வியாழன், 8 அக்டோபர், 2015

வைகோ திராவிட இயக்க தலைவரா?

வைகோ???
ரஜினியை நடுநிலைவாதி என்பதும் கமலை நாத்திகவாதி என்பதும் வைகோவை திராவிடக் கட்சி தலைவர் என்பதும் வேறு வேறல்ல. எல்லாமும் அப்பழுக்கற்ற கலப்படமற்ற முகமூடிகள் தான்.
திமுக வின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தனிகட்சி கண்ட வைகோவின் ஆரம்பம் என்னவோ ஆஹா போட வைப்பது உண்மைதான். ஆனால் அதன்பின் அவர் எடுத்த யூ டர்ன்களெல்லாம் ஊட்டி மலை ரோட்டில் கூட இல்லாத அதிசிய வகைகள் தான்.
பெரியார் மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து தனி கட்சி கண்ட அண்ணா, திக வின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பார்ப்பனர் உட்பட யார் வேண்டுமானாலும் வந்து ஏறிக்கொள்கிற பொதுவண்டியாக மாற்றினார். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகமாக கண்ட முன்னேற்றம் இது தான்.
கணக்கு வழக்கு ஒழுங்காக காண்பிக்க வில்லை என அங்கிருந்து தனி வண்டி பூட்டிய எம்ஜிஆர் பட்டவர்த்தனமான பக்திரசம் பொங்கும் கட்சியாகவே அதிமுகவை அமைத்தார். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு எல்லாம் அதிமுக வண்டியின் முன் எலுமிச்சை கட்டி தொங்கவிடப்பட்டு முற்றாக நசுக்கப்பட்டது.
ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதை கண்டித்து வெளியேறிய வைகோ, திராவிடம் என்பதை கட்சியின் பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்தேசிய கூடாரத்தில் சங்கமமானார். அவர் கண்ட மறுமலர்ச்சி சாதிய தமிழ்தேசியத்துக்கு பல்லக்கு தூக்குவதாகவே இருந்தது.
திராவிட கட்சிகளால் தான் இந்த நாடு சீரழிந்தது என பொங்கியெழுகிற தமிழ்தேசியவாதிகள் தங்களின் பிரதான எதிரியாக முன்னிலைப்படுத்துவது கருணாநிதியை மட்டும் தான். ஜெ வை கூட திராவிட லிஸ்ட்டில் வேண்டாவெறுப்பாக சேர்த்துக்கொள்கிற அவர்கள் வைகோவை அப்படி ஒருபோதும் எண்ணியதுமில்லை, பேசியதுமில்லை.
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண் விடுதலை, வர்க்க சமத்துவம் இது எதையும் முன்னிலைப்படுத்தாமல் முழுநேர பிரபாகர துதி பாடி தன்னை கடைந்தெடுத்த ஈழ வியாபாரியாக நிலைநாட்டிக்கொண்டவர் வைகோ. ரோமாபுரியிலே, கிரேக்கத்திலே, ஐரோப்பாவிலே, அமெரிக்காவிலே என்று நீட்டி முழக்க தெரிந்த வைகோவுக்கு உள்ளூர் தமிழகத்திலே ஒடுக்கப்படுகிற தமிழனை பற்றி சிந்திக்கமட்டும் நேரமிருந்ததேயில்லை.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர் வன்முறைகளுக்குள்ளாகி வரும் சூழலில் வைகோவின் நாக்கு சாதிக்கு எதிராய் எப்போதும் வார்த்தைகளை உதிர்த்ததேயில்லை. தமிழ்தேசியவாதிகள் சாதிய படுகொலைகளை பங்காளி சண்டைகள் என்று அடையாளப்படுத்துவதைப்போல சாதிய வன்முறைகள் அரங்கேறும்போதெல்லாம் ஆதிக்க சாதியின் குரலாகவே ஒலித்தவர் வைகோ.
அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டு நாடு முழுக்க ரத்த வெள்ளாறு ஓட செய்தபோது, அது குறித்த பாராளுமன்ற விவாதத்தில் ஒரு தேர்ந்த ஆர்எஸ்எஸ் காரரை போல அத்வானியின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முழங்கியவர் வைகோ. இந்த பேச்சினை அத்வானியும் வாஜ்பாயும் பாராட்டியதை தான் தனது பேச்சுதிறமைக்கான அங்கீகாரமாக முழங்குவார் மறுமலர்ச்சி திராவிட வைகோ.
ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் ஓரளவேனும் சிந்தித்து தெளிவான முடிவை எடுக்கிற வைகோ, சட்டமன்ற தேர்தல்களில் மட்டும் தெளிவாகவே சிந்தித்து அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடத்திற்கு குழிவெட்டியவர்கள் அண்ணாவும் எம்ஜிஆரும் என்றால் அதை மண்ணிட்டு மூடிய பெருமை வைகோவுக்கு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக