ஜே.என்.யு மாணவர்கள் நடத்திய அப்சல்குரு நினைவு கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதாக ஜீ டிவி வீடியோ வெளியிட்டு மாணவர்களை தேச துரோகிகளாக சித்தரித்து வருகிறது. கூடவே அருகிலேயே ராணுவ வீரர்களின் படங்களையும் வெளியிட்டு மாணவர்களுக்கு எதிராக தேசிய வெறியை பரப்பு வருகினறன. ஆனால் இந்த வீடியோக்கள் தங்களால் சோடிக்கப்பட்ட ஒன்று என்றும் அந்த குற்ற உணர்ச்சியின் உந்துதலில் தான் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்திருக்கிறார் ஜீ டிவி பத்திரிகையாளர் விஷ்வா தீபக்.
மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின் ஊடகங்களின் திரைமறைவில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் தமிழாக்கம் இது. மோடி அரசையும், ஜெயா அரசையும் நக்கிப் பிழைக்கும் நவநாகரீக நெறியாளர்கள், சானல்கள், தினசரிகள், நடுப்பக்க ஆசிரியர்களைக் கொண்ட தமிழ் கூறும் ஊடக தீயுலகில் இத்தகைய குற்ற உணர்ச்சி கொண்டவர்கள் அரிது என்பதாலும் தீபக்கின் இந்த கடிதம் முக்கியமானது.
ஒரு வருடம், நான்கு மாதங்கள், நான்கு நாட்கள் கடந்த நிலையில் உங்களை விட்டு விலகும் நேரம் எனக்கு வந்திருக்கிறது. நான் முன்பே செய்திருக்க வேண்டிய ஒன்று இது. என்றாலும் இப்போது செய்யவில்லை எனில், என்னை என்னால் மன்னிக்கவே முடியாமல் போகும்.

விஷ்வா தீபக்
கோபம், எரிச்சல் மற்றும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல இது. நன்கு சீராய்ந்து எடுத்த முடிவை பற்றியே சொல்ல வருகிறேன். ஊடகவியலாளனாகவும், குடிமகனாகவும் இருந்த என்னை பயன்படுத்திக் கொண்டு கண்மூடித்தனமான தேசியவெறி நஞ்சு பரப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போருக்குள் இந்த நாடு தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியக் குடிமகன் என்ற பொறுப்புணர்வாலும், என்னுடைய பணி சார்ந்த கடமையாலும் இந்த நஞ்சு பரவுவதை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெருங்கடலை ஒரு ஓடத்தில் கடப்பதற்கு ஒப்பானது இது என்று எனக்கு நன்கு தெரியும். எனினும், நான் எனது பயணத்தை தொடங்க வேண்டும். அதன் பொருட்டு ஜெ.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை ஒரு சாக்காக வைத்து பரப்பப்படும் கண்மூடித்தனமான தேசியவாத உணர்ச்சியை ஆதரித்தது மற்றும் தூண்டி விடுதல் ஆகியவற்றில் நாம் ஆற்றிய பங்கை எதிர்த்து விலகுகிறேன். இந்த விலகல் கடிதத்தை தனிப்பட்ட முரண்பாடு காரணமாக எடுக்கப்பட்டதென கருத வேண்டாம் என்றும் விரும்புகிறேன்.
எந்த வகையிலும் இந்த முடிவு தனிப்பட்ட ரீதியிலானது அல்ல. இதுவொரு பணிசார்ந்த கடமை, சமூக உணர்வு மற்றும் இறுதியாக ஒரு வகையான தேசப்பற்று. கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று நிலைகளில் பல முறை தோல்வியடைந்ததை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
2014 மே மாதத்துக்கு பிறகு, நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து ஏறக்குறைய அனைத்து செய்தி அரங்குகளிலும் மதவாதம் புகுந்து விட்டது என்றாலும் நமது நிறுவனத்தில் அது மோசமாகி விட்டது. நான் சற்று கடுமையான சொற்களை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கோருகிறேன். அதே நேரத்தில், அதை சொல்ல உள்ளபடியே என்னிடம் வார்த்தைகள் வேறில்லை. எதற்காக செய்திகள் அனைத்தும் மோடியின் கோணத்தில் எழுதப்படுகின்றன? மோடி அரசின் நிகழ்ச்சிநிரலை முன்மொழிவது தான் செய்திகள் எழுதப்படுவதன் நோக்கம் என்றாகியுள்ளது.
நாமெல்லாம் ஊடகவியலாளர்களா? என்று மிகத் தீவிரமாக சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விட்டேன். அரசின் ஊதுகுழல் மற்றும் ஒப்பந்த கொலையாளிகளாக நாம் மாறிவிட்டதை போன்று உணர்கிறேன். மோடி இந்த நாட்டின் பிரதமர். அவர் என்னுடைய பிரதமரும் கூட. ஆனால், ஒரு ஊடகவியலாளனாக மோடி வழிபாட்டை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்னுடைய மனசாட்சி எனக்கெதிராக பிரளயம் செய்ய ஆரம்பித்து விட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லாதது போன்றிருக்கிறது.
ஒவ்வொரு செய்திக்கு பின்னாலும் ஒரு திட்டம் மறைந்து இருக்கிறது. ஒவ்வொரு செய்தியின் நோக்கத்திலும் மோடி அரசு எவ்வளவு பெரிது என்று காட்டும் நோக்கம் இருக்கிறது. ஒவ்வொரு விவாதமும் மோடியின் எதிரிகளை சுட்டு வீழ்த்தும் முயற்சியாக இருக்கிறது. ‘தாக்குதல்’, ‘போர்’ ஆகியவற்றுக்கு குறைந்த வார்த்தைகள் ஏற்கவியலாததாக மாற்றப்பட்டு உள்ளது. என்ன இதெல்லாம்? கொஞ்சம் நின்று யோசித்த போது, நான் பைத்தியக்காரனாகி விட்டதை போன்று உணர்ந்தேன்.
அறமற்றவர்களாக, நியாய உணர்வற்றவர்களாக, வெறுக்கத்தக்கவர்களாக நாங்கள் ஏன் மாற்றப்பட்டோம்? இந்த நாட்டின் தலைசிறந்த ஊடக நிறுவனத்தில் பயின்று, பெருமைமிகு நிறுவனங்களான பி.பி.சி, ஆஜ்தக் மற்றும் ஜெர்மனியின் டியூச் வெல் போன்றவற்றில் பணிபுரிந்து விட்டு இன்று மக்கள் என்னை, ‘சீ இவன் ஒரு செய்தி ஆசிரியன்’ என்று கூறுமளவு மாறி விட்டிருக்கிறேன். எங்கள் நேர்மை உடைந்து நொறுங்கி கிடக்கிறது. இதற்கு பொறுப்பேற்றுக் கொள்பவர் யார்?
நான் எவ்வளவு சொல்ல வேண்டும்? ஒரு எதிர் பிரச்சாரம் டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எதற்காக இது? நீர் மற்றும் மின்விநியோகம், ஒற்றை – இரட்டை வண்டிகளை இயக்குவது போன்ற மக்களுக்கு பயன்படும் அடிப்படை திட்டங்கள் கூட இழிவுபடுத்தப்பட்டது. கேஜ்ரிவாலுடன் முரண்படுவது மற்றும் விமர்சிப்பது ஒருவரின் முழு உரிமை தான். ஆனால், கேஜ்ரிவாலை ஆளுமைக் கொலை செய்வது ஒரு ஊடகவியலாளரின் வேலையல்ல. கேஜ்ரிவாலுக்கு எதிராக வெளியிட்ட எதிர்மறை செய்திகளை அடுக்க ஆரம்பித்தால் அவை பல பக்கங்களுக்கு நீளும். ஊடகத்துறையின் அடிப்படை விழுமியங்களான ‘நடுநிலை’ மற்றும் நேயர்களுக்கு நேர்மையாக இருத்தல் ஆகியவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லையா?
தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை பிரச்சினையிலும் இது தான் நடந்தது. முதலில் அவரை ‘தலித் கல்விமான்’ என்றழைத்தோம். பின்னர் ‘தலித் மாணவர்’ என்றோம். ரோகித்தை தற்கொலைக்கு துரத்தியதில் ஏ.பி.வி.பி.யின் தலைவர் மற்றும் பா.ஜ.க.வின் பங்காரு தத்தாத்ரேயாவின் தொடர்பு பற்றிய சந்தேகம் தீரவில்லை. (அனைத்தும் இப்போது தெளிவாகி விட்டது.) ஆனால், ஒரு ஊடக நிறுவனமாக எங்கள் பணி பிரச்சினையை நீர்த்துப் போக செய்வதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாதுகாவலர்களாக செயல்படுவதிலும் இருந்தது.
உதயப் பிரகாஷ் மற்றும் இதர முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திரும்ப அளித்ததற்கு காரணமான சகிப்பின்மை தொடர்பான விவாதத்தில், பிரச்சினையை விட்டுவிட்டு எழுத்தாளர்களை கேள்வி கேட்கலானோம். லட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் உதயப் பிரகாஷை எடுத்துக் கொள்வோம். நம் வாழ்கைத் தேவைக்காக பேசுகின்ற மொழியின் பெருமை அவர். அவரது நூல்கள் நமது வாழ்க்கையை, நமது கனவுகளை, நமது தத்தளிப்புகளை உரைப்பவை. எனினும், நாம் இவை அனைத்தையும் ஒரு சதியின் அங்கமாக நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறோம். நான் அப்போது புண்பட்டேன். எனினும், சமாதனப்படுத்திக் கொண்டேன்.
ஆனால், எவ்வளவு காலத்துக்கு நான் சகித்துக் கொள்ள வேண்டும்? மற்றும் எதற்காக?
என்னால் சரியாக தூங்க இயலவில்லை. குற்ற உணர்ச்சியாக இருக்கலாம். ராஜதுரோகம் புரிந்த துரோகி என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு. ஊடகவியலாளர்களாக நமக்கு ஒருவரை துரோகி என்றழைத்து சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் வழங்கும் உரிமை இருக்கிறதா? அது நீதிமன்றங்களின் வரம்புக்கு உட்பட்டதல்லவா?
கண்ணையாவுடன் சேர்த்து நிறைய மாணவர்களை நாம் துரோகிகளாகவும், தேசவிரோதிகளாகவும் மக்களின் முன் நிறுத்தியுள்ளோம். அவர்களில் ஒருவர் நாளை கொல்லப்பட்டால், யார் எதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்? நாம் வெறுமனே ஒருவரின் கொலை அல்லது சில குடும்பங்களின் அழிவுக்கான சூழ்நிலையை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு முழு கலவரத்துக்கு உகந்த சூழலையும், தேசத்தை உள்நாட்டுப் போருக்கு தள்ளும் நிலைமையும் உருவாக்கி உள்ளோம். என்ன மாதிரியான தேசப்பற்று இது? என்ன மாதிரியான ஊடக அறம் இது?
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்ன சொன்னாலும், அதை செய்யும் ஊதுகுழல்களா நாம்? அந்த வீடியோவில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கங்கள் எதுவுமில்லை. எனினும், மடத்தனமும், வன்முறையும் பரவுவதற்கு அதனை திரும்ப, திரும்ப ஒளிபரப்பினோம். இருட்டிலிருந்து ஒலிக்கும் சில குரல்கள் கண்ணையா குமார் மற்றும் அவருடைய தோழர்களுடையது என்று எதை வைத்து நம்பினோம்? நமது பாரபட்சம் காரணமாக ‘இந்திய நீதிமன்றங்கள் வாழ்க’ முழக்கம் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்பதாக கேட்டுள்ளது. அரசாங்கத்தின் வழியில் நாம் சிந்திக்கத் தொடங்கியதால் மாணவர்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் சில குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. புலனாய்வு அமைப்புகள் வேலையை செய்ய அனுமதித்து விட்டு அவற்றின் முடிவுக்கு காத்திருப்பது தான் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?
உமர் காலித்தின் சகோதரியை தேசத்துரோகியின் சகோதரி என்றும், வன்புணர்வு செய்வோம் என்றும், முகத்தில் ஆசிட் வீசுவோம் என்றும் அச்சுறுத்துகிறார்கள். அது போன்ற ஒரு சம்பவம் நடந்தால், நாம் அதற்கு காரணமாக இருக்க மாட்டோமா? கொஞ்சம் யோசியுங்கள். கண்ணையா குமார் ஒரு முறையல்ல; ஆயிரம் முறை சொல்லி விட்டார் – தேசவிரோத முழக்கங்களை ஆதரிக்கவில்லை என்று. அரசின் அடியொற்றி சிந்திப்பதால், அவர் விளக்கங்கள் யாருக்கும் சென்று சேரவில்லை. கண்ணையாவின் வீட்டை ஒருமுறையாவது உன்னிப்பாக கவனித்திருப்போமா? அவர் வீடு ஒரு ‘வீடே’ அல்ல. இந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் கையறு நிலையை எடுத்துக் கூறும் ஒரு குறியீடு. அவர்களின் நம்பிக்கைகள் ஒவ்வொரு விநாடியும் புதைக்கப்படும் கல்லறைகள் அவை. ஆனால், நாம் குரடர்களாகிப் போனோம்.
இதை சொல்ல நான் வருத்தப்படுகிறேன். ஆனால், என்னை போன்ற பலருடைய வீட்டு நிலைமைகள் இது தான். இந்தியாவின் கிராம வாழ்க்கை அழகற்றது. அதன் சிதிலமடைந்த சுவர்களிலும், பலகீனமான பழைய வாழ்க்கையிலும் தேசியவாத நஞ்சு அதன் விளைவுகளை பற்றி கவலை கொள்ளாது ஏற்றப்பட்டுள்ளது. முடமாகிப் போயிருக்கும் கண்ணையாவின் தந்தை அதிர்ச்சியில் மரணித்தால், அதற்கு நாம் பொறுப்பில்லையா? இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு மட்டும் கண்ணையாவின் குடும்பம் பற்றிய செய்தியை வழங்கவில்லை என்றால், அவர் எந்த உத்வேகத்திலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பேசுகிறார் என்ற விபரம் அறியப்படாமலே போயிருக்கும்.
ராமநாமா மற்றும் பலரது நிலைமையும் இது தான். மிகவும் சாதாரணப் பின்னணியிலிருந்து வறுமைக்கெதிராகப் போராடி, இந்த பையன்கள் ஜெ.என்.யூ.வில் அரசின் உதவித் தொகையை பெற்று கல்வியை பெறுகிறார்கள். தங்களின் முன்னேற்றத்தில் இருக்கும் உறுதிப்பாட்டை நீங்கள் அவர்களிடம் காணலாம். டி.ஆர்.பி.க்கு தங்களை விற்பனை செய்யும் நபர்கள் அவர்கள் வாழ்க்கையை ஏறக்குறைய சிதைத்து விட்டார்கள்.
நாம் அவர்கள் அரசியலையும், கருத்துக்களையும் தீவிரமானவை என்று கூறி நிராகரிக்கலாம். ஆனால், அவர்கள் எப்படி தேசதுரோகிகள் ஆனார்கள்? நீதிமன்றங்கள் வழங்கும் நீதியை இந்த பிரச்சினையில் நாம் எப்படிப் பெறப் போகிறோம்? டில்லி போலீசின் முதல் தகவல் அறிக்கையில் ஜீ செய்திகள் தொலைக்காட்சியின் பெயர் இருப்பது வெறும் தற்செயலா? அல்லது, டில்லி போலீசுக்கும், நமக்கும் இருக்கும் நெருங்கிய பிணைப்பின் வெளிப்பாடா? மக்களுக்கு என்ன பதிலை வழங்கப் போகிறோம்?
எல்லாவற்றுக்கும் மேலாக ஜெ.என்.யூ அல்லது ஜெ.என்.யூ மாணவர்களுக்கு எதிராக செயல்பட நமக்கு என்ன உரிமை இருக்கிறது? ஜனநாயகம், பன்முகத்தன்மை, நவீன சிந்தனைகள் மற்றும் முரண்பட்ட கருத்துக்களின் சகவாழ்வு ஆகியவற்றால் ஜெ.என்.யூவை இந்தியாவின் ஏதேன் தோட்டம் போன்று உணர்கிறேன். ஆனால், இப்போது அதை நாம் சட்ட விரோதிகள் மற்றும் தேசவிரோதிகளின் குகை என்றழைக்கிறோம்.
சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டிருப்பது ஜெ,என்.யூ.வா அல்லது இடதுசாரி தலைவர் ஒருவரை கோர்ட்டில் வைத்து தாக்கிய பா.ஜ.க தலைவர்களா? என்றறிய விரும்புகிறேன். பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு இந்திய கம்யூனிஸ்ட் தலைவரை தெருவில் வைத்து அடித்து துவைக்கிறார். போலீஸ் அதனை வேடிக்கை பார்க்கிறது. தாக்குதலை திரையில் நாம் பார்த்து விட்டு ‘ஓ.பி.ஷர்மாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை’ குறித்து புகார் வாசிக்கிறோம். ஏன் இதனை ‘புகார்கள்’ என்று எழுத வேண்டும் என்று கேட்டேன். மேலிருந்து அறிவுறுத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது. எப்படி நமக்கு மேலிருப்பவர் மிகவும் தாழ்ந்து போனார்? மோடிக்கு எதிராக சொல்லப்படுவதாக இருந்தால்’ எப்படி சொல்லப்படும் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனால், நிலைமை எந்தளவுக்கு முற்றியிருக்கிறது என்றால், ஒ.பி.ஷர்மா மற்றும் ஏ.பி.வி.பி ஊழியர்களை காப்பாற்றுகின்ற வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
என்னுடைய இருப்பை, ஊடகப் பணியை மற்றும் கையறு நிலையை நிந்திக்க ஆரம்பித்து விட்டேன். இதற்காகவா பல்வேறு வேலைகளை விட்டுவிட்டு ஊடகவியலாளன் ஆனேன். இல்லை தான்.
இப்போது என் முன்னால் இரண்டு வழிமுறைகளே உள்ளன. ஒன்று, என் ஊடகப் பணியை விட்டு விடுவது. இரண்டாவது, இந்த சூழலிலிருந்து என்னை விடுவித்துக் கொளவது. நான் இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறேன். நான் எந்த முடிவையும் எடுத்து விடவில்லை. என்னுடைய பணி மற்றும் அடையாளத்துக்காக சில கேள்விகளை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு சின்ன விசயம். ஆனால், அதன் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இது மற்றவர்களுக்கு குறைவானதாகவும் எனக்கு பெரிதாகவும் இருக்கிறது. எனக்கு வேறெங்கும் வேலை கிடைக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. நான் சொன்னவற்றை எனக்குள்ளே பூட்டி வைத்திருந்தால் ஒரு லட்சம் வரையிலும் மாத மாத ஊதியம் பெற்றிருப்பேன். என்னுடைய சம்பளம் மிக நன்று. ஆனால், அது பல்வேறு சமரசங்களுடன் கைக்கு வந்து சேர்கிறது. என்னால், அதை பெற முடியவில்லை. நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்தவன். சம்பளமின்மையின் இடர்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருப்பவன். எனினும் எனது உணர்வை இழக்க விரும்பவில்லை.
நான் மறுபடியும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட புகார்கள் எதுவுமில்லை. நிறுவனம் சார்ந்த மற்றும் ஆசிரியர் குழுவின் கொள்கைகள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இது அந்த கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன். ஒரு செய்தி நிறுவனம் தனது வலதுசாரி கண்ணோட்டத்தை புகுத்த விரும்பினால், தனிநபர்களும் அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிலைகளை சுதந்திரமாக பேசுவது முக்கியமானது என்று கருதுகிறேன். ஒரு ஊடகவியலாளனாக என்னுடைய பணி என்பது நடுநிலையாக நடந்து கொள்வது. ஆனால், ஒரு தனிநபராகவும் ஒரு விழிப்புணர்வடைந்த குடிமகனாகவும் எனது பாதை இடதுசாரி தன்மை கொண்டது. அது கட்சி அலுவலகங்களில் காண்பது அல்ல. என் அன்றாட வாழ்க்கையில் காண்கிறேன். இதுவே எனது அடையாளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக