான பாதுகாப்பு கவசமாகவே எண்ணுகிறார்கள்.

தேசியத்திற்கான கொள்கை :
தமிழ் தேசியவாதிகளின் கொள்கைதான் என்ன? தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்பதுதான் தமிழ் தேசியத்தின் சுருக்கமான வடிவமா? தமிழ்தேசியம் குறித்த தெளிவான வரையறைகள் இருக்கிறதா?
திராவிடம் என்பது சரி, தவறு என்ற விவாதத்திற்குள் செல்லாமல் சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிடம் என்றால் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, பெண்ணுரிமை, சுய மரியாதை திருமணங்கள் , வர்க்கபேதமற்ற சமூகம் என பல கொள்கை அம்சங்கள் இருக்கின்றன. ஆக இப்படியான, இதையொத்த அம்சங்கள் தமிழ்தேசியத்தில் ஏதுமிருக்கிறதா?
ஒரு திராவிடக்கொள்கையாளன் எந்த யோசனையுமின்றி நாத்திகனாக கற்பனை செய்யப்படுவதுபோல், ஒரு தமிழ்தேசியவாதி தீவிர சாதியாளனாகவே பார்க்கப்படுகிறானே, ஏன்? தமிழ், தமிழர் நலன், தமிழர் ஆட்சி என்பதெல்லாம் சரிதான். ஆனால் இந்த கோபுரங்களை எந்த அடித்தளத்தின் மீது கட்டுவதாக உத்தேசம்? அடித்தளம் ஏதுமற்று கட்டப்படும் தமிழ்தேசியம் ஆகாயக்கோட்டையாகத்தான் நீடிக்க முடியும்.
மக்களுக்கான சுதந்திர அரசை கட்டியெழுப்புவதாக முஷ்டி உயர்த்துபவர்கள் , அவர்களின் சொல்லொணா துயர்களுக்கு தீர்வாக எதை முன்வைக்கிறார்கள்? தமிழனை தமிழன் ஆள்வதால் மட்டுமே துயர்களெல்லாம் இல்லையென்றாகும் மாயம் நிகழ்ந்துவிடுமா? தமிழனை தமிழனே, செந்தமிழ் அரசர்களே, முத்தமிழ் காத்த மூவேந்தர்களே ஆண்ட காலம் தொட்டு இன்று வரையில் சாதி, மத வலையில் சிக்கி , தங்கள் மனித மாண்பையே பறிகொடுத்து நிற்கும் பரிதாப மக்களுக்கு தமிழ் தேசியம் என்ன சொல்ல விழைகிறது? சாதியை மறந்து தமிழராய் ஒன்றுகூடுங்கள் என்பது தானா? அதாவது சாதியை ஒழிப்பதெல்லாம் அதிகப் பிரசங்கிதனம், அதை மறந்து விடுங்கள், அதாவது அதை உங்கள் கக்கத்தில் மறைத்துக் கொள்ளுங்கள், அது போதும்.

தேசியத்திற்கான தலைமை :
தமிழனிடம் நீயும் மனிதன், அவனும் மனிதன், ஏனப்பா பாகுபாடு என சாதி, மத கொடூரங்களை சொல்லி அறிவூட்டுவதை விட, இமயமலைவரை வென்றவனே, இன்று உனக்கென ஒரு நாடில்லையே என்று பேசி உணர்ச்சியூட்டுவது மிக எளிது.
தேசியம் என்பது பேசுப்பொருளாகின் அதற்கான தலைமை என்பது மிக அவசியம். தமிழ்தேசிய தந்தை என்று இவர்கள் சுட்டிக்காட்டுவதோ ஈழ மண்ணில் போர்க்களம் கண்ட பிரபாகரன் அவர்களை. இதில் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரன் அவர்கள் தனது வாழ்நாளில் ஓரிடத்திலும் கூட தமிழ் தேசியம் என்ற வார்த்தையை உச்சரித்ததில்லை. தமிழ் தேசியம் அமைப்பதென்பது அவரின் கனவாகவும் இல்லை.
அவரின் இலக்கும் வாழ்வும் சிங்கள பேரினவாதிகளிடமிருந்து ஈழ மக்களை மீட்டு ஒரு சுதந்திர ஈழ அரசை நிறுவுவதென்பது மட்டும் தான். உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைக்கும்படியான தமிழ்தேசியம் அமைப்போம் என பிரபாகரன் அவர்கள் எப்போதேனும் முழங்கினாரென எடுத்துக்காட்ட இயலுமா?
ஆக, பிரபாகரனே நினைத்துப் பார்த்திராத தமிழ்தேசியத்தை தமிழ்தேசியவாதிகள் வலிய அவர்மேல் திணிக்கிறார்கள். தொலைக்காட்சி தொடர்களின் சோகங்களுக்கே உச் கொட்டி உள்ளம் நெகிழ்பவர்களாயிற்றே தமிழர்கள், கொத்து கொத்தாய் ஈழத்தில் தமிழ் மக்கள் மடிவதை பற்றி பேசினால் மறுப்பா வரப் போகிறது? ஈழத்தின் இன்னல்களையெல்லாம், தியாகங்களையெல்லாம் தங்களின் சுயலாப அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்வதில் தேர்ந்தவர்கள் தமிழ்தேசியவாதிகள் என்பதற்கான சமீபகால உதாரணங்கள்தான் பாலச்சந்திரன், இசைப்பிரியா, முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களின் மரணக்கறைகளை தங்கள் கட்சி கொடிகளில் பூசி ஆதாயம் பார்த்தது. ஆக, அதிகார சுய நலனுக்காக பிரபாகரனை தங்களுக்கான அம்பாசிடராக இவர்கள் பயன்படுத்துகிறார்களேயொழிய., தமிழ்தேசியத்திற்கென தெளிவான தலைமை என எதுவுமில்லை.

வெகு மக்கள் போராட்டம் :
எந்த ஒரு போராட்டமும் வெற்றியடைவதற்கு வெகு மக்களின் பங்களிப்பு மிக அவசியம். மக்கள் அதன் அத்தியாவசியத்தை உணர்ந்து வீதி இறங்கி போராடினால் ஒழிய எல்லா முழக்கங்களும் ஒருநாள் கூச்சலாகவே முடிந்து போகும். ஆனால் தமிழ்தேசியவாதிகளும் சரி, இங்குள்ள ஊடகங்களும் சரி, மக்களிடம் தமிழ் தேசியக் கொள்கைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்தேசியம் என்ற கருத்துருவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தோல்வியையே கண்டிருக்கிறார்கள்.
எல்லோருமே பார்ப்பனர்களல்ல, தமிழ் அந்தணர்களையும் பார்ப்பனர்களாக திராவிடம் ஒடுக்க நினைக்கிறது என குற்றச்சாட்டு வாசிப்பவர்கள் தங்களின் கொள்கை பற்றி கேட்கப்படும் போதெல்லாம் தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்பதை தவிர வேறு பேச மறுக்கிறார்கள்.
தங்களிடம் ஒட்டுச்செடியாக வளரும் பார்ப்பனியத்திற்கு ஆள் பிடிக்கும் விதமாக சிறுதெய்வ வழிபாட்டை முன்னிறுத்துகிறார்கள் தமிழ்தேசியவாதிகள். சுடலைமாடனும் அய்யனாரும் ஒண்டிவீரனும் உங்களின், எங்களின் பாட்டன்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகளும் சிவன் மற்றும் பெருமாளின் வழிபாட்டு முறைகளிலும் வேறுபாடுகள் ஏன்? சிவன், பெருமாளைக் கும்பிடுபவனும் மதுரை வீரன், முனியாண்டியைக் கும்பிடுபவனும் ஒரே இந்து மதம்தான் என்றால் பிறகு ஏன் இந்த வேறுபாடு?
மக்களிடம் தொடர்ச்சியான குழப்பத்தை விதைப்பதைவிட தமிழ்தேசியவாதிகள் ஒன்றும் செய்ததில்லை என்பதே கடந்த கால வரலாறு. தமிழ், தமிழர் நலன் என்று முழங்குபவர்கள் , தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்து நேர்ந்தபோதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

* மொழித்துவ, இனத்துவ, வட்டார உணர்வை தூண்டிவிடுகிறது.
- தமிழ் மொழி பேசும் மக்கள் மட்டுமல்ல, இன்னும் எண்ணற்ற தேசிய இனங்கள் இந்தியாவில் உண்டு. அவைகளோடு ஒத்த , சுமூக நல்லுறவை பேணுவதற்கு பதில், மக்களிடையே காழ்ப்புணர்வை தமிழ் தேசியம் வளர்க்கிறது. வட இந்திய தொழிலாளர்களை விரட்டியடியுங்கள் எனும் தமிழ் பாசிசவாதிகளின் குரலை நீங்கள் அடிக்கடி கேட்டிருக்கக்கூடும். அதுவல்லாமல் கன்னட, மலையாள, தெலுங்கு மொழி பேசும் மக்களை தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எதிரிகளாக சித்தரிக்கவும் தமிழ் தேசியம் தவறுவதில்லை.
* பொருளாதார சிக்கல்கள் குறித்த தெளிவின்மை
- ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகள் கிடைக்கப்பெறாத, வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் பெருங்கூட்டத்துக்கான தீர்வு என்னவென்பது பற்றி தமிழ்தேசியம் சிந்திக்கவேயில்லை. சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் இடதுசாரிப் போக்கிலிருந்து வெகுதூரம் விலகி, பார்ப்பனீயத்தை, முதலாளியத்தை ஆதரிக்கும் வலதுசாரிப் போக்கையே தமிழ்தேசியம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

* சாதி பாகுபாடு குறித்த மழுப்பலான நிலைப்பாடு
- தமிழனை தமிழனே ஆளவேண்டும், வேற்று மாநிலத்தவர்களின் அடிமைகளாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் தமிழ்தேசியவாதிகள், தமிழ் மக்களுக்குள்ளேயே சாதியவாதம் தலைதூக்கி பெரும்பான்மையினர் பிறப்பின் வழியே ஒரு பிரிவினருக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ற போக்கினை குறித்து சிறு சிணுங்கலையும் அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. சாதியை மறந்து ஒன்றுபடுங்கள் என்பது மட்டுமே தமிழ்தேசியத்தின் நிலைப்பாடு. அதாவது அடிப்பவனிடம் சாதி வெறியை மறந்து ஒன்றுபடுங்கள் என்பதற்கு மாறாக, அடிவாங்குபவனிடம் சாதியை மறக்கச் சொல்கிற கயமைத்தனத்தையே தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து செய்கிறார்கள். சாதி ஒழிப்பிற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் எதையும் தமிழ்தேசியம் கொண்டிருக்கவில்லை. சாதியை தமிழனின் கலாச்சாரமாக சித்தரித்து, சாதி ஒழிப்பை தனக்கு விரோதமான ஒன்றாகவே கருதுகிறது தமிழ்தேசியம்.
* மேட்டுக்குடிகளின் கருத்தியல்
- சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் குறித்த எந்த தீர்வையும் முன் வைக்காமல் , மொழி உயர்வை மட்டுமே முதன்மைப்படுத்தி மற்றெல்லாவற்றையும் மழுங்கடிக்கிறது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி எங்கள் தமிழ்மொழி என்றும் தமிழர்களே உலகின் ஆதிகால பூர்வக்குடிகள் என்றும் பழம்பெருமைகளை வாய்வலிக்க பேசுகிறவர்கள், அந்த தமிழ்குடியின் சமத்துவ வாழ்விற்கான சித்தாந்தம் எதையும் தனக்குள் கொண்டிருப்பதாக தெரியவில்லை. இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் , திருவாசகம் இவைகளின் இலக்கிய சுவையை எண்ணி மெச்சுபவர்கள் அதன் கருத்தியலை மறந்தும் விமர்சனப்பார்வையோடு அணுகுவதில்லை. ஒருவேளை கஞ்சிக்கே வழியற்ற அடித்தட்டு மக்களிடம் இலக்கிய பெருமைகளை அள்ளி வீசி அழகியலை மட்டுமே பேசுகிற மேட்டுக்குடி கருத்தியலாக இருக்கிறது தமிழ்தேசியம். சமஸ்கிருதம் கலந்த தமிழில் எழுதிய பாரதியை தமிழ் மகாக் கவிஞன் என கொண்டாடுபவர்கள், தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தங்களை கொண்டுவந்து பாமரமக்களையும் சிந்திக்க தூண்டும்படி எழுதிய பெரியாரை தமிழர்களின் விரோதியாக அடையாளப்படுத்துகிறார்கள். இவர்களின் தமிழ் பற்றும் சாதி முலாம் பூசி மினுக்கும் போலியான ஒன்றுதான் என்பதை இதன்வழி அறியலாம்.

* பாசிச தமிழ் தேசியம்
தமிழர் அல்லது தமிழ்நாட்டு மக்கள் என்பதற்கான எத்தகைய தெளிவான வரையறையையும் தமிழ்தேசியம் கொண்டிருக்கவில்லை. சாதியை மறந்து தமிழராக ஒன்றுபடுங்கள் என்பது மிகப் பெரிய பித்தலாட்டமேயன்றி வேறில்லை.
ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் தமிழன் என்று கொள்ளும்போது, ஒடுக்கப்படும் மக்களுக்காக சிறு துரும்பளவும் செயலாற்றாத, ஒடுக்கும் சக்திகளின் பக்கம் நிற்கிற, அவர்களின் சாதி கலாச்சாரத்தை தமிழ் கலாச்சாரமாக கொண்டாடுகிற பாசிசவாதிகளின் கூடாரமாகவே இருக்கிறது தமிழ் தேசியம்.
சாதிய மோதல்கள் நிகழும் போதெல்லாம் அவற்றை லாவகமாக திராவிடக் கட்சிகளின் பக்கம் மடைமாற்றி விடுவதை தவிர தமிழ்தேசியவாதிகள் செய்ததொன்றுமில்லை. பெயரளவிற்கேனும் அறிக்கை வெளியிட்டு சாதியவாதிகளின் அராஜகத்தை கண்டிப்பதை விட்டு, தமிழராக ஒன்றுப்படாத வரை இத்தகைய சாதி மோதல்கள் தொடரத்தான் செய்யும் என சாதி வெறியர்களுக்கு தமிழ்தேசியம் வக்காலத்து வாங்குகிறது.
கடைநிலை மக்களின் கருத்துநிலையாக அல்லாமல் ஆண்டப் பரம்பரைகளின், ஆதிக்க சாதி வெறியர்களின் ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்வதிலேயே தமிழ்தேசியம் முனைப்பு காட்டுகிறது.

* முரண்பாடுகளின் தொகுப்பு
இந்தியா என்பது பல தேசிய இனங்களின் தொகுப்பு. மொழிவாரியாக பார்த்தாலும் தமிழர்களைப் போலவே எண்ணற்ற தேசிய இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் தேசப்பற்று என்ற தேனைத் தடவி இந்திய தேசியம் என்ற ஒற்றை தேசியத்திற்குள் மக்களை சிறைப்படுத்தும் வேலையையே மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் தொடர்ந்து செய்து வருகின்றன.
தனது இனத்தின் தனித்த தேசியத்தை பாதுகாக்க அல்லது மீட்டெடுக்க விரும்பும் எந்த மக்கள் குழுவும் எதிர்க்க வேண்டியது இந்திய தேசியம் தான். தன்னைப் போலவே தனது இனத்தின் தனித்த தேசியத்துக்காக போராடும் பிற இனக் குழுக்களுடன் இணைந்து இந்திய தேசிப் என்ற மாயையை, அதன் ஆதிக்கத்தை தகர்த்தெறிவதையே தமிழ்தேசியம் தனது முதன்மை இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் நாம் காண்பது என்ன?
வல்லாதிக்க தேசியமான இந்திய தேசியத்திற்கு வால் பிடிப்பதையே தங்கள் கொள்கையாக வெளிப்படுத்துகிறார்கள் தமிழ்தேசியவாதிகள். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு தமிழ் தேசியம் அமைப்போம் என்பதைவிடவும் உளறல் இருக்க முடியுமா? அது எப்படி என்பதை தமிழ் தேசியவாதிகள் விளக்குவார்களா? சீமானோ, வைகோவோ, பழ நெடுமாறனோ, நடராசனோ தமிழக முதல்வராகிவிட்டாலே தமிழ்தேசியக் கனவை அடைந்துவிட்டதாக மக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாட வேண்டுமா? இதுதானா இவர்கள் நரம்பு புடைக்க கொக்கரிக்கும் தமிழ்தேசியம்?
இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு இந்திய தேசியத்திற்கு பல்லக்கு சுமப்பர்கள், தங்களின் தோழமை தேசிய இனங்கள் குறித்த காழ்ப்புணர்வை மக்கள் மனதில் விதைத்து அரசியல் அறுவடை செய்வதில் மட்டுமே முனைப்பாயிருக்கிறார்கள். எதிர்க்க வேண்டியதன் முன் மண்டியிட்டு வணங்கிவிட்டு கைகொடுக்க வேண்டியவர்களுடன் 'கத்தி'ச்சண்டை செய்துவருகிறார்கள்.
திராவிட எதிர்ப்பை, பெரியார் எதிர்ப்பையே முழுமுதல் வேலையாக செய்கிற தமிழ் தேசியவாதிகள், திராவிடக்கொள்கையாளர்களெல்லாம் துரோகிகளென தீர்மானமாக கருதி, தாங்கள் அமைக்கப்போகும் தமிழ்தேசிய அரசின் காலத்தில் கழுவேற்றி கொன்றுவிடுவார்களோ என்று அச்சப்படுமளவுக்கு தனது சக தமிழர்களையே எதிரிகளாக பாவிப்பவர்கள், சக இனக் குழுக்களுடன் இணைந்து இந்திய தேசியத்தை எதிர்த்து குரல்கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதும் நமது அதீத முட்டாள்தனம் தான்.

- LEO JOSEPH D
- dleokommedu@gmail.com