திங்கள், 15 டிசம்பர், 2014

காவிக்கூட்டமும் கட்டாய மதமாற்றமும்



             காவிக்கூட்டமும் கட்டாய மதமாற்றமும்   

இந்துத்துவ காவிக்கூட்டத்தின் அடுத்த செயல்திட்டம் தெரியவந்திருக்கிறது, மத்தியிலும் மாநிலங்களிலும் கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வெங்கய்யா நாயுடு பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன் ஆக்ராவில் பல ஏழை இஸ்லாமியர்கள் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது பற்றி செய்திகள் வெளியாகின. அது குறித்து எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பிய போது, அவர்கள் தங்கள் உண்மையான மதத்திற்கு திரும்பியிருக்கிறார்கள் என்று மேலும் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக தீவைத்து எரிக்கப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன் மத்தியப் பிரதேசத்திலும் ஒரு தேவாலயம் எரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு புறம் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என விஷத்தை கக்கும் ஆர்எஸ்எஸ் பாம்புகள், மற்றொருபுறம் சிறுபான்மையின மக்களை பலவிதங்களிலும் அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஆக்ராவில் தாஜ்மகால் ஏற்கனவே அங்கிருந்த இந்துக்கோயிலொன்றை இடித்துக் கட்டப்பட்டதென புதுப் புரளியை பற்ற வைத்திருக்கிறார்கள். அது மட்டுமா, தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படுகிற வேளாங்கண்ணி கோயிலும் இந்துக்கோயிலை இடித்துக் கட்டப்பட்டதுதான் என கிளம்பியிருக்கிறார்கள் காவி அரை டவுசர்கள்.
இப்படியாக தங்கள் வெறியாட்டத்தை அதிகார ஆயுதத்தின் மூலம் தொடங்கியிருக்கிற இந்துத்துவ வெறியர்கள் , மற்றொரு குஜராத் படுகொலையை நிகழ்த்துவதற்கு தயாராகி வருவதையே அவர்களின் செயல்கள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
இயேசு என் கனவில் வந்து சொன்னார், மோடிதான் சிறந்தவரென என பால் தினகரனும் கிறிஸ்தவ கோவில் கட்ட உதவிய நல்ல மனிதர் மோடி என பாராட்டுப் பத்திரம் வாசித்த வின்செண்ட்டும் இந்த காவி அராஜகங்களுக்கு எதிராக வாய் திறப்பார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான். பரிசுத்த பண ஆவி அவர்களை முழுதாக ஆட்க்கொண்டிருக்கிறது.
சரி, சில கேள்விகளை எழுப்பி இந்த பதிவை தொடரலாம். மதமாற்றம் என்றால் என்ன? கட்டாய மதமாற்றம் என்றால் என்ன? ஏன் காவிக்கூட்டத்தினர் இப்படி மதமாற்றத்திற்கெதிராய் இப்படி கொதித்தெழ வேண்டும்? இந்து மக்களின் எண்ணிக்கை குறைவது மட்டும் தான் இதன் மூல காரணமா? அப்படியே மீண்டும் இந்து மதத்திற்கு திரும்புபவர்களை எந்த சாதியின்கீழ் இணைப்பார்கள்? அல்லது இவர்களை புது வர்ணமாகி நான்வருணக்கோட்பாட்டை ஐவர்ணமாக அறிவிப்பார்களா? இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு ஏன் மாறுகிறார்கள்? அதனால் அவர்களுக்கு அரசியல்ரீதியாக அல்லது அரசியலமைப்பு சாசனப்படி ஏதேனும் நன்மையிருக்கிறதா? அப்படி மதம் மாறுபவர்களை தடுக்க அல்லது மதம்மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்குள் ஈர்க்க கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் போன்ற மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள்தான் இருக்கும் ஒரே வழியா? ஒருவன் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமையிருக்கிறதென அரசியலமைப்பு சட்டம் கூறுகிறதே, அந்த உரிமையை எப்படி இந்த சட்டத்தின் மூலம் தொடர்ந்து காப்பார்கள்?


மதமாற்றம் என்றால் என்ன?
ஒரு தனி நபர் அல்லது குழு தான் விரும்பும் மதம் அல்லது நம்பிக்கைக்கு தன்னை மாற்றிக்கொள்வது என்பதே என் கருத்து. கடவுளின் அல்லது மதத்தின் இருப்பு அல்லது இன்மை என்பது முழுக்க முழுக்க அந்த தனி நபரின் நம்பிக்கையைச் சார்ந்தது என்பதால் அவர் எந்த நிலையிலும் தனது நம்பிக்கையை, அதாவது மதத்தை மாற்றிக்கொள்வதற்கு அரசியலமைப்புச் சட்டம் முழு உரிமை வழங்குகிறது. இதில் ஒரு அமைப்பு, நபர் அல்லது அரசாங்கம் தலையிடுவதென்பது அவரின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும்.
சரி, கட்டாய மதமாற்றம் என்கிறார்களே, அப்படி என்றால் என்ன? இதற்கு வரலாறு நெடுகிலும் எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அரசர் வேறொரு நாட்டின் மீது படையெடுத்து கைப்பற்றி அந்த நாட்டின் குடிமக்களை தான் நம்பும் மதத்திற்கு கட்டாயமாக மாறச் செய்வது. சில அரசர்கள் தங்களையே கடவுளாக அறிவித்துக்கொண்டு மக்கள் அனைவரும் தன்னையே கடவுளாக வழிபடவேண்டுமென நிர்பந்தித்த நிகழ்வுகளும் உண்டு.
இன்று கட்டாய மதமாற்றம் நடக்கிறதென காட்டுக்கூச்சலிடும் இந்துத்துவவாதிகளின் பழங்கதையையே எடுத்துக்கொள்வோம். இன்று இந்து மதமாக ஒரே கதம்பமாகிவிட்ட சைவம், வைணவம் ஆகிய இருபிரிவினரிடையே நடந்த வன்முறைகளை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. அரசன் வைணவ நம்பிக்கையாளராக இருப்பின் மக்களும் அதேப்படி பெருமாளை வணங்கி சேவிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அப்படி மாற்றுக்கடவுள்களை வணங்கமறுத்தவர்கள் இரக்கமற்று கொல்லப்பட்டார்கள். சைவ நம்பிக்கையுடைய அரசர்களின் காலத்திலும் இந்த கட்டாய மதமாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமே இருந்தன.
இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளையும் வேத சாஸ்திரங்களையும் உயிர்பலி சடங்குகளையும் சாதிக் கொடுமைகளையும் எதிர்த்து உருவான பௌத்த, சமண இயக்கங்களின் வளர்ச்சி இந்துத்துவவாதிகளை அச்சுறுத்தியது. தங்களுக்கு தோதான அரசர்கள் ஆட்சியிலமர்ந்ததும் இப்படியான பௌத்த, சமண பிரிவினரை மீண்டும் இந்துமத நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி மிரட்டினார்கள். மறுத்தவர்களை கழுவிலேற்றிக் கொன்றார்கள்.
அப்படி கொல்லப்பட்ட எண்ணற்ற பௌத்த, சமணர்களின் இரத்தக்கறைகள் இன்னும் சாட்சிகளாக நம்கண்முன் காட்சியளிக்கின்றன.
ஒரு தனி நபரை அல்லது குழுவை மேற்கண்டவழிகளிலோ அல்லது வேறு வழிகளிலோ பலவந்தப்படுத்தி மற்றொரு மத நம்பிக்கையை ஏற்கச் செய்வதே கட்டாய மதமாற்றமாகும்.
அப்படி எனில் கிறிஸ்தவர்கள் ரொட்டிக்கும் வெளிநாட்டு காசுக்கும் ஆசைப்பட்டு தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டார்களே, இதை என்னவென்பது? இதுவும் கட்டாய மதமாற்றம்தானே என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவனுடைய அடிப்படை தேவைகள் என்ன என்று ஏதேனும் ஒரு பள்ளி மாணவனை கேட்டுப்பாருங்கள், உணவு, உடை, உறைவிடம் என்று தங்குதடையின்றி ஒப்பிப்பார்கள். ஆனால் சாதியின் பெயரால் இந்த மூன்றையுமே ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மறுத்தது இந்து மதம்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொத்து சேர்க்க உரிமையில்லை. அவர்களிடமிருந்த கொஞ்சநஞ்ச துண்டுதுக்கானி நிலங்களும் ஆண்டைகளாலும் பண்ணைகளாலும் , ஏன் அரசாங்கத்தினாலும் வஞ்சகமாய் பறிக்கப்பட்டன. அவர்கள் கால்வயிற்றுக்கும் ஆண்டைகளிடம் கையேந்தும் கொத்தடிமைகளாகவே ஆயுள் முழுமைக்கும், இல்லையில்லை, எல்லா தலைமுறைகளுக்கும் தொடர வேண்டுமென நிர்பந்தித்தது இந்து சாதி அமைப்பு.
பெண்கள் மேலாடை அணியக்கூடாது, தங்கள் மார்புக்கு முலைவரி கட்டவேண்டுமென அவர்களை மனிதமனம் கொண்ட யாவரும் வெட்கி தலைகுனியும்படியான நிலையில் ஒடுக்கியது இந்து சாதி அமைப்பு.
மக்களின் வசிப்பிடங்கள் ஊர், சேரி என பிரிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து புறந்தள்ளப்பட்டார்கள் . சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதிகள், பொது கிணறு, கோயில் என எங்கும் அவர்கள் அண்டவே முடியாதபடிக்கு விரட்டி நசுக்கப்பட்டார்கள். இன்றும் சாதியின் பெயரால் தலித்துகளின் குடிசைகள் எரிந்துகொண்டேதானிருக்கின்றன.
இவ்வாறு ஒருவனின் அடிப்படை உரிமையும் அடிப்படை தேவையுமான உணவு, உடை, உறைவிடம் மூன்றையும் சாதியின் பெயரால் மறுத்துவிட்டவர்கள் தான் அன்றும் இன்றும், 'அய்யோ, மதம் மாறுகிறார்கள்' என காட்டுக்கூச்சலிடுகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பலரும் ரொட்டிக்காகவும் வெளிநாட்டு பணம் கிடைக்குமென்பதற்காகவும் மதம் மாறினார்கள் அல்லது மதம் மாற வைக்கப்பட்டார்கள் என்பதுதான் சாதி இந்துக்கள் கிறிஸ்தவ மதத்தினரின் மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு. இதை மறுத்து எழுத எவ்வளவோ காரணிகளிருக்கின்றன. ஆனால் நான் இதையொட்டியே எனது வாதத்தை உங்களிடம் வைக்கிறேன்.
ஆம், அவர்கள் ரொட்டிக்கும் காசுக்கும் தான் மதம் மாறினார்கள், ஆனால் அந்த ஒரு துண்டு ரொட்டிக்கும் வழியற்றவர்களாக அவர்களை இந்து மதம் வைத்திருந்தது என்பதை உங்கள் வாதத்திலிருந்தே ஏற்றுக் கொள்கிறீர்களா?
சமீபத்தில் ஒரு பெண் மத்திய அமைச்சர், அனைவரும் ராமனின் பிள்ளைகள் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியது நீங்கள் எல்லோரும் அறிந்ததே! ராமன் அந்தப்புரத்தில் லட்சக்கணக்கான அழகிகளுடன் கூடி கும்மாளமடித்து மதுவிலும் மாதுவிலும் திளைத்திருந்ததாக ராமாயண கதையே ஒப்புக்கொள்கிறது. அப்படி முறையற்று பிறந்தவர்களா நாங்களெல்லாம், இந்த கேடுகெட்ட கலாச்சாரத்தை நீங்கள் வேண்டுமானால் உங்கள் பெருமைமிகு அடையாளமாக்கிக்கொள்ளுங்கள் என்ற கொந்தளிப்பான வாதம் ஒருபுறம் இருக்கட்டும்.
எல்லோருமே ராமனின் பிள்ளைகள் என்றால் எல்லோரும் சமமாக அல்லவா நடத்தப்பட வேண்டும். ஒரே தந்தையைக் கொண்ட பிள்ளைகளில் ஒருவர் உயர்ந்தவராகவும் மற்றவர் தாழ்ந்தவராகவும் எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டார்கள் என்பதை காவிக்கூட்டத்தினர் விளக்குவார்களா?


இன்று காவிக்கூட்டத்தினர் மதமாற்றத்திற்கெதிராக பொங்கியெழவேண்டிய காரணம் என்ன? இந்து மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைகிறதே என்ற கவலையும் அக்கறையும் (மட்டும்) தான் காரணமா?
இந்து மதத்தின் உயிர் நாடியே சாதியும் அதன்வழி பின்பற்றப்படும் தீண்டாமையும் தான். இந்து மதம் என்பதே ஒருவர் அல்லது ஒரு வகுப்பு, மற்ற நபர் அல்லது வகுப்பினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பவைகளை உள்ளடக்கிய எண்ணற்ற விதிமுறைகளின் தொகுப்பு தான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
ஆனால் இந்த மதமாற்றங்கள் பெரும்பாலும் இந்துத்துவ அடிதளமான சாதி அமைப்பிற்கே வேட்டு வைப்பதாக இருக்கின்றன. இஸ்லாம் சாதியிருப்பை தனக்குள் அனுமதிப்பதில்லை. பிறப்பின் பொருட்டு உயர்ந்தவர், தாழ்ந்தவர் பேதம் அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை. கிறிஸ்தவமும் அனைவரும் சகோதர. சகோதரிகள், ஒரே குடும்பம் என்ற நேச உணர்வை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும் இந்திய கிறிஸ்தவ அமைப்பை சாதி ஆட்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்துத்துவ சாதிய வீச்சோடு ஒப்பிடும்போது, ஓரளவேனும் மனித மாண்போடு அனைவரும் வாழ ஏற்ற இடமாக இருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
ஆக இவ்விரு மதங்களுக்கும் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுவது இந்துத்துவவாதிகளை கோபம் கொள்ள வைக்கிறது. தங்கள் சாதியின் ஆதிக்க பிடி தளர்ந்துவிடுமோ என்ற பதற்றத்தின் விளைவாகவே இவ்வாறு கூச்சலிடுகிறார்கள். மேலும் இவ்வாறு மத மாற்றம் பற்றி பேசுவதன் மூலம் சிறுபான்மையின மக்களை தொடர்ந்து அச்சுறுத்த முடியுமென எண்ணுகிறார்கள்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையிலும் மத பரப்பு பணியோடு இன்னும் இரண்டு பணிகளில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அவைகள் கல்விப் பணி மற்றும் மருத்துவப் பணி. இஸ்லாமும் கல்வியின் தேவையை உணரத் தொடங்கி தீவிரமாக செயலாற்ற தொடங்கியிருக்கிறது. தன்னுடைய மத உறுப்பினர்களின் பிள்ளைகள் என்ற வகையில் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்தின் எல்லாநிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் குறைந்த செலவில் கல்வியறிவுபெற இவற்றின் நிறுவனங்கள் உதவி புரிகின்றன. இவ்வாறான உதவி கிறிஸ்தவ மதத்தினரையும் தாண்டி மற்ற தாழ்த்தப்பட்ட மக்களையும் சென்றடைவதைதான் இந்துத்துவவாதிகள் மதமாற்றம் என கூச்சலிடுகிறார்கள்.
அப்படி ஆவேசப்படுகிற இவர்கள் யாரும் காஞ்சி ஜெயேந்திரனிடமோ, மதுரை டுபாக்கூர் ஆதீனத்திடமோ, விஹெச்பியிடமோ, ஆர்எஸ்எஸ் ஸிடமோ தங்கள் மதத்தினால் ஒடுக்கப்பட்ட, படுகின்ற பிள்ளைகளின் கல்விக்கு ஏற்பாடு செய்யலாமே? வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரலாமே? திருப்பதி உண்டியலில் சேருகின்ற பணமே இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழைகளுக்கும் போதுமாயிருக்குமே! ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒருபோதும் படித்து உயர்நிலையை அடையவும் கூடாது, அவர்கள் மதம் மாறி தங்கள் சாதியின் பிடி தளர்ந்துவிடவும் கூடாது என்பதே அவர்களின் நோக்கமும் செயல்வழியுமாகும்.
அடுத்து இவ்வாறு மதம் மாறுபவர்கள் எவ்விதமான அரசியல் லாபத்தைப் பெறுகிறார்கள் அல்லது அரசியல் சாசனம் அவர்களுக்கு எவ்விதமான சிறப்புரிமைகளை வழங்குகிறது என்ற கேள்வி.

இந்தியாவில் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிறவர்களுக்கு ஏதேனும் அரசியல்ரீதியான லாபமிருக்கிறதா என்று பார்ப்பின் தற்போதுவரை அதற்கான சூழல் எதுவும் தென்படவில்லை. மிக சிறுபான்மையினராக இருப்பதனால் அரசியலதிகாரத்தை கைப்பற்றுவதென்பது பெரும்பாலும் இயலாத காரியமாகவே இருக்கிறது.
இஸ்லாமியர்களுக்கென்று கட்சிகள் இருப்பினும் அவை அனைத்தும் ஒத்த கருத்தொற்றுமை உடையதாக இல்லை. எதிரெதிர் அணியிலுள்ள தேசிய கட்சிகள் அல்லது மாநில கட்சிகளுடன் பிளவுபட்டு கூட்டணி அமைப்பதால் கட்சித்தலைவர்களின் சுயநோக்கம் மற்றும் சுயவளர்ச்சி மட்டுமே பூர்த்தியாகிறது. இப்படி அவர்கள் சிதறுண்டு கிடப்பதையே தொடர் ஆளும் கட்சிகளாக அரியணை ஏறுபவர்களும் விரும்புகிறார்கள்.
கிறிஸ்தவர்கள் நிலையோ அதனினும் கீழ். நாடறிந்த வகையில் கிறிஸ்தவர்களுக்கென முறைமைப்படுத்தப்பட்ட கட்சி என்பது இதுவரையிலில்லை. இருக்கும் சில கட்சிகளும் வட்டார கட்சிகளாக, உயிர்ப்பற்றதாகவே இருக்கின்றன.
ஆட்சியை கைப்பற்றும் தேசிய அல்லது மாநில கட்சிகளும் பெயரளவிற்கு ஒன்று அல்லது இரண்டு டம்மி பதவிகளை வழங்கிவிட்டு கணக்கை நேர்செய்வதில் மட்டுமே குறியாயிருக்கின்றன.
சரி, அரசியல் சாசனப்படியேனும் அவர்களுக்கான சிறப்புரிமைகள் அல்லது குறைந்தபட்ச உரிமைகளை பெற முடிகிறதா எனில் அதுவும் ஏமாற்றத்தையே தருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியினால் ஒடுக்கி நசுக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அரசியல் சாசனம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சில சிறப்புரிமைகளை வழங்குகிறது. இதன்வழி சமூக நீதியை நிலைநாட்டி சமத்துவத்தை ஏற்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
ஆனால் நேரு பார்ப்பனர் தலைமையில் அமைந்த முதல் மத்திய அமைச்சரவையே அதற்கு வேட்டு வைத்தது. குடியரசு தலைவருக்குள்ள சிறப்பு அதிகாரத்தின்படி இந்து அல்லாத மற்ற மதப் பிரிவினர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவோ, பழங்குடியின மக்களாகவோ கருதப்பட மாட்டார்கள். அவர்கள் அரசியல் சாசன சிறப்புரிமைகளைப் பெற தகுதியற்றவர்கள் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சீக்கியர்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தின் வாயிலாக 1956ஆம் ஆண்டு இந்து அல்லது சீக்கியர் அல்லாதவர்கள் என்றும், பின் 1996ஆம் ஆண்டு இந்து அல்லது சீக்கியர் அல்லது பவுத்தர் அல்லாதவர்கள் SC/ST பிரிவினராக கருதப்பட மாட்டார்கள் என்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றளவிலும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆளும் கட்சிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.
இதனால் இப்பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்த முடியாமல் போவது மட்டுமன்றி தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிரான வன்கொடுமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படியும் தங்களுக்கான நீதியை பெற முடியாதவர்களாக தொடர்கிறார்கள்.
இப்படி எந்த அரசியல் லாபமுமற்ற நிலையில் அவர்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு இந்து மதம் இறுகப்பிடித்திருக்கும் சாதி அமைப்பே காரணமாகும். இதுவல்லாமல் அரசியல் சாசனப்படி எந்த ஒரு தனி நபரும் தங்கள் மத நம்பிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்பதன்படியும் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்கிறார்கள் அல்லது மதமற்றவர்களாக, நாத்திகர்களாக தங்களை அறிவித்துக்கொள்கிறார்கள். இந்திய அரசியல் சாசனப்படி இப்படி மதமற்றவர்களாக தங்களை அறிவித்துக்கொண்டவர்களும் இந்துவாகவே கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மையிலேயே இந்து மதத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்து மதத்தினரின் எண்ணிக்கை உண்மையிலேயே அக்கறைப்படுபவர்கள், அதற்காக கதறி துடிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? அதன் சாதிய அமைப்பை அழித்தொழிக்க வேண்டும். சாதியை ஒழிக்க வேண்டுமெனில் அதன் ஊற்றுக்கண்களான வேத நூல்கள், சாஸ்திரங்கள், புராணக்கதைகள் யாவற்றையும் தடைசெய்து தீயிலிட்டு கொளுத்த வேண்டும். ஆனால் இவையிரண்டுமே இந்து மதத்தைப் பொறுத்தவரை சாத்தியமற்ற விஷயங்கள்.
ஒரு சாதி இந்துவைப் பொறுத்தவரை சாதி அமைப்பு இப்போதுள்ளபடியே நீடிக்க வேண்டும், அதேசமயம் தன்னை நல்லவன்போலவும் காட்டிக்கொள்ளவேண்டும் என்பதே சிறந்த தேர்வாக இருக்கிறது. சாதியை ஒழிப்பதற்கு அவர்கள் ஒருபோதும் தயாராயில்லை. சாதியை ஒழிப்பதென்பது இந்து மதத்தையே கொலை செய்வதற்கு சமம் என்று எண்ணுகிறார்கள்.
இந்து மதம் என்பதே சாஸ்திரங்களும் வேத நூல்களும் வகுத்துள்ள சட்டமுறைமைகளின் தொகுப்பு என்கையில் அவைகளை ஒழிப்பதற்கு சாதி இந்து ஒப்புக்கொள்ளப்போவதில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் தங்கள் சாதியின் பிடி தளர்ந்துவிடக்கூடாது என்பது மட்டும் தான்.
அதுவுமல்லாமல் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற கோஷத்தை தொடர்ந்து எழுப்புவதன் மூலம் இந்துக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்குமிடையே பகைமையை தூண்டி, காழ்ப்புணர்வை வளர்த்து, தங்கள் அரசியல் சதுரங்க காய்களை வெற்றிகரமாக நகர்த்த தோதான விஷயமாக இதை கையாளுகிறார்கள்.
இப்போது ஆட்சியதிகாரமும் கைகூடியிருப்பதால் சாதிக்கு புனித முலாம் பூசிய பகவத் கீதையை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்கிறார்கள். தற்போது பெரும்பாலும் பார்ப்பனர்கள் மட்டுமே அறிந்த மொழியாக இருக்கிறது சமஸ்கிருதம். ஆனால் எந்த இரண்டு பார்ப்பனர்கள் சந்திக்கும்போது சமஸ்கிருதத்தில் உரையாடிக்கொள்கிறார்கள்? ஆனால் சமஸ்கிருதம் கட்டாயமாக மத்திய அரசு பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் என முரண்டுபிடிக்கிறார்கள்.
எல்லோருமே ராமரின் பிள்ளைகள், ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்று பேசுவதோடு மட்டுமல்லாமல் சிறுபான்மையின கோயில்கள் மற்றும் மசூதிகளை அது இந்து கோயில் இருந்த இடமென புரளிகளை கிளப்பி அச்சுறுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்போது கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய மத வன்முறைக்கு வித்திடுகிறார்கள். ஆக்ராவில் ஏழை முஸ்லீம்களை ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பெற்று தருகிறோம் என்று கூறி மதமாற்றம் செய்ததாக செய்திகள் எழுகின்றன. பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று இப்படியான செயலை அரங்கேற்றியிருப்பதன் மூலம் மதவன்முறைக்கு வித்திடுவதே அவர்களின் பிரதான நோக்கம் என்பது வெட்டவெளிச்சமாகிறது.
இப்போது கிறிஸ்தவர்களை சீண்டும்விதமாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மீண்டும் கட்டாய மதமாற்றம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று கூச்சலிடும் எந்த இந்துத்துவவாதியாவது, அவர்கள் இந்துக்களின் பண்டிகை தினங்களை குறிப்பாக தேர்ந்தெடுத்து மதமாற்றம் செய்து செய்தியாக்கினார்கள் என்று நிரூபித்துக்காட்ட முடியுமா அல்லது செவிவழிச் செய்தியேனும் உண்டா? இதன் மூலம் அவர்கள் இன்னும் தெளிவாக அம்பலப்படவில்லையா?
தாய் மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று பேரன்போடு அழைப்பவர்கள் அவர்களை இந்து மதத்தின் எந்த சாதியின் கீழ் சேர்ப்பார்கள்? சிறுபான்மையினரின் நினைவிடங்கள் , வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் இந்து கோயில்களை இடித்துதான் கட்டப்பட்டவை என்று அறிவிக்க அகழ்வாராய்ச்சி செய்து ஆதாரங்களை (?) வெளியிடுவது போல, அவர்கள் இந்துவாக இருந்தபோது என்ன சாதியிலிருந்தார்கள் என்பதையும் தோண்டி துலங்கி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சேர்த்துக்கொள்வார்களோ என்னவோ!
இந்து மதம் இருக்கும்வரையில் சாதி இருக்கும். சாதி இருக்கும்வரை எந்த ஒரு மனிதனும் சுய மதிப்போடு இந்து மதத்தில் இருக்க முடியாது. சுய மரியாதை உள்ள எந்த மனிதனும் இந்துவாக தொடர்வதை விரும்ப மாட்டான் என்பது அண்ணலின் கூற்று. காவிக்கூட்டத்தினருக்கெதிராக கைக்கோர்த்து அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, உண்மையான சமூக, பொருளாதார, ஆன்மீக சுதந்திரமுடையவர்களாக மக்கள் தொடர களம் காண வேண்டும். இதுவே இன்று நம் முன் உள்ள தலையாப கடமை.



- LEO JOSEPH D
dleokommedu@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக