திங்கள், 15 டிசம்பர், 2014

சாதி வாரி கணக்கெடுப்பின் பின்புல அரசியல்



          சாதி வாரி கணக்கெடுப்பின் பின்புல அரசியல்

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று ஒரு பிரிவினரும், இல்லையில்லை சாதிவாரி கணக்கெடுப்பு என்பதெல்லாம் கூடாது என்று ஒரு பிரிவினரும் அறிக்கைப் போர் நிகழ்த்துகிற சூழலில் பொதுவாகவே சாதிவாரி கணக்கெடுப்பு நல்லதா? கெட்டதா? அதனால் யாருக்கு பயன்? யாருக்கு கெடுதல்? இட ஒதுக்கீட்டு முறையை சாதி வாரி கணக்கெடுப்பின் மூலமே சரியான அளவுகோலின்படி அமல்படுத்தமுடியும் என்கிற கூற்றில் உள்ள உண்மை தன்மை என்ன என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் ழுவது இயல்பான ஒன்று தான்.
சாதி வாரி கணக்கெடுப்பின் அவசியம் / அவசியமின்மை குறித்து அலசும் முன் இட ஒதுக்கீட்டு முறை என்ன நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது என்ற புரிதலை நமக்குள் வளர்த்துக் கொள்வது அவசியமாகப்படுகிறது.
ஏன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து உரையாற்றுகையில் நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் ;
" ‘சாதியற்ற இந்துக்கள்'
என்று இந்நாட்டில் எவரும் இல்லை.
ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு.
பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார்
அல்லது ஒரு தச்சன் இவர்களில்
யாரும் சாதியை விட்டு வாழும்
இந்துவாக இல்லை.
இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள்,
ஒடுக்கப்பட்ட சாதியினராக
இந்து மதத்தால்
புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே,
இந்து மதத்தின் பன்னெடுங்கால
கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக,
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம்
சில உரிமைகள் வழங்குவது மிகவும்
அவசியமாகிறது. "
இந்திய சமூகத்தின் சாதிய சூழலையும் இட ஒதுக்கீட்டிற்கான நோக்கத்தையும் மேற்கண்ட பத்தியானது தெளிவாக காட்டுகிறது. இந்துவாக பிறந்த எவரும் சாதியின் கோரப் பிடியிலிருந்து தப்பவே முடியாது என்பதை அறுதியிடும் அண்ணல் அம்பேத்கர் அவ்வாறு சாதியினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணமாகவும் சமூகத்தின் சமநிலை தோன்றும்வரையிலான ஒரு இடைக்கால ஏற்பாடாகவுமே அண்ணல் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பற்றி குறிப்பிடுகிறார். ஆக, இட ஒதுக்கீட்டின் நோக்கம் இருக்கிற மக்கள் எண்ணிக்கையை பிரதிப்படுத்துவது அல்ல, சமூகத்தில் சாதியானால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும் ஏற்ப வழங்கப்படவேண்டிய இடைக்கால தீர்வு முறை தான் என்ற உண்மை விளங்கும்.
இந்த இட ஒதுக்கீட்டு நோக்கத்தை சாதி வாரி கணக்கெடுப்பு நிறைவு செய்யுமா? அல்லது நிர்மூலமாக்குமா?

சரி, வாதத்திற்கு சாதி வாரி கணக்கெடுப்பு தேவை என்றே வைத்துக் கொள்வோம்.
தற்போதைய நிலவரப் படி, தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC) - 30%, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் (MBC) - 20%, ஆதி திராவிடர் (SC) - 18% மற்றும் பழங்குடியினர் (ST) - 1% என ஆக 69% இட ஒதுக்கீட்டு முறை அமலில் இருந்து வருகிறது.
இட ஒதுக்கீடு 50% சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியதையும் அதன்பின் தமிழ்நாட்டில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு , குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெற்று இப்போதிருக்கிற 69% சதவீத இட ஒதுக்கீட்டு முறையே தொடர்ந்து நீடிப்பதற்கான சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது என்பதெல்லாம் நாமெல்லாரும் அறிந்த விஷயமே.
ஆனாலும் கூட இட ஒதுக்கீட்டு முறைக்கெதிராக நாளொரும் பொழுதாக தினம் தினம் புதுப்புது வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும் தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டு முறை அங்குள்ள மக்களின் சாதி தொகுப்பு விகிதாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவே அறுதியிட்டு சொன்ன பின்னும் சிக்கல்கள் இன்னும் முழுமையாக தீர்ந்தபாடில்லை.
நாமெல்லாரும் அறிந்த, ஆனால் நம் நினைவில் கொள்ள மறுக்கிற ஒரு விஷயத்தில் தான் சாதிவாரி கணக்கெடுப்பின் அரசியல் சூட்சுமமே அடங்கியுள்ளது. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்கள் சமூக ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களாகவே எல்லா நிலைகளிலும் பார்க்கப்பட்டாலும் கூட அவர்கள் அரசாங்க பதிவேடுகளில் மட்டும் இன்னமும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவே குறிக்கப்படுகிறார்கள். நான் கிறிஸ்தவ ஆதி திராவிடனாக இருந்த போதிலும் சான்றிதழ்களில் மதம்மாறிய என்ற வார்த்தை அதனோடு சேர்க்கப்பட்டு BC வகுப்பினராகவே அடையாளப்படுத்தப்படப்படுகிறேன்.
ஆனால் உண்மையில் அரசாங்க பதிவேடுகளை தவிர வேறு எங்கும் எந்த சூழ்நிலையிலும் இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது நாம் எல்லோருமே நன்கு அறிந்த உண்மையாகும். இப்படியான சூழலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால் என்ன நிகழும்? தலித் கிறிஸ்தவர்களும் தலித் இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கணக்கெடுப்பு செய்யப்படுவார்கள். இதனால் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாகவே தொடர்கிற அவர்களுக்கான அரசியல் சட்ட பாதுகாப்பும் உரிமைகளும் முற்றிலுமாக மறுக்கப்படும்.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுகிற அதே வேளையில் தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டு அவர்கள் தங்கள் எண்ணிக்கையை விட அதிக அளவு இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பொய்யானது உண்மைநிலவரமாக பிரதிப்பலிக்கக்கூடிய அபாய சூழல் உருவாகும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தாழ்த்தப்பட்டவர்களை மறைமுகமாக, ஆனால் மிக கூர்மையாக தாக்கக்கூடிய மற்றொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இட ஒதுக்கீடு 50% சதவீதத்திற்கு மேல் மிக கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் பின் தமிழக அரசு சிறப்புச் சட்டத்தின் மூலம் 69% சதவீத இட ஒதுக்கீட்டை தொடர செய்ததையும் அறிவோம் தானே! இப்படியான சூழலில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டவர்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருக்கிறதென சாதி கணக்கெடுப்பில் தெரிய வருவதாக வைத்துக் கொள்வோம்.
எனில் அவர்களுக்கு திருத்தப்பட்ட அதிகப்படியான இட ஒதுக்கீட்டை எதிலிருந்து பிரித்து தருவார்கள்? இதற்கு மேல் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டையிட்டிருக்கிறது. ஆக பொது பிரிவினருக்கான அளவை குறைத்து அவர்களுக்கு பிரித்து வழங்குவது சாத்தியமே இல்லாத ஒன்று. அப்படி எனில் வேறு என்னதான் வழி?
தலித் கிறிஸ்தவர்களும் தலித் முஸ்லீம்களும் மட்டுமல்லாது சமூக சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்தும் இந்து மதத்திற்குள்ளேயே எண்ணற்ற சாதியினர் தங்களை பட்டியலினத்தவராக, பழங்குடியினராக அறிவிக்க வேண்டுமென போராடி வருகிறார்கள். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல, மேற்கண்ட அனைத்து பிரிவினரும் அரசு பதிவேடுகளில் BC அல்லது MBC வகுப்பினராகவே குறிக்கப்படுகிறார்கள். இப்படியான சூழலில் நடக்கிற சாதிவாரிக் கணக்கெடுப்பானது ஒருபோதும் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக அமையாது.
மேலும் இந்த சூழ்ச்சியின் மூலம் பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு காட்டப்படும் நிலை இருப்பதால் அதையே அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டு அளவை குறைத்து அதை மற்ற சாதி பிரிவினருக்கு அளிப்பார்கள். இதுதான் இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் பின் ஒளிந்துள்ள ஆகப் பெரிய சூழ்ச்சி அரசியல்.
வெளிப்பார்வைக்கு மக்களின் எண்ணிக்கை அளவிற்கு ஏற்ப அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அளிப்பதுதானே முறையான செயல் என தோன்றும் மிக நேரிய நடவடிக்கைப் போல தோன்றினாலும் ஆதிக்க சாதிகளின் தாழ்த்தப்பட்டவர்கள் மேலான உள்ளார்ந்த வன்மமே இதன் பிரதான கூறாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட வடக்கு மாங்குடி என்ற ஊரில் எனக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. வடக்கு மாங்குடி என்றதுமே உங்களுக்கு புரிந்திருக்கும் , நான் சொல்ல வருவது அந்த தேர்தலின் போது எரிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளை பற்றித்தான் என. தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் சூறையாடப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளைப் பற்றியும் நடந்தேறிய சாதியப் படுகொலைகள் பற்றியும் நான் மீண்டும் விவரிக்கத் தேவையில்லை.
மிக சமீபத்தில் கூட நெய்வேலி அருகே இருபதுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நான்கில் ஒருவர் தீண்டாமையை கடைப்பிடிப்பதாக சில நாட்களுக்கு முன் வெளியான தேசிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
இப்படியான தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் எரிக்கப்படுவதும் அவர்களுடைய உடைமைகள் சூறையாடப்படுவதும் பல வேளைகளில் அவர்கள் படுகொலைகளுக்குள்ளாவதும் எதை காட்டுகிறது? அங்கொன்றும் இங்கொன்றுமாக தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறுவதை காண சகியாத ஆதிக்க சாதி மனநிலையே இவற்றுக்கெல்லாம் மூல காரணம். சாதி படிநிலையில் தன்னைவிட மிக கீழ்நிலையிலுள்ள, தனக்கும் தன் குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறைகளாய் கைகட்டி சேவகம் செய்த தாழ்த்தப்பட்டவன் தனக்கு சமமான நிலையை எட்டுவதா என்ற காழ்ப்புணர்ச்சி தான் ஆதிக்க சாதிகள் தாழ்த்தப்பட்டவர்களை எதிரிகளாக பார்க்கக்கூடிய நிலையை உருவாக்குகிறது.
தொடக்கத்தில் பார்த்தபடி இந்து சமூகத்தில் சாதிக்கு அப்பாற்பட்டவரென எவருமில்லை. ஆனால் அனைத்து வகை சாதியினரும் ஒரே அளவுகோலிலான சாதிய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் நிழல் பட்டாலும் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பல இடைநிலைச் சாதியினர் ஜமீன்தார்களாகவும் பண்ணையார்களாகவும் நாட்டாமைகளாகவும் செல்வந்தர்களாகவும் வணிகப் பெருங்குடிகளாகவும் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். ஆக இரண்டு பிரிவினரையும் எந்த காரணத்தை முன்னிட்டும் ஒரே அளவுகோலின்கீழ் வைத்து மதிப்பிட முடியாது.
நாட்டில் ஏதோ ஒரு இயற்கை பேரழிவோ அல்லது எதிர்பாராதொரு பெரிய அசம்பாவிதமோ நடந்துவிட்டதென வைத்துக் கொள்வோம். மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஜனநாயக அரசானது, மக்கள் அந்த கொடிய நிகழ்வுகளிலிருந்து தங்களை மீட்டெடுத்து பழைய நிலைக்கு மீண்டும் புனரமைத்துக்கொள்ள ஏதுவாக நிவாரண இழப்பீடு வழங்குகிறது. அப்படியான நிவாரண இழப்பீடானது எல்லோருக்கும் ஒரே அளவிலா தரப்படுகிறது? ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட இழப்பை கணக்கீட்டு அதன் அடிப்படையிலேயே இழப்பீடு வழங்கப்படுகிறது.
சிலருடைய வீடுகளில் மரங்கள் மட்டும் முறிந்து விழுந்திருக்கலாம். சிலருடைய வீட்டிலோ குடும்பமே முற்றிலும் குலைந்து போய் பலத்த மனித உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம். இருவருக்கும் ஒரே அளவிளான இழப்பீடு என்பது மீண்டும் அவர்கள் தங்களின் பழைய நிலையை கட்டியமைத்துக்கொள்கிற நியாயமான செயலாகுமா?
அப்படியே சில குறிப்பிட்ட சாதியினர் சாதியினால் பகுதி அளவிலான இழப்பை சந்தித்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களோ சாதியினால் முற்றிலுமாக நிராதரவாக ஆக்கப்பட்டு மனித இனத்தினும், ஏன் விலங்கினும் கீழான நிலையில் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இழப்புகளை கணக்கில் கொள்ளாது வெறும் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சாதிவாரிக் கணக்கெடுப்பை நிகழ்த்தக்கூறுவதும் இப்படியான நியாயமற்ற செயலாகும். ஏனெனில் இட ஒதுக்கீட்டின் நோக்கம் மக்களின் எண்ணிக்கையை பிரதிபலிப்பது அல்ல, மக்கள் அனைவரும் சமநீதியோடு நடத்தப்படுவதற்கான தளத்தை ஏற்படுத்துவதே.

-          LEO JOSEPH D
-          dleokommedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக