வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அண்ணலை கண்டு அஞ்சி நடுங்கும் ஆர்எஸ்எஸ் கூட்டம் - தோழர் இளங்கோவன்

இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் சிலர் எழுதி திரிகிறார்கள். அவர்களின் பொருட்டை அம்பேட்கரை மீண்டும் புரட்டி பார்த்தால், இந்த காவி கும்பலின் முகத்தில் அண்ணல் அம்பேட்கர் காறி உமிழ்கிறார்…
இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார்
அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது மூன்று விசயங்களை நிறுவன் விரும்புகின்றனர்

1) அண்ணல் அம்பேட்கர் கிருத்துவ இஸ்லாத்தை வெறுத்தார் என்றும்
2) கம்யூனிசத்தை வெறுத்தார் என்றும்
3) இந்துத்வ கும்பலை ஆதரித்தார்

முதலில் அம்பேட்கர் காவி கும்பலை ஆதரித்தார் என்ற அவதூற்றை எடுத்துக் கொள்வோம். அம்பேட்கரை காவி கும்பலுக்கு ஆதரவானவராக சித்தரிக்க, அவர்கள் எடுத்துக் கொள்ளும் நூல் தனஞ்ஜெய் கீர் எழுதிய “அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு” நூல்தான். கொஞ்சமா அறிவிருந்து அந்த நூலை படித்தாலும், தீய நோக்கத்தோடு அந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அம்பேட்கர் கொட்டாவி விட்டார் என்று சொல்வதற்கு கூட, சாவர்க்கர் போலவே அம்பேட்கர் கொட்டாவி விட்டார் என்று எழுதும் அளவுக்கு ‘நேர்மை!) கொண்டவர்தான் தனஞ்ஜெய் கீர். இதே தனஞ்ஜெய் கீர் சாவர்க்கரை புகழ்ந்து ஒரு வாழ்க்கை வரலாற்று சாவர்க்கரை பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் என்பதும் இங்கே நினைவுக் கூறத்தக்கது. தனஞ்ஜெய் கீர் நுட்பமாக அம்பேட்கரை காவிமயமாக்க முயன்றிருப்பதை அம்பேட்கரின் நூல் தொகுப்புகளை ஆழ்ந்து கற்றால் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், அம்பேட்கர் இந்துத்வ கும்பலின் மீது துளியளவும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதற்கு முக்கியமான சான்று காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன என்ற நூலில்

1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பம்பாய் மாநாட்டில் தீண்டாமை தொடர்பான விவகாரங்களை அகில இந்திய இந்து மகா சபை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இதிலிருந்தே காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பில் எவ்வளவு அக்கறையற்ற தன்மையோடு இயங்குகிறது என்பது வெள்ளிடை மலை.

தீண்டாமை ஒழிப்பில் இந்து மகா சபையை போன்ற பொருத்தமற்ற ஒரு இயக்கம் இருக்கவே முடியாது. அது ஒரு தீவிரவாத இயக்கம். அதனுடைய நோக்கமே இந்து கலாசாரத்தை அதனுடைய தீவிரத்தோடு பாதுகாப்பதுதான். அது, இந்திய அரசியலில் இஸ்லாமியர்களின் தாக்கத்தை குறைப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்ட பச்சை அரசியல் இயக்கம். தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள சாதியை குறித்தோ, தீண்டாமை குறித்தோ பேசுமே தவிர. அதற்கு தீண்டாமை ஒழிப்பு பற்றிய நோக்கமே கிடையாது. இப்படியான இயக்கத்திடம் ஒப்படைப்பதன் மூலம் காங்கிரஸுக்கும் தீண்டாமை ஒழிப்பில் தீவிர நோக்கம் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது” என்கிறார் . ( 1945ல் காந்தியும், காங்கிரஸும் தீண்டப்படாதவர்களுக்கு செய்ததென்ன நூல் வெளியாகியது)

அதேபோல, 15 ஏப்ரல் 1920 ஆம் ஆண்டு மன்காவில் பேசும் போது, தீண்டாமைக்கு ம் அரசியலுக்கு என்ன தொடர்பு என்று கேட்ட, தேசிய வாதிகள் தூக்கி பிடிக்கும் திலகரை பார்த்து சினம் கொண்டு, “அனைத்து மனிதர்களையும் மனிதர்களாக நடத்த கற்றுக் கொள்ளும் வரை தேசபக்தி என்பது சாத்தியமேயில்லை. திலகரை போன்ற தலைவர்கள் பேசுவார்களே தவிர செயலில் எதையும் செய்ய மாட்டார்கள்”என்றார்.

இந்துத்வ கும்பல் தீண்டாமையை மிக மேலோட்டமாக வாய்வார்த்தையாக பேசி கடந்து போய்விடுவார்கள் என்று சாடிய அம்பேட்கர். தீண்டாமை குறித்து மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார். தீண்டாமையின் கொடூரத்தை துல்லியமாக படம் பிடித்தும் காட்டினார்

”சொத்து சேர்க்கும் பாதையை ஒரு சாராருக்கு மட்டும் திறந்துவிட்டு, பிறரை அவர்களுக்கு அண்டி பிழைக்கும்படி செய்வது மதமே அல்ல. இந்து சனாதன மதம் என்பது அப்படியானது. சர்வாதிகார கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது தொழுநோயாளிக்கு கூட சாதி இந்துக்கள் இரக்கம் காட்டுவார்கள். ஆனால், தீண்டப்படாத மனிதர்களை மதிக்கவே மாட்டார்கள். ” என்று கூறிய அம்பேட்கர்

”கடவுள் எங்கும் இருக்கிறார் என்று கூறிவிட்டு, சக மனிதனை விலங்குகளைவிட கேவலமாக நடத்துபவர்கள் இந்துக்கள். எறும்புக்கு சர்க்கரையை இட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இந்த வேடதாரிகளாக நடத்துகின்ற இந்த வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்.” என்று இந்துத்வத்தின் கோர முகத்தை அடையாளங்காட்டினார். பல்வேறு அரங்குகளில் போராடினார்.

இப்படி, தொடர்ந்து இந்து சானதன மதத்தின் தீங்குகளை அம்பலப்படுத்தி வந்த அம்பேட்கர் ”இந்துவாக பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன் என்று உறுதிமொழியை எடுத்தார்.” அந்த உறுதிக்கு அவர் வந்தடைய தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்தார். இந்து மதத்திற்குள்ளேயே சீர்திருத்தம் செய்துவிட முடியாதா என்று முயன்றார். ஆனால், பலனிருக்காது என்று அனுபவத்தில் கண்டுணர்ந்தார்.

”இந்து சமூகத்திலுள்ள தீங்குகளை களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம்.

ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)

இந்து மதத்தை விட்டு வெளியேற முடிவு செய்த அம்பேட்கர், பல்வேறு ஆய்வுகளின் வழியாகவே பௌத்தத்தை தழுவ முடிவு செய்தார். கிருத்துவத்தையோ, இஸ்லாத்தையோ தழுவவில்லையே தவிர, ஒப்பீட்டளவில் இந்து மதத்தைவிட அவற்றின் மீது நல் அபிப்ராயமே அம்பேட்கருக்கு இருந்தது.

”அறிவு, சொத்து, துணிமணிகள் என்பவை ஒருவனுக்கு புற அடையாளங்கள் மட்டுமே. இவற்றிற்கும் சமத்துவத்திற்கு முடிச்சுப் போடக் கூடாது என்பதுதான் கிருத்துவத்திலும், இஸ்லாத்திலும் வலியுறுத்தப்படும் அறநெறி போதனைகள். அப்படியான, அறநெறி போதனை என்பது அறவே இல்லாத மதம்தான் இந்து மதம்தான்” என்று காறி துப்பினார்.

இந்த எச்சில் ஒருவேளை சாவர்க்கரின் முகத்தில் விழுந்திருக்குமோ என்னவோ? சாவர்க்க ரொம்ப பதறுகிறார்.

”இந்து மதத்தின் மீது வன்மம் கொண்டு ஒவ்வொரு நாளும் அம்பேட்கர் இந்து மதத்தின் மீது வசைமாறி பொழிகிறார். அவர் புத்தரை பகுத்தறிவுவாதி என்கிறார், பௌத்தம் அப்பழுக்கில்லாத சிறந்த மதம் என்கிறார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாக துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்.” (1956, சாவர்க்கர் தொகுப்புகள்)

இன்றைய இந்துத்வ அல்லக்கைகள் முடிந்தால், இஸ்லாத்தை திட்டிப்பார்னு சவடால்னு விடுவது போன்று இருக்கிறதல்லவா? சாவர்க்கர் அத்தோடு விடவில்லை. அம்பேட்கரை துரோகி போன்றே சித்தரிக்கிறார்.

தொடக்கத்திலிருந்தே, மதமாற்றம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் மீது கவனமாக இருக்க வேண்டும். நாம் மீண்டும் குருட்டுத்தனமான பிழைகளை அனுமதிக்க முடியாது. இந்த இயக்கங்களை பேரழிவை உருவாக்கும் அபாயங்களாக கருதி எதிர்க்க வேண்டும். அம்பேட்கர் இந்திய எல்லைகுட்பட்ட புத்தராக இருந்துவிட்டு போகட்டும், நமக்கு கவலையில்லை. ஆனால், அம்பேட்கரின் புகழ் உயர்த்தப்பட்டு, புத்தர் அளவிக்கு மீறி கொண்டாடப்பட்டால், அதை தேசிய, மதநலன் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

இவர்கள் மீண்டும் நம் முன் திறந்து வைத்துள்ள புத்தனின் வரலாற்றை மீளாய்வு செய வேண்டும். யவனர்கள் காலத்திலிருந்து ஜயசந்தும், புத்த அரசர்களும் படையெடுப்பாளர்களுக்கு உதவுவதை தங்களது மதக் கடமையாக நினைத்து செய்து வந்திருக்கிறார்கள்.அந்நிய அரசர்களோடு இணைந்து அவர்கள் இந்திய் அரசுக்கும், இந்து தேசத்திற்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்திருக்கிறார்கள். மீண்டும் இந்த துரோக வரலாறு வாய்ப்பில்லை என்றாலும், இந்து தேசத்திற்கு எதிரான இந்த பௌத்தத்தின் போரை கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இந்த நஞ்சை உட்கொண்டு ஆய்வு செய்வதற்கு பதிலாக, அதை உட்கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்தது. (1956, சாவர்க்கர் நூல் தொகுப்புகள்)

இப்படி சாவர்க்கர் பதட்டபட காரணம் என்ன?

இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேட்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட சனாதன தருமத்திற்கும் நடந்த போர் என்று மதிப்பிட்டார் அம்பேட்கர். அதனால்தான், சாவர்க்கர் சினமுற்றார். ..ஏன் வேறு மதத்துல ஓன்னுமில்லையா?ங்கிற பதட்டம் அங்கிருந்துதான் வருகிறது.

ஆனால் ,, ம.வெங்கடேசன் உள்ளிட்ட பறையர்கள், அம்பேத்கரை ”இந்துத்வ அம்பேட்கர்” என்கிறார்கள். அம்பேட்கரை காவி கும்பல்தான் கொலை செய்தது என்றொரு புகார் உண்டு. ஆர்.எஸ்.எஸ் ஆனால், இவர்களது பிதாமகன், நாத்திக சாவர்க்கர் அம்பேட்கரை துரோகி என்கிறார். சாவர்க்கரின் இந்த துரோக முத்திரையை அடியொற்றிதான் உடையும் இந்தியா என்னும் நூலும் வெளியாயிற்று. அதில், கம்யூனிச, அம்பேட்கரிய, திராவிட இயக்கம் மேல்நாட்டு தூண்டுதலால் உருவானது என்ற கருத்தின் சாரத்தில் அந்நூல் உள்ளது.
அதன் அடிப்படையில்தான் ‘ஆரிய- திராவிட” கோட்பாடே பிழை என்கிறார்கள்.

”தென்னிந்தியாவின் பார்ப்பனர்களுக்கும் பறையனுக்கும் இருக்கும் தொடர்பைவிட, வட இந்திய பார்ப்பனர்களுக்கும், தென்னிந்திய பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தொடர்பு நெருக்கம் குறைவானதே.” என்ற அம்பேட்கரின் அம்பேட்கரின் சொற்களை மேற்கோள் காட்டுகிறார்கள். அதாவது ரத்த கலப்பு ஏற்பட்டுவிட்டது என்கிறார். ஆகையால், தட்டையாக ஆரியர், திராவிடர் என்று இனவாதமாக பேசுவதை தவறு என்கிறார்.

இதே கருத்தை கூறிய அம்பேட்கர்,“தீண்டப்படாத மக்களுக்கு இயல்பான நண்பர்களாக இருக்க வேண்டிய சூத்திரர்களே, காலாட்படையாக நின்று சாதியை பாதுகாக்கிறார்கள் என்று வருத்தப்பட்டார்.” கூடவே, பார்ப்பனரல்லாத இயக்கம் வரலாற்று முற்போக்கு பாத்திரம் ஆற்றியிருக்கிறது என்றும் கூறுகிறார். இதன் பொருள் பார்ப்பன மேலாண்மை இல்லவே இல்லை என்று கூறவேயில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது. – (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

அம்பேட்கர் கூறும் அறிவியல் பூர்வமான காரணங்களுக்காக, இந்துத் வ கும்பல் ஆரிய – திராவிட கோட்பாட்டை மறுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் அது. அது பெரியாரின் மீதான வன்மம்.

இது ஒரு பக்கம், தாங்கள் சொல்வதற்கு கூட நேர்மையாக இருக்க வக்கற்றது இந்த இந்துத்வ கும்பல் என்பதற்கு உதாரணந்தான். ஆரிய – திராவிட எதிர்ப்பு என்பது .

மக்கள் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு, ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் திட்டத்திற்கு அல்லக்கை வேலை பார்த்த இந்துத்வ கும்பலின் தலைவர் சாவர்க்கர் எழுதிய ”இந்துத்வத்தின் அடிப்படைகள்” என்னும் நூலில்

”சவால்விடவே முடியாத வெற்றிக்குதிரை அயோத்தியாவை வந்தடைந்த போது, இறையாண்மையின் பெருமைமிகு ராமச்சந்திரனின் பேரசசின் குடை விரிந்தது. வீரம் மிகுந்த, நற்பண்புகள் நிறைந்த ராமன் ஆரிய ரத்தத்தால் மட்டும் அரியணை ஏற்றப்படவில்லை. மாறாக, தெற்கை சார்ந்த ஹனுமான், சுக்ரீவன், விபீசணன் உள்ளிட்டோரின் உதவியாலும்தான் அது நிகழ்ந்தது. அந்த நாள்தான் இந்துக்களின் பிறப்பு நாள் என்று கூட கூறலாம். ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் இணைந்து ஒரே தேசமான ஒரு தேசிய நாள் அது.”

சாவர்க்கர் கூறும் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள் யார்? அவர்கள் எந்த தேசத்தை சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்க்ளா? சீனாவை சேர்ந்தவர்களா? அக்ரஹாரத்தை சேர்ந்தவர்களா?

திராவிட-ஆரியர் கோட்பாட்டை இனத்தூய்மை அடிப்படையிலான பிரிவினையாக தட்டையாக புரிந்து கொள்ளுதல் தவறு என்று சுட்டிக் காட்டியதை ஏதோ சுயமரியாதை இயக்கத்தின் தோல்வி போலவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் தோல்வி போலவும், ஜோதிராவ் புலே, பெரியார் போன்றவர்களின் போராட்ட மரபு தோற்றுப் போய்விட்டதாகவும் பல்லிக்கும் இந்துத்வ கும்பல், சாவர்க்கரை எந்த மூத்திர சந்தில் நிறுத்தி கேள்வி கேட்பதாக உத்தேசம்.

ஆங்கிலேயர் ஆட்சி தேச விடுதலை என்னும் பெயரில் சாதி பிரச்சினைகளை பற்றி பேசுவது தேவையில்லாதது என்ற போர்க்காலத்தில் பெரியாரும், அம்பேட்கரும் சமூக சீர்திருத்த தளத்தில் போராடிக் கொண்டிருந்தனர். சுயராஜ்யம் பற்றி பேசி கொண்டிருந்தவர்களிடம் அம்பேத்கர்

”பிழைப்புக்குப் போதிய ஆதாரமின்றியும், இந்துக்களுடன் ஒப்பிடும்போது சிறு எண்ணிக்கையிலும் ஓர் இந்து கிராமத்தின் புறச்சேரிகளில் பட்டியல் வகுப்பினர் தொடர்ந்து வாழ்ந்துவரும்வரை, அவர்கள் தீண்டப்படாதவர்களாகவே இருந்துவருவார்கள், இந்துக்களின் கொடிய அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிவருவார்கள், அவர்களால் சுதந்திரமான, முழுநிறைவான வாழ்க்கை வாழமுடியாது. இத்தகைய நிலைமையில், சுயராஜ்யம் என்பது நடைமுறையில் ஓர் இந்து ராஜ்யமாகவே இருக்கும்.”

இப்படி, தீண்டப்படாத மக்களின் நன்மைக்காக சாவர்க்கரோ, கோல்வால்கரோ இன்னபிற காவி டவுசர்களோ எழுதியோ, பேசியோ, போராடியதோ உண்டா?

”இந்து ராஜ்யம் போன்ற கொடுங்கோலாட்சியில் சாதி இந்துக்களின் வல்லாட்சியிலிருந்தும், அக்கிரம அடக்குமுறையிலிருந்தும் ஷெட்யூல்டு வகுப்பினரை சிறந்தமுறையில் பாதுகாக்கும் பொருட்டும். அவர்கள் தங்களது மனிதஆளுமையை முழு அளவுக்கு வளர்த்துக் கொள்ளும் பொருட்டும் அவர்களுக்குப் பொருளாதார, சமூக பாதுகாப்பு அளிப்பது அவசியம்; அதோடு தீண்டாமையை வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டுவதும் முக்கியம்.”என்று அம்பேட்கர் வலியுறுத்தினாரே…இந்த காவி கும்பலின் திட்டம் என்ன? ராமராஜ்யம் என்னும் பெயரில் இந்து ராஜ்யம் அமைப்பது, பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவது, அதற்கு இஸ்லாமியர்களை வேரோடு அழிப்பது….. அப்படித்தானே…

அப்படிதானா? இல்லையா? எதை பற்றியும் பதில் சொல்ல வக்கற்றவர்கள்…பண்ணையார்களுக்காக, முதலாளிகளிடம் கையேந்தி கட்சி நடத்தும் பாஜக கும்பல் அடுத்த ரெடிமேட் கேள்வியை முன்வைப்பார்கள்…அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா இல்லையா? என்று ஏதோ, பெரிய கேள்வியை கேட்டுவிட்டதை போல, பல்லை காட்டுவார்கள்…

அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா இல்லையா? என்பதை விரிவாக விவாதிப்போம். அதற்கு முன் அம்பேட்கர் முதலாளிகளின் ஆதரவாளர் இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது. இதை ஒத்துக் கொள்ளாமல் அம்பேட்கரை புரிந்து கொள்ள முடியாது.

அம்பேட்கர் கம்யூனிஸ்டுகளை திட்டிவிட்டார், ஆகவே அவர் கம்யூனிஸ்டுகளின் எதிரி. அப்படியே, ஒத்துக் கொள்வோம். அம்பேட்கர் ராமனை அயோக்கியன் என்றார், பலபத்தினிக்காரன் என்றார் இந்துத்வ கும்பல் ஏற்றுக் கொள்ளுமா? கணேசன், விஷ்ணு,சிவன் உள்ளிட்ட யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற அறிவித்தாரே, காவி டவுசர்கள் அம்பேட்கரின் இந்த கூற்றை பரப்புவார்களா? ‘இந்து மதத்தின் புதிர்கள்’ நூலை பரப்புவார்களா? மாட்டார்கள்…..டவுசர் கழண்டுடும்…

சரி, அம்பேட்கர் கம்யூனிசத்தின் எதிரியா என்ற கேள்விக்கு வருவோம்….இந்த விசயத்தில் அவரை புரிந்து கொள்ள அவருடைய மேற்கோள்கள் சிலவற்றை வாசித்து விடுங்கள்

வர்க்க உணர்வோடுதான் அரசியல் நடத்த வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் போலி அரசியல் – அண்ணல் அம்பேத்கர், (தொகுதி 37, பக்கம் 244)

புரட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பிறகு, தாங்கள் சமத்துவமாக நடத்தப்படுவோம்; தம்மிடம் யாரும் சாதி, மத வேறுபாடு பாராட்ட மாட்டார்கள் என்று தெரியவந்தால் ஒழிய, சொத்தைப் பொதுவுடைமையாக்குவதற்கானப் புரட்சி ஒன்றில் மக்கள் சேர மாட்டார்கள். புரட்சிக்குத் தலைமை தாங்குகிற சோசலிஸ்டு, தனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை என்று வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது. அந்த வாக்குறுதி என்பது மனதின் அடி ஆழத்திலிருந்து வரக்கூடியதாக, சமத்துவம் சகோதரத்துவம் என்ற உணர்வை உள்வாங்கிக் கொண்ட மனப்பான்மைக் கொண்டதாக இருக்க வேண்டும். – அண்ணல் அம்பேத்கர்

நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு நிறைவேறக் கூடிய வெறும் லட்சிய உருவகம் அல்ல சோசலிசம். அது நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டமே ஆகும். அப்படி எனில், சோசலிஸ்டுக்கு முன் உள்ள கேள்வி, அவர் சமத்துவத்தை நம்புகிறாரா இல்லையா என்பதல்ல. அவருக்கு முன்னால் உள்ள கேள்வி, ஒரு சமூகக் கட்டமைப்பு என்கிற ரீதியிலும், கொள்கை ரீதியிலும் ஒரு வகுப்பார் இன்னொரு வகுப்பாரை அடக்கி ஒடுக்குவதும், இழிவுபடுத்துவதும் இருக்கிறது என்பதை அவர் ஒத்துக்கொள்கிறாரா? அவ்வாறே வகுப்பு வேற்றுமையை உருவாக்கும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் நீடிப்பதை அனுமதிக்கிறாரா? புரட்சிக்கு இந்திய உழைக்கும் மக்கள் ஒன்றிணைவார்களா? – அண்ணல் அம்பேத்கர்

சொத்தை மக்களுக்கு சமமாகப் பங்கிடுவது ஒன்றே உண்மையான ஒரே சீர்திருத்தம்; அது மற்ற எல்லா சீர்திருத்தங்களுக்கும் முன்னோடியாக நடந்தேற வேண்டும் என்பது, சோசலிஸ்டுகளின் வாதம். ஆனால், இந்த வாதம் எடுபடுவதற்கு வரலாற்றைப் பொருளாதார அடிப்படையில் விளக்குவது தேவை இல்லை என நான் எண்ணுகிறேன். நான் சோசலிஸ்டுகளைக் கேட்க விரும்புவது எல்லாம், சமுதாய அமைப்பை முதலில் சீர்திருத்தி அமைக்காமல் – நம்மால் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியுமா என்பதைத்தான். இந்திய சோசலிஸ்டுகள் இதுபற்றி சிந்திக்கவே இல்லை என்று தோன்றுகிறது. அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. – அண்ணல் அம்பேத்கர்

அம்பேட்கரின் இந்த மேற்கோள்களை கவனத்துடன் வாசியுங்கள். அவர் இந்நாட்டில் புரட்சி வந்துவிடக்கூடாது என்று கூறவில்லை. புரட்சிக்கு அணி திரட்டுவது எப்படி என்பதை பற்றியும், புரட்சிக்கு பிறகு மக்களிடம் சமத்துவத்தை நிலைநாட்டுவது எப்படி என்பதை குறித்தும்தான் விவாதிக்கிறார். இந்த சிந்தனை அலைவரிசை கண்டிப்பாக காவி கும்பலின் அலைவரிசையோடு ஒத்துப் போவதில்லை. தீவிர இடதுசாரி குழுக்கள் சில தேர்தல் பாதையில் பயணிக்கும் கம்யூனிஸ்டுகளை மிக கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதன் பொருள் தீவிர கம்யூனிஸ்டுகள் பொதுவுடமை அரசியலை நிராகரிக்கிறார்கள் என்று எந்த மடையனும் புரிந்து கொள்ள மாட்டான். ஆனால், காவி மடப்பயல்கள் அப்படித்தான் உங்களை புரிந்து கொள்ளக் கோருவார்கள். அம்பேத்கரின் கம்யூனிஸ்டுகளோடு இருந்த சில முரண்களை வைத்துக் கொண்டு அம்பேட்கரை திரிக்கும் காவி கும்பலுக்கு அம்பேத்கரின் மொழியிலேயே பதில் சொல்ல வேண்டுமானால்..

எப்போதோ சொன்ன கருத்தைச் சிந்தனையுள்ள எந்த மனிதனும் முரண்படாமை என்ற பெயரால் அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான். முரண்படாமையை விடவும் பொருப்புணர்ச்சிதான் மிகவும் முக்கியமானது. பொறுப்புள்ள ஒரு மனிதன் மறுசிந்தனை செய்து, தனது எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் துணிச்சல் பெற்றிருக்க வேண்டும். அதேவேளை, அவன் தனது பழைய கருத்துக்களை மறப்பதற்கும் அவற்றை புனரமைத்துக் கொள்வதற்கும் போதுமான காரணங்களும் இருக்க வேண்டும். சிந்தனைக்கு ஒரு முடிவு என்பதே கிடையாது. – அண்ணல் அம்பேத்கர்(தொகுதி-1, பக்கம் 204)

தொடர்ந்து தன்னைதானே புனரமைத்துக் கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர், தனியார்மயத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எப்படி எதிர்கொண்டிருப்பார். அம்பேட்கருக்கும், பொதுவுடமை அரசியலுக்கு உள்ள தொடர்பு என்னவென்று இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள இந்த 7இணைப்பில் உள்ள கட்டுரையை வாசியுங்கள். சிந்தியுங்கள்.

காவி கும்பல் அம்பேட்கரை திரிக்கும் முயற்சியை ஒருபுறம் செய்து கொண்டே அம்பேத்கரின் சிந்தனைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் தூக்கி பிடிப்பவர்கள் தேசத்துரோக முத்திரை குத்துகிறது. எந்த தேசத்திற்கு ரோஹித்தும், கண்ணையாவும் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்களோ, அது தேசமே இல்லை என்கிறார் அம்பேட்கர்.

தீண்டப்படாதவர்களை புறக்கணிப்பதில், அலட்சியம் செய்வதில் தோல்வியுறும்போது, அவர்களது தலைவர்களை விலைக்கு வாங்குகின்றனர்; எவரேனும் ஒரு தலைவன் அவர்களிடம் விலைக்கு போகத் தயாராக இல்லை என்றால் திட்டமிட்ட முறையில் அவனைப் பழித்தூற்றுகின்றனர்; திரித்து படம் பிடித்து காட்டுகின்றனர், அவனை அச்சுறுத்துகின்றனர், அவனை அடக்கி ஒடுக்குவதற்கும், அவனது வாயை அடைப்பதற்கு சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்கின்றனர்; – அண்ணல் அம்பேத்கர்

இந்தியா தன்னை இந்திய ஐக்கிய கூட்டரசுகள் என்று கூறிக் கொள்வதற்கு மன ரீதியிலும், தார்மீக ரீதியிலும் கூடத் தகுதி பெற்றிருக்கவில்லை. இந்திய ஐக்கிய கூட்டரசுகள் ஆவதற்கு நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. இந்திய யூனியன் என்பதோ இந்திய கூட்டரசுகள் என்பதிலிருந்து இதைவிடவும் வெகு தொலைவில் இருக்கிறது. – அண்ணல் அம்பேத்கர்(தொகுதி-1, பக்கம் 208)

அப்புறம், அய்யய்யோ ஜனநாயகம் போச்சே, நாடாளுமன்றத்தோட மாண்பு போச்சே, வெங்காயம் போச்சேனு கதறுபவர்களிடம் பேசும் துணிச்சல் வேண்டும் என்று கோருகிறார். ஏறக்குறைய அது கம்யூனிஸ்டுகளை நோக்கிய அறைகூவலாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்..

“நாடாளுமன்ற ஜனநாயகத்தைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள், வெளிக்கு தோன்றுவது போல் அது அப்படி ஒன்றும் மிகச்சிறந்த சரக்கல்ல.” என்று இந்தியர்களிடம் கூறுவதற்கு போதிய துணிச்சல் கொண்ட யாரேனும் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார். – அண்ணல் அம்பேத்கர் (தொகுதி 18, பக்கம் 139)

இப்படி அம்பேத்கரின் மேற்கொள்களை வைத்து, எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும, காவிகள் அம்பேட்கரை தமது கூடாரத்தில் சேர்க்கவே முயல்வார்கள். காரணம், அம்பேட்கரின் பெயரை சொன்னால்தான் சேரிக்குள் நுழைவுச்சீட்டு கிடைக்கும். அந்த நுழைவுச்சீட்டை வைத்து சேரி மக்களை தங்களது கலவர திட்டங்களில் ஈடுபடுத்த முடியும். நவதாராளமய சூழலில், பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் போது இந்த கலவரங்கள்தான் அவர்களுக்கு பயன்படும். காவிகள் அம்பேட்கரை திரித்து வேகமாக சேரிகளுக்குள் முன்னேறும் போது, இடதுசாரிகளுக்கு அம்பேட்கரை கைகொள்வதும், வாசித்தறிவதும் காலத்தின் தேவை.

“ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை பிணித்திருக்கும் அடிமைத்தளைகளை நொருக்கியெறிந்து விமோசனம் அடைவதற்கு உதவுவது போன்று தீண்டப்படாதோரும் தங்களது அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவதற்கு உதவ உலகம் கடமைப்பட்டிருக்கிறது. – அம்பேத்கர்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக