100 சீட், முதல்வர் வேட்பாளர்,
மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த்!
தமிழக அரசியல் லேட்டஸ்ட் நிலவரம்
--------------------------------------------------------
''நான்கு நாட்களாக விருப்பமனு போட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நேர்காணலுக்கு வருபவர்களிடம் எல்லாம், ‘எந்த கூட்டணிக்குப் போனால் சரியாக இருக்கும்?' என்ற கேள்வியை தவறாமல் கேட்கிறார். அதில், பலரும் திமுக என்றும் சிலர் மக்கள் நலக் கூட்டணி என்றும் சொல்லி வருகிறார்கள். பிஜேபி-க்குப் போனால் எப்படி இருக்கும்? என்று கேட்டால், ‘அது, சரியா இருக்காது கேப்டன்’ என்றே பதில் வருகிறதாம்! பிஜேபி கூட்டணிக்குப் போகவேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருப்பது பிரேமலதா மட்டும்தான். ‘பிஜேபி கூட்டணிக்குப் போனால் கேட்பது கிடைக்கும். ஆனால், ஜெயிப்பது கஷ்டம்’ என்பதை விஜயகாந்த் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார். அதனால்தான் யோசனையில் இருக்கிறார். திமுக-வில் விஜயகாந்த் கேட்டது 60 சீட். ஆனால், அவர்கள் 52ஐ தாண்டி இன்னும் வரவே இல்லை. இதற்குமேல் வருவார்கள் என்ற நம்பிக்கையும் விஜயகாந்துக்கு குறைந்துவிட்டது. அதனால், ஒரு முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால்தான் மக்கள் நலக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது!
மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது விஜயகாந்த் தரப்பில் 100 சீட்டும் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. சற்று யோசனைக்குப்பிறகு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்களாம். மீதி உள்ள 134 தொகுதிகளுக்கான பங்கீடும் முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஐயா வைகோவுக்கு 40 சீட், கம்யூனிஸ்ட்டுகளுக்கு 35 சீட், அண்ணன் திருமாவளவனுக்கு 30, ஜி.கே.வாசனுக்கு 29 என்பது அந்த உடன்பாடாம். திருச்சியில் நடந்த மதிமுக பொதுக்குழு நடந்த சமயத்தில்தான் இந்த விஷயம் பேசி முடிக்கப்பட்டதாம். அன்று பொதுக்குழுவில் பேசிய ஐயா வைகோ, ‘தேர்தல் கூட்டணி சில சமரசங்களை எட்டியுள்ளது. அது எப்படி இருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். கூட்டணி முடிவு செய்யப்பட்டதை மனதில் வைத்துத்தான் அப்படி பேசியிருப்பார் என்று சொல்கிறார்கள். ஆக, மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். சீக்கிரமே அறிவிப்பு வந்துவிடும்’’
‘‘ஆரம்பத்தில் இருந்தே திமுக வேண்டாம் என்று அடம்பிடித்தவர் பிரேமலதாதான். விஜயகாந்த் கேட்டதுக்கு திமுக ஒப்புக்கொண்டிருந்தால், அவர் பிரேமலதாவை சமாதானப்படுத்தி இருப்பார். கேட்டது கிடைக்கவில்லை என்றதும், அது பிரேமலதாவுக்கு வசதியாகப் போய்விட்டது. மக்கள் நலக் கூட்டணி என்பது பிரேமலதா நினைக்கவில்லை. அவரது டார்கெட் எல்லாமே பிஜேபி-யை நோக்கியே இருந்தது. நேர்காணலுக்கு வந்தவர்கள், திமுக கூட்டணி என்று சொன்னபோதெல்லாம், விஜயகாந்த் முகம் மாறியிருக்கிறது. ‘அண்ணி, பிஜேபி-க்கு போகலாம்னு சொல்றாங்களே...’ என்றும் விஜயகாந்த் கேட்டிருக்கிறார். ஆனால், யாருமே பிஜேபி-க்கு ஆதரவாகப் பேசவே இல்லை. அதைச் சொல்லித்தான் பிரேமலதாவை சமாதனப்படுத்தி இருக்கிறார்கள்’’
‘‘அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சொல்லி வருகிறார். விஜயகாந்த்தை எப்படியாவது பிஜேபிக்கு இழுத்துவிட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை. அதற்காக பிரேமலதாவுடன் தொடர்ந்து பேசியவரும் தமிழிசைதான். விஜயகாந்த் வீடும், தமிழிசையின் வீடும் பக்கத்தில்தான் இருக்கிறது. அடிக்கடி இருவரும் பேசிக்கொள்வார்கள். அந்த நட்பில்தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்தது. தேமுதிக இல்லை என்ற முடிவுக்குவந்தால், தமிழிசை அடுத்து குறிவைப்பது பாமக-தான். அங்கே முதல்வர் வேட்பாளர் ஏற்கெனவே தயாராக இருக்கிறார். அவர்கள் தலைமையில் பிஜேபி தேர்தலைச் சந்திக்கும். யாருடனும் கூட்டணி இல்லை என்றுதான் ராமதாஸ் சொன்னாரே தவிர, யாரையும் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்லவில்லை. அதனால் பிஜேபிக்கு இப்போது இருக்கும் ஒரே சாய்ஸ் பாமக மட்டும்தான்!
‘‘விஜயகாந்த் கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழிசை உள்ளிட்ட சிலர் விரும்பினாலும் அதிமுக கூட்டணிதான் அவர்களின் டார்கெட் ஆக இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடக்கிறதல்லவா... அங்கேதான் அதிமுக-வுக்கு செக் வைத்திருக்கிறது பிஜேபி. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை ஜெயலலிதாவின் பிறந்தநாளில் இருந்தே பிஜேபி ஆரம்பித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல கார்டனுக்கு ஃபோன் செய்தவர்களில் வெங்கய்யா நாயுடுவும் ஒருவர். மோடி, ரோசய்யா, வெங்கய்யா நாயுடுவின் அலுவலகங்களில் இருந்து முதலில் கார்டனுக்கு ஃபோன் வரும். சம்பந்தப்பட்டவர் முதல்வருடன் பேசவேண்டும் என்ற தகவல் சொல்வார்கள். கார்டனில் இருக்கும் பூங்குன்றன் அந்தத் தகவலை ஜெயலலிதாவுக்கு இண்டர்காமில் சொல்வார். ஜெயலலிதாவும் பேச விரும்பினால், நேரம் சொல்வார்கள். அந்த நேரத்தில் ஃபோன் வரும். அது, ஜெயலலிதாவுக்கு இணைக்கப்படும். இதுதான் கார்டன் நடைமுறை. அப்படித்தான் பிறந்தநாளில் வெங்கய்யா நாயுடு பேசியிருக்கிறார். அன்று கார்டனுக்கு வந்த ஃபோனில் அதிக நேரம் பேசியவர் வெங்கய்யா நாயுடுதான் என்று சொல்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு, கூட்டணி என்று பேச்சு நீண்டிருக்கிறது. அதன்பிறகு, ஜெயலலிதாவும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. விரைவில் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட சில பிஜேபி தலைவர்களை கார்டனில் பார்க்கலாம்!’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக