திங்கள், 15 டிசம்பர், 2014

ஈழமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு பார்வை



  ஈழமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு பார்வை


பிரபாகரன் என்ற வார்த்தையிலிருந்தே இந்த பதிவை தொடங்குகிறேன். பிரபாகரன் ஈழத்தில் உள்ள தமிழர்களின் விடுதலைக்காக போராடிய ஒரு மாபெரும் தலைவர். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே அவர்தான் தலைவர் என்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம், அப்பட்டமான பொய். ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே முதலில் அவர் தலைவராக இல்லை என்பதே உண்மை. ஈழ தமிழர்களில் ஒரு பிரிவினர், அது பெரும்பான்மை பிரிவாகவும் இருக்கலாம், அவரை தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். இலங்கை என்ற சிறு நாட்டிலேயே கொழும்பு தமிழர்கள், யாழ்ப்பாண தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட பல பிரிவு இருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் பிரதிபலிப்பவராக பிரபாகரன் இருக்கவில்லை. சரி, அப்படியே அவர் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்குமே தலைவராக இருந்திருந்தாலும் அவரை எந்த நிலையிலும் உலகிலுள்ள ஒட்டு மொத்த தமிழர்களின் தலைவராக அடையாளப்படுத்த முடியாது. காரணம் பிரபாகரனே தனக்கான அப்படி ஒரு தளத்தை அமைத்துக் கொள்ளவில்லை.
இங்கு எழுதப்படாத சட்டமாக , பொதுவிதியாக ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதாவது தமிழ் உணர்வாளனாக என்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நான் நிச்சயம் பிரபாகரனை ஆதரிப்பவனாகத்தான் இருக்க வேண்டும், பிரபாகரன் வழுவா நிலை கொண்ட மகான் என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு பகிரங்கப்படுத்த வேண்டும். இப்படி தமிழ், தமிழர் நலன் என்று பேசுபவர்கள் தங்களின் பரந்த வட்டத்தை ஈழத்தை மட்டுமே சுற்றி அமைக்கிறார்கள். உலகின் வேறு எந்த பகுதியில் தமிழர்கள் துன்புற்ற போதும் இவர்கள் இரத்தம் கொதிப்பதில்லை, நரம்புகள் புடைப்பதில்லை. ஆனால் ஈழம் என்றதும் பாம்பாட்டியாக இவர்கள் நெளிய ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக மற்றவர்களும் ஆட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தப்பி யாரேனும் பிரபாகரனை விமர்சித்தால் அவர்களுக்கு அடுத்த நொடியே தமிழ் துரோகி பட்டம் கட்டப்படும். உண்மையில் இங்கு ஈழம் ஈழம் என்று கூவி ரத்தக் கவிச்சை அரசியல் செய்பவர்களை விடவும் ஈழத் தமிழர்களின் வரலாற்றில் வேறு துரோகிகள் இருக்க முடியாது. பிரபாகரனை எல்லோருக்குமான தலைவராக ஏற்பதற்கான எந்த கூறுகளும் அவரிடமில்லை என்பதையும் தாண்டி ஈழம் இங்கு பிரதான அரசியலாக்கப்படுவதன் பின்னனியில் உள்ள காரணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது தலையாயக் கடமை..
ஈழம் இங்கே பரபரப்பான அரசியலாக்கப்படுவதன் பின்னனி என்ன? அறிவார்ந்த அரசியல், உணர்ச்சிகர அரசியல் என்ற இரு பகுதிகள் உண்டு. பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்னெடுப்பது இந்த உணர்ச்சிகர அரசியலைத் தான்.
அறிவார்ந்த அரசியல் என்பது ஒருவனிடம் கேள்விகளை மட்டுமே எழுப்பி அவனையே அதற்கு விடை தேட வைப்பது, அவனாக சிந்தித்து எது சரி, எது தவறு என தெளிவதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பது.
உணர்ச்சிகர அரசியல் மூளையை மழுங்கடித்து உணர்ச்சிகளை தூண்டிவிட்டு தனக்கான ஆதாயத்தை தேடிக் கொள்வது. சிந்திப்பதற்கோ தானாக முடிவெடுப்பதற்கோ கேட்பவனுக்கு எந்த வாய்ப்பும் உரிமையும் அளிக்கப்படுவதில்லை.
தனக்கு கோஷமிடவும் கொடி கட்டவும் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகளாய் எப்போதும் தன் கட்டுக்குள் அடங்கி இருக்கவும் உணர்ச்சிகர அரசியலே சாதகமானதாக இருப்பதால் ஓட்டு பொறுக்கி கட்சிகள் அனைத்துமே இந்த உணர்ச்சிகர அரசியலையே முன்னெடுக்கின்றன.
அய்யகோ ஈழத்தைப் பாரீர் என்று அழுகையோடு பேசினாலோ, அந்த ராஜபக்சேவை தூக்கிலிடு என்று நரம்பு புடைக்க கண்கள் சிவக்க சவால் விட்டாலோ உணர்வால் ஆட்கொள்ளப்பட்டவர்களாக எளிதில் அதில் வசியமாகிவிடுகிறோம். கருணை, கோபம், வெறுப்பு, ஆவேசம் போன்ற உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் பலாபலன்களை தியாகி என்கிற சர்வநாமத்தில் அனுபவித்துக் கொள்ளலாம்.

அறிவார்ந்த அரசியலை விட ஏன் உணர்ச்சிகர அரசியல் அதிக ஈர்ப்புக்குள்ளாகிறது? ஒரு கமர்ஷியல் படமும் கருத்துள்ள படமூம் ரசிகர்களிடம் பெறுகிற வரவேற்பை போலதான் இந்த அரசியல் கூறுகளும்.
அறிவார்ந்த அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வை நமது சுய புத்தியுடன் ஆய்ந்து தெளிகிற பொறுப்பை அளிப்பதால் அது சமூக விமர்சனத்தோடு சுய விமர்சனத்திற்கும் இட்டுச் செல்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நம்மையும் பொறுப்பாளியாக்குகிறது.
ஆனால் உணர்ச்சிகர அரசியல் அப்படி அல்ல. அது எல்லா செயல்களுக்கும் மற்றவர்களை கை காட்டி உசுப்பேற்றிவிடுவதோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. நமக்கு வசதியானதும் இதுதானல்லவா? இதுவே அரசியல்வாதிகளுக்கும் பெரும் வசதியாக இருக்கிறது.
அதனால்தான் அங்கே பாருங்கள், ஒரு இனத்தையே கருவறுத்துவிட்டார்கள் என்று உருக்கமாக பேசினாலோ ஆவேசமாக முஷ்டி உயர்த்தினாலோ நாம் மிக எளிதில் ஈர்க்கப்படுகிறோம். அந்த இன ஒழிப்பில் நமக்கு பங்கில்லை. நாம் நீதி நியாயம் பேசக் கூடிய பார்வையாளர் இடத்திலேயே எப்போதுமிருக்கிறோம்.
இங்கு தமிழகத்திலும் தமிழர்கள் இருக்கிறார்கள், அதில் சாதிப் பேயினால் ஆயிர கணக்கானவர்ள் கடித்து குதறப்படுகிறார்களே? இது பற்றி ஏன் பெரும்பாலான அரசியல்வாதிகள் பேசுவதில்லை? ஏனென்றால் உணர்ச்சிகர அரசியலின் மூலம் சாதியை வளர்க்கலாமேயொழிய அழிக்க முடியாது. சாதி ஒழிப்பு அறிவார்ந்த அரசியலின் ஒரு பகுதி. இந்த சாதி கொடுமையில் நாமும் பங்கேற்பாளர்கள், அதாவது குற்றவாளிகள். அப்படி இருக்க அதன் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்குவதென்பது இயலாத விஷயம். சாதி ஒழிப்பு என்று உங்களை குற்றவாளியாக உணரச் செய்வதை விட , தமிழ் , தமிழர் நலன் என்று பேசி உங்கள் உணர்வுகளை உசுப்பிவிட்டு ஓட்டுகளை வேட்டையாடுவதென்பது அரசியல் வாதிகளுக்கு மிக எளிதானதாக இருக்கிறது. அதனாலேயே இங்கும் ஈழ அரசியல் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது..


தமிழ் தேசியம் என்றால் என்னவென்று என்னைப் போன்ற தமிழ் துரோகிகளை விட்டுவிட்டு ஏதேனும் தமிழுக்காகவே உயிரையும் அர்ப்பணித்த உங்கள் சக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். தமிழராக ஒன்றுபடுவதுதான் தமிழ் தேசியம் என்பார்கள். சரி, திராவிடம் என்றால் ஏதோ கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என்றெல்லாம் பிதற்றி திரிகிறார்களே, தமிழ் தேசியத்தின் பேசுபொருள்கள் தான் என்ன என்று அடுத்த கேள்வி கேளுங்கள்.
தமிழ், தமிழர் நலன், தமிழ்நாட்டை தமிழர்களே ஆட்சி செய்தல், தமிழ் தேசியம் அமைத்தல் இப்படியான தேன் மொழுகிய பதில் கிடைக்கும். இந்த தேனுண்ட மயக்கத்திலியே நீங்கள் இருந்துவிட்டால் அடுத்தும் ஒரு கேள்வி இருக்கிறதே, அதை யார் கேட்பது? அதனால் கொஞ்சம் நிதானமாக இந்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள்.
தமிழர்களாக ஒன்றுபடுவது சரி, தமிழர்களை எப்படி ஒன்றுபடுத்துவீர்கள்? இங்கிருக்கிற தமிழர்கள் எல்லாம் சாதி ரீதியாக அல்லவா பிரிந்து கிடக்கிறார்கள்? இந்த சாதி பிணக்குகளை களைவதற்கு தமிழ் தேசியம் எதை முன் வைக்கிறது?
இந்த கேள்வியே நீங்கள் துரோகி பெரியாரின் கையாள் என்பதை அந்த தேசிய போராளிக்கு உணர்த்திவிடும். சரி அந்த பதிலும்தான் என்னவென்று பார்த்துவிடுவோமே..
தமிழர்களாக ஒன்றுபடுவோம் என்பதே தமிழ் தேசியத்தின் அடிப்படை. சாதி மறந்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். நாம் கட்டியமைக்கப்போகிற தமிழ் தேசியத்தில் சாதிகளே இருக்காது. தலைவர் பிரபாகரன் வழியில் தமிழ் தேசியம் அமைப்போம். நம்மை ஆண்டாண்டு காலமாக வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். தமிழனை தமிழனே ஆள்வது எப்போது? அதற்காகத்தான் தமிழ் தேசியம் அமைப்போம், வாருங்கள்.
அட சரியாகத்தானே சொல்கிறார்கள் என்று திருப்தியடைந்துவிட்டீர்களா? என்னிடம் இன்னும் கொஞ்சம் கேள்விகள் இருக்கிறது.

தமிழர்களின் அனைத்து துன்பத்திற்கும் தமிழர்களை தமிழர்களே ஆட்சி செய்யாதது தான் காரணமா? மண்ணின் மைந்தர்கள் ஆட்சி வந்துவிட்டால் தமிழர்கள் வாழ்க்கை நிலை உண்மையிலேயே உயருமா?
சமஸ்கிருதமே தெய்வீக மொழி, தமிழ் நீச மொழி, அதை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி உயர்த்துகிற பார்ப்பனர்களும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதன் பின்னனி என்ன? பார்ப்பனர்கள் உண்மையிலேயே தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களா? தமிழ் தேசியம் அமைப்பதால் பார்ப்பனர்களுக்கு என்ன நன்மை?
சரி, கேள்விகளை மேலும் தொடர்வதற்கு முன் இவைகளுக்கு முதலில் விடை தேடலாம். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படுவதற்கு முன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மண்ணின் மைந்தர்களால்தான் ஆளப்பட்டு வந்தன. சேர, சோழ, பாண்டியர்கள் எனும் தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ்தான் பெரும்பாலான நிலப்பரப்புகள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. ஆனால் அன்றைய தமிழ் மக்களின் நிலை தேனும் பாலும் தெவிட்டா அமுதும் நிறைந்தோடியதாக ஒன்றுமில்லை.
தமிழ் மன்னர்கள் எல்லோரும் பார்ப்பன அடிவருடிகளாக, அடிமைகளாகத்தான் இருந்தார்கள். பார்ப்பனர்களின் நலன் காக்கிற ஆட்சியாகத்தான் மன்னராட்சி முறை இருந்து வந்தது. இன்று மனுநீதி காத்த சோழன் என்று கொண்டாடப்பட்டு பிஞ்சுப் பருவத்திலேயே பள்ளி புத்தகங்கள் வழியாக மாணவர்களின் மனதில் பதிய வைக்கப்படுகிற அரசனின் உண்மை முகம் என்ன தெரியுமா? அது என்ன மனு நீதி? சாதிக்கொரு நீதி செய்து மநு இயற்றிய மனு தர்ம நூலின் வழி ஆட்சி செய்தவன் என்பது பொருள்.
தீண்டதகாதவர்கள் வேத மந்திரத்தை கேட்டாலும் அவர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்ப்பனர்களுக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் மரண தண்டனை கூடாது, பார்ப்பனர்களை வைதாலோ அந்த குறிப்பிட்ட அங்கத்தையே வெட்டி எறிய வேண்டும் என இன்னும் இன்னும் மனம் பதைபதைக்க செய்யும் அத்தியாயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அவன் எவ்வாறு மநுவின் வழி ஆட்சி செய்தான் என்பதற்கு நம் எல்லோருக்கும் தெரிந்த கதையான பசு ஆராய்ச்சி மணி அடித்து நீதி பெற்றதாக புனையப்பட்ட நிகழ்வு ஒன்றே போதுமானது. அந்த நிகழ்வு குறிப்பிடுவது ஒன்றைத்தான், அது அரசனுடைய மகனேயாயினும் பசுவின் உயிர் மேலானது, பசுவை எந்த காரணத்தை முன்னிட்டும் எவர் கொல்வதையும் அனுமதிக்க முடியாது. ஒரு பசு கன்று இறப்பிற்காக பார்ப்பனர்களின் வற்புறுத்தல் காரணமாக தன் சொந்த மகனையே தேரினடியில் வைத்து கொன்றவன் தான் மனுநீதி காத்த சோழன். பசுவின் உயிரும் மனித உயிரும் ஒன்று, இல்லையில்லை பசுவின் உயிர் மனித உயிரினும் மேம்பட்டது என்பதுதான் மனு நீதி.
இதே போன்ற பார்ப்பன அடிவருடி சேவைக்காகத்தான் தஞ்சை பெரிய கோயிலை கட்டியெழுப்பிய ராஜராஜ சோழனும் நினைவு கூர்ந்து போற்றப்படுகிறான். அது என்ன?

ராஜராஜ சோழன் கொண்டாடப்படுவது உண்மையில் தஞ்சை பெரிய கோயிலுக்காக மட்டுமா? அவனது பார்ப்பன அடிவருடி சேவைக்காக தான். பிரம்மதேயங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பார்ப்பனர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. சபா, சமிதி என்ற பெயரில் முழுதுமாக அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்களே நிரப்பப்பட்டனர். குடவோலை மூலம் மக்களாட்சியை நிலை நாட்டியவன் ராஜராஜ சோழன் என்று பெருமை எழுதப்படுகிறது. ஆனால் வாக்களிக்கும் உரிமை நிலச்சுவான்தார்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் மட்டுமே இருந்ததென்பதை வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.
தமிழ் மண்ணின் மைந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்களின் ஆட்சியிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஓங்கியிருந்தது. இப்போது மீண்டும் தமிழ் தேசியம் அமைப்போம், தமிழர்களை தமிழர்களேதான் ஆள வேண்டும் என்ற முழக்கம்..
உண்மையில் தமிழ் தேசியவாதிகளின் நோக்கம் தமிழ் மண்ணை தமிழர்களே ஆள்வது மட்டும் தானா? அப்படியெனில் திராவிடக் கொள்கையாளர்கள் யார்? பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தான் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், திராவிடக் கொள்கையை பின்பற்றும் எல்லோருமேவா தமிழ் துரோகிகள்?
பார்ப்பனர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிப்பதன் நுண்ணரசியல் அது தமிழ், தமிழர் போர்வையில் தங்களை சுலபமாக உள்வாங்கிக்கொள்வதால் தான். அதுமட்டுமல்ல தமிழ் தேசியம் கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தவொரு பார்ப்பனீய விரோத செயல்பாட்டோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது கிடையாது.
திராவிட என்ற சொல்லானது பார்ப்பனர்களுக்கு எதிர்பதத்தில் அமைவதால் அந்த வார்த்தையே அவர்களுக்கு மிகுந்த எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பார்ப்பனீயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாய் பெரியார் இருந்த காரணத்தினால்தான் இன்று அவர் ஒட்டு மொத்த தமிழர்களுக்குமே துரோகியாக உருவகப்படுத்தப்படுகிறார்.
இன்று தமிழ் தேசியம் பேசுகிற பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டவர்கள் தீவிர சாதி ஆதரவாளர்கள் என்பதை விளக்க எடுத்துக்காட்டுகளை தேடி எடுக்க தேவையில்லை. ஒவ்வொருமுறை சேரிகள் எரிக்கப்படும் போதும் சாதி இந்துக்களின் வெறியாட்டத்தின் போதும் மேற்கொள்கிற கள்ள மௌனமே அவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துகிறது.
சாதியத்தை தூக்கி பிடிப்பதால்தான் தமிழ் தேசியம் பார்ப்பனர்களின் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இப்படி பார்ப்பனீயத்தை தான் தமிழ் போர்வையில் மக்கள் மீது திணிக்கிற வேலையைச் செய்கிறார்கள். இந்த தமிழ் தேசியத்தை மிக எளிதில் மக்கள் மனதில் நிறுத்துகிற உணர்ச்சிகர அரசியலுக்கு உதவக்கூடியதாக மட்டுமே இவர்கள் தொடர்ந்து ஈழத்தை அரசியல்படுத்துகிறார்கள்.
ஈழம் என்பது இவர்களின் அரசியல் வியாபாரத்தின் மையப்பொருளாக இருப்பதன் காரணமே அது உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அறிவை மழுங்கடிக்கிற வேலையை சிறப்பாக செய்வதால் தான். பார்ப்பனர்களை அவர்களும் தமிழர்கள் தானே என்று அணைத்துக்கொள்ள தெரிந்தவர்களுக்கு இங்கிருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களும் தமிழர்கள் தான் என்பது உறைக்காமல் போவதன் மர்மம் என்ன? அடிப்பவனையும் அடிவாங்குபவனையும் எப்படி ஒரே அளவுகோலில் வைத்து பார்க்க முடியும்? சாதி தமிழர்களுக்கு மீதி தமிழர்கள் பல்லக்கு தூக்க வேண்டும் என்பது தானே தமிழ் தேசியம்!
தமிழர்களாக ஒன்றுபடுங்கள் என்று கூப்பாடு போடுவதற்கு முன் முதலில் மனிதர்களாக ஓவ்வொருவரையும் உணரச்செய்ய வைக்க வேண்டும். சாதியை ஒழிக்க முடியாது என்று நழுவி வெறுமனே தமிழ் கோஷம் மட்டும் எழுப்புவதன் மூலம் பண்டைய தமிழ் மன்னர்களின் பார்ப்பன அடிவருட சேவை நிலைக்குதான் மக்களை அழைத்துச் செல்ல முடியும். ஆக உண்மையிலேயே தமிழ் தேசியம் அமைக்க விரும்புபவர்கள் அதன் பாடுபொருள்களாக தன் சக மனிதர்களையே மனிதர்களாக மதிக்காமல் இழிவுப்படுத்தி ஒடுக்கி அழிக்கின்ற வேலைகளுக்கு மூலமாக விளங்கும் சாதி, மதம் முதலியவற்றை அழித்தொழித்து மக்கள் அனைவரும் சமம் என்பதே தனது பிரதானக் கொள்கை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும். செய்வார்களா தமிழ்தேசியவாதிகள்?
மதத்தையும் சாதியையும் மறுக்காமல் ஒருபோதும் மக்களிடையே சமத்துவத்தை கொண்டுவர முடியாது. மக்களிடையே சமத்துவம் ஏற்படுத்தாத வரையில் என்ன கூப்பாடு போட்டாலும் அவர்களை ஒன்றுபடுத்த முடியாது.
அதைவிடுத்து பிரபாகரன் வாழ்க என்று கோஷம் போடுபவர்களுக்கு மட்டும்தான் தமிழன் பட்டம் கொடுப்போம் , மற்றவர்களெல்லாம் தமிழ் துரோகிகள் என்று பிதற்றுவதெல்லாம் மக்கள் மதிமயங்கி கிடக்கிற நாள் வரையிலும்தான் செல்லுபடியாகும் என்பதை பார்ப்பன தமிழ் தேசியவாதிகள் உணர்ந்துகொள்வது நல்லது.


-          LEO JOSEPH D
-          dleokommedu@gmail.com

3 கருத்துகள்:

  1. ஐயா LEO JOSEPH D அவர்களே,
    பார்ப்னர்களை தயவு செய்து இதில் இழுக்காதீர். கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வசை பாடியது போதும். மணியரசன்/ சக்திவேல்/ சீமான்/ மருத்துவர் ஐயா என பலருடைய பேச்சை கேட்டுப்பாருங்கள். “தமிழ் மட்டும்/தமிழ்-மற்ற மொழியும்/மற்ற மொழி பேசுபவர்” என மூன்று விதமான அடையாள அட்டை வழங்கத் துடிக்கும் கரங்களே தமிழ் தேசியவாதிகள். சீமான் போன்றோர் பார்ப்பனர்களை வசவு பாடும் காணொளிகளை நீங்கள் கண்டதில்லையா? அவசியம் தேடுங்கள், காணுங்கள். பார்பனர்களைப் பொறுத்தவரையில், தமிழ் தேசியவாதிகளிடம் ஆட்சி மாறினாலும் அதே இரண்டாம்-பட்ச, அருவருக்கத்தக்க ஐயத்தோடே பார்க்கப்படும் ஒரு வியாதிப் பிடித்த சொரிநாய்க்கு கிடைக்கும் இழிவு தான் கிடைக்ப்போகிறது.

    1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்வார்கள் அருளிய தமிழ் வேதமான வைணவ பாசுரங்கள் இல்லாமல் ஒரு வழிபாடே கிடையாது என்று இருக்கும் ஐயங்கார்களுக்கும் (அவருள் எந்த மடையனாவது தமிழ் நீச்ச பாஷை என்று சொல்லியிருப்பானா? அவன் அதற்கு பூணூலை கழட்டிப் போட்டு நாத்திகத்தை பேணியிருப்பான்) ‘ழ’கரமே ஒழுங்காக பேசத் தெரியாத ஜாம்பவான்கள் அடையாள அட்டை தருவர்! இதில் இவர்கள் பார்ப்பனீயத்தை மறைமுகமாக ஆதரிக்கிரார்களாம் ! தலையெழுத்து டா சாமி. “இவர்கள் நம்மை எப்படி வசை பாடினார்கள்; சிதையட்டும், சிதையட்டும்…” என குளிர்காய எந்த மூளை உள்ள பார்ப்பனனும் நினைக்க மாட்டான். பிரித்து/வெறுத்தாளும் இந்த அரசியல் கலாச்சாரம் போதும் என்றே எண்ணுவான். 100 வருடங்களுக்கு முன் தமிழ் பார்ப்பனர்கள் அதிகமான குமாஸ்தா வேலைகளில் இருப்பதை பொறுக்காமல் தெலுங்கு பேசும் (பார்பனர்கள் சிலரும், பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதியினர் பலரும்) நபர்கள் உருவாக்கி செயல்பட்ட இயக்கம் Justice Party. 1956இல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவானதற்கும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்கள், தெலுங்கு பேசும் பார்ப்பனர் அல்லாதோரும் சேர்ந்து கைகோத்து செயல்பட்டனர். இன்றளவும் தெலுங்கு பேசும் மாநிலங்களில் தெலுங்கு பேசும் பார்ப்பனர்களை கேவலமாக திட்டுவதில்லை, நடத்துவது இல்லை. அது தமிழ் நாட்டின் தனிச்சிறப்பு !

    இன்றைய தேதியில் தொடர்ந்து வசை பாடாமல், தமிழ் பார்ப்பனர்களையும் அரவணைத்து இந்த தமிழ் தேசிய பாசிசத்தை முறியடிக்க வேண்டுமேயொழிய அவர்கள் மீது ஆதாரமற்ற, மிக அருவருக்கத்தக்க அபாண்ட பழிகளை சுமத்துவது யாருக்கும் உதவாது. தமிழ் பார்ப்பனர்களை பொருத்தவரையில் Be a known devil to a maltreating (existing) master than than less known devil to a new master என்பது தான் யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  2. வாழவும் விட மாட்டோம் சாவவும் விட மாட்டோம் என்கிற தொனியில் பார்ப்பனர்கள் உயிரை வாங்க வேண்டாம். 1920க்களில் இருந்த % விகிதத்திலிருந்து நிறைய வெளியேறி விட்டார்கள். ஏதோ எஞ்சி இருக்கும் %களில் கோயில், கச்சேரி என்று ஒரு கும்பல் விட்ட குறை தொட்ட குறையாக இருக்கிறது. அவர்களையும் அமைதியாக துரத்தி விட்டால் போதும். வார்த்தைகளால் சுட்டு சாம்பலாக்காமல் இந்த தமிழ் தேசிய பாசிஸ்டுகள் அவர்களுக்கு அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டு தெரு-தெருவாக கூட்டி செல்லும் முன்னரே, உங்களைப் போன்ற திராவிட அபிமானிகளே வன்முறை இன்றி செய்துவிடுங்கள். வைணவர்கள் வழிபடும் புண்ணிய 108 தளங்களில் 80% மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தால் என்ன, எதோ காணொளியில் பார்த்து அமைதி அடைகிறோம். இந்த பாசிச்டுகளுடன் தொடர்பு படுத்திப் பேசி, அதை இல்லை என்று நிரூபிப்பதர்காகவே திராவிட அரசியலைக் காட்டிலும் பன்மடங்கு பொறித்து தள்ளக்கூடும் தமிழ் தேசியரின் சினதுக்கு எங்களை ஆளாக்காதீர். பணிவோடு கேடுக்கொள்கிரேன்.

    பதிலளிநீக்கு
  3. நீதிக்கட்சி துவங்கிய காலத்திலிருந்து, பிறகு தி.க-வாக உருவெடுத்த பின்னரும், மற்ற ஆதிக்க தமிழ் ஜாதிகளான தேவர், கவுண்டர், முதலியார், வன்னியர் போன்றோரின் ஜாதீயம் எப்பவும் போலே தான் இருந்து வந்தது. சொல்லப்போனால் திராவிட கட்சிகள் அதை கண்டும் காணாமல் இருந்தன; அந்தந்த தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளும் ஆதிக்க ஜாதிக்கேர்ப்ப வேட்பாளர்களை நிறுத்தின. இதில் பார்பனர்களின் பங்கு என்ன? உண்மையான பெரியாரிய சிந்தனையோடா இரு கட்சிகளும் இயங்கின? பாப்பானை கிண்டல் அடிப்பதைத் தவிர வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்தார்களா ? செய்திருந்தால் என்று ஏன் சாதீயத்தை கொழுந்து விட்டு எரிய காண்கிறோம்?

    பார்ப்பனர்களுக்கு எந்த ஆதிக்க சாதியோ, இடைச் சாதியோ என்றும் நட்பு பாராட்டியதில்லை. A Tamil Brahmin has no friend among Tamils as everyone equally despises them, thanks to successful propaganda and hitting below the belt humour and diatribe for nearly a century. அப்படி இருக்க, என்னமோ மற்றவர் சாதியத்தை பேண பார்பனர்கள் கொண்டாடுகிறார்கள் போன்ற பிம்பத்தை உருவாக்குவது ஆதாரமற்ற பச்சை அவதூறு.

    பெரியார் வன்மையாக சாடிய பார்ப்பன சமூகத்தில் தான் பெண்கள் கல்வி,படிப்பறிவு,(பகுத்தறிவிலும் கூட - பல பழையன கழித்தாயிற்று)வரதட்சணை கொடுமை இல்லாமை(/அதிகமின்மை) என எல்லா விதத்திலும் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். ஒரு கலாச்சார தொடர்ச்சியாகத் தான் பெருவாரியான பார்ப்பனர்கள் தங்கள் வாழ்க்கை முறையை தொடர்கிறார்களே தவிர (அதிலும் பலர் கலப்பு திருமணம் செய்து பார்ப்பனராக இருப்பதை நிறுத்திவிடுகிறார்கள்) intrinsically/innately தான் சந்திக்கும் பார்ப்பனர் அல்லாதவரின் அடையாளத்தை தெரிந்துகொள்ள ஆவல் காட்டுவதில்லை, திறமைகளை குறைத்து மதிப்பீடுவதில்லை. மொத்தத்தில், பூணூலை துறக்க மனமில்லாமல், ஆனால் அதே சமயம் எல்லோருக்கும் தனக்கு கிடைக்கும் வாழ்க்கை தரம் அமையும் சமூகம் உருவாவதை முழுமையாக வரவேற்கும் ஒரு குழு. விருப்பு-வெறுப்பின்றி அவர்கள் தமிழ் ஜனத்தொகையில் உள்ள %க்கும், அதே % தான் தன்னார்வல தொண்டு புரிவதிலும், பொருள் ஈட்டி ஏழை மற்றும் தலித் முன்னேற்றத்தில் (Rural education உட்பட) உள்ளார்களா அல்லது அதைவிட பன்மடங்கு அதிகமா என ஆய்வு செய்தால் புரியும்.

    இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளித்தால் - தான் சமீபத்தில் சந்தித்த 10 பார்ப்பனர்களில் எத்தனை பேர் ஜாதி வெறியர்களாக தென்பட்டனர், எத்தனை பேர் ஓரு சராசரி மனிதனின் சமத்துவ எண்ணச் சுவடோடு அல்லது அதற்கும் மேம்பட்டு இருந்தனர் என்பதை
    எண்ணிப்பார்க்க தூண்டும்.

    இருக்கும் பிளவுகளே போதும். ஈன்ற கேட்டப் பெயரும் போதும். தெலுங்கு ஆதிக்க சாதிகளை பொறுக்க முடியாமலும், வேகமாக வளர்ந்து வரும் தலித் மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தால் தற்சமயம்/பின்பு நிகழக் கூடிய கலப்பு திருமணங்களை எதிர் கொள்ள/சகிக்க முடியாமல் ஏனைய மற்ற உயர்/இடைச் சாதியினரின் 'தமிழ் தேசிய' என்ற (போர்வை) ஆளுகையை தயவு செய்து அவர்களிடமே வாதிட்டு வெற்றி பெறுங்கள்.

    பார்ப்பனர்கள் 1920க்களிலிருந்தே ஓரங்கட்டபட்டதாலும் வெவ்வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து போனதாலும் (வெளிநாடுகள் உட்பட) வெகுவாக மாறியவர்கள். தமிழ் மொழி பேசும், தமிழை வழிபாட்டிலும் பயன்படுத்தும் தமிழர்கள், இந்தியர்கள். அவ்வளவே. வெறுத்தாளும் அரசியலில் பல அவதிக்குள்ளானதால் தமிழ் தேசியம் போன்ற மற்றுமொரு வெறுத்தாளும் கொள்கைக்கு என்றும் துணை போக மாட்டார்கள். இந்த தேவையற்ற முடிச்சை போட்டு cross-fireஇல் ஏற்கனவே பட்ட அவமானங்களினும் இன்னும் அதிக படுத்தாதீர்கள். மிக தாழ்மையுடன், வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு