விஷ்ணு பிரியா அந்த கடிதத்தை தமிழில் எழுதினாரா, தங்கிலீஷில் எழுதினாரா என்ற தமிழ் பற்றெல்லாம் இருக்கட்டும். அதை அவர்தான் எழுதினாரா, எனில் தனது தற்கொலைக்கான காரணங்களாக விஷ்ணுபிரியா அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்ன? அப்படி எதையுமே குறிப்பிடாமல் டைம்பாஸ்க்காகவா லெட்டர் எழுதி தற்கொலை செய்து கொண்டார்? கடிதத்தின் சில பக்கங்கள் மறைக்கப்பட்டது ஏன்? கடைசியாக விஷ்ணுபிரியா அவர்களுடன் பேசியதாக சொல்லப்படுகிற எஸ்பி செந்தில்குமார் எது தொடர்பாக பேசினார்? யார் மீது , எதற்காக, யாரால், குண்டாஸ் போட நிர்பந்திக்கப்பட்டது? பத்து தனிப்படைகள் அமைத்தும்கூட யுவராஜ் என்ற சாதிவெறியனை இன்னும் பிடிக்காமல் இருப்பதன் பின்னனி என்ன? இன்னும் கேள்விகள் ஆயிரம். ஆனால் சாதி அரசும் சாதி அதிகாரிகளும் உண்மையை ஆழ குழி தோண்டி புதைக்கத்தான் பரபரக்கிறார்கள்.
புதிய பாமரன் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கூட விஷ்ணுபிரியா தங்கிலீஷில் தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறாரே, தமிழ் மறைந்துகொண்டே வருகிறதே என்பதுதான் கவலையாக இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. சாதி வளர்ந்து கொண்டே இருக்கிறதே என்ற கவலை பிரதானமான இடத்தில் இப்படியான மொழிப்பற்று கூட முகம்சுளிக்கதான் வைக்கிறது. தமிழ்மீது நீங்கள் கொண்ட அளப்பரிய காதலை காட்ட , சாதியால் படுகொலை செய்யப்பட்ட விஷ்ணுபிரியாவின் கடிதம்தானா கிடைத்தது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக