வியாழன், 8 அக்டோபர், 2015

விஷ்ணுபிரியா (தற்)கொலை வழக்கு: படுகொலை செய்யப்படும் உண்மைகள்

படுகொலை செய்யப்படும் உண்மைகள்!
" வன்னிய சாதிவெறிக்கு பலி இளவரசன்..
கவுண்ட சாதிவெறிக்கு பலி கோகுல்ராஜ்..
அரசு மற்றும் அதிகாரிகளின் சாதிவெறிக்கு பலி டிஎஸ்பி விஷ்ணுபிரியா... "
ஜெ வின் அதிமுக அரசில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் வன்முறை எல்லாமும் லைசன்ஸ் தேவைப்படாத அல்லது காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் மறைமுக லைசன்ஸ் பெற்ற தொழில்களாகிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி இளவரசன் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் சவமாக கண்டெடுக்கப்பட்ட போது அது குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின. தடயவியல் நிபுணர்கள் சிலர் , ஒரு தற்கொலை என்பதற்கான எந்த அறிகுறியும் இளவரசன் விஷயத்தில் காணப்பட வில்லை என்பதை பல்வேறு லாஜிக்கல் பாயிண்ட்டுகளோடு விளக்கியுமிருந்தார்கள். ஆனாலும் அதன் பின் என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இளவரசன் படுகொலை தற்கொலையாக சோடிக்கப்பட்டு வழக்கு இழுத்து மூடப்பட்டு உண்மை சவக்குழியில் புதைக்கப்பட்டது.
இளவரசன் படுகொலையில் ஊரறிந்த கொலையாளிகள் சாதி ஆதரவு அரசின் ஆசியோடு தப்பவிடப்பட்டதே அதே மாதிரியான மற்றொரு படுகொலையை அரங்கேற்றும் தைரியத்தை சாதி வெறி கொலையாளிகளுக்கு தந்தது எனில் அது கொஞ்சமும் மிகையல்ல. இளவரசனைக் கொன்ற அதே வழிமுறையில் கோகுல்ராஜும் கொல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். ஐஎஸ் தீவீரவாதிகள் தங்களிடம் பிணைய கைதியாக பிடிபட்ட ஒருவரை கழுத்தை அறுத்து கொல்வதற்கு முன் அவரை பேசவைத்து வீடியோ எடுத்து வெளியிடுவது போல் கோகுல்ராஜையும் மிரட்டி வீடியோ எடுத்து தப்பித்து விடலாமென கொலையாளிகள் திட்டமிட்ட வேளையில், கோகுல்ராஜின் தோழி உண்மையை வெளிப்படுத்தியதும் கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்த கொலையாளிகள் நடமாட்டமும் அவர்களை வேறுவழியின்றி இந்த கொலை வழக்கில் சிக்க வைத்தது.
சாதியை இறுக அணைத்து உச்சி முகர்ந்து காப்பாற்றும் சாதி அரசும் சாதி அதிகாரிகளும் நிர்பந்தத்தின்பேரில் கொலைவழககாக பதிவு செய்து, சிலரை கைது செய்தாலும், படுகொலையின் முக்கிய சூத்திரதாரி யுவராஜ் கவுண்டனை எட்டக்கூட முடியாத நிலையொன்றை காட்சியமைத்து அவனை பத்திரமாக தப்பவிட்டார்கள்.
கோகுல்ராஜ் வழக்கை உடனடியாக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென அப்போதே விடுதலை சிறுத்தைகள் உட்பட்ட பல கட்சிகளும் குரல் கொடுத்தன. ஆனால் எதற்கும் ஆளும் அதிமுக அரசு கொஞ்சமும் செவி சாய்க்கவில்லை. டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது குற்றத்தில் தொடர்பற்ற சிலரை கைது செய்ய மேலதிகாரிகளிடமிருந்து விஷ்ணுபிரியா அவர்களுக்கு தொடர் நெருக்குதல் வந்ததாக தெரிகிறது. இதன் மூலம் அப்பாவிகள் சிலரை வழக்கில் சிக்க வைத்துவிட்டு, உண்மையான குற்றவாளியான யுவராஜ் கவுண்டனை தப்பிக்க வைக்க அரசின் மேல்மட்டத்திலிருப்பவர்கள் மூலம் எடுக்கப்பட்ட முயற்சியாகவே இது தெரிகிறது. சில நாளிதழ்களில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் யுவராஜ் என்ற கவுண்ட சாதி வெறியன் சென்னையில் பதுங்கி இருந்ததாகவும், பின் அதே அமைச்சரின் ஆசியோடு யுவராஜ் பெங்களூருக்கு தப்பிச் சென்றதாகவும் செய்திகள் வெளியானதையும் இங்கு நாம் நினைவு கூற வேண்டியிருக்கிறது.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா அவர்கள் தற்கொலை செய்து கொன்றதாக கூறப்படும் நாளன்று அவர் தன் சக துறை தோழியான தன்னுடன் (டிஎஸ்பி மகேஷ்வரி அவர்களுடன்) பேசிக்கொண்டிருந்தபோது எஸ்பி லைனில் வருவதாக சொல்லி போனை துண்டித்தார், பின் அவரிடமிருந்து எந்த தகவலுமில்லை என்பதை குறிப்பிடும் டிஎஸ்பி மகேஷ்வரி அவர்கள் , இந்த மரணத்துக்கு உயரதிகாரிகளின் டார்ச்சர் தான் காரணம் என்பதை செய்தியாளர்கள் முன் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். தனது உயிருக்குயிரான தோழி, பணியில் நேர்மையாக இருக்க முயன்ற ஒரே காரணத்துக்காக தனது துறை மேலதிகாரிகளின் டார்ச்சர் அவரை கொன்றுவிட்டதை அவர் கதறியழுதபடி தெரிவித்தபோது சாதி அரசாங்கம் மற்றும் சாதி அதிகாரிகளின் மேல் நமது ஆவேசமும் உண்மையை மூடிமறைக்கும் இந்த அரசின் கயமைத்தனம் மீதான கோபமும் நமக்கு ஒருசேர வெளிப்படுகிறது.
இப்போது டிஎஸ்பி விஷ்ணுபிரியா கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிற அரசு , கோகுல்ராஜ் கொலை வழக்கையும் அதே சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவித்திருக்கிறது. ஆனால் தற்கொலைக்கு முன் விஷ்ணுபிரியா அவர்கள் எழுதியதாக கூறப்படும் கடிதத்திலேயே சில பக்கங்களை எடுத்து மறைப்பவர்கள் விசாரணையை மட்டும் நேர்மையாக கொண்டு செல்வார்கள் என்பதை கனவிலும் நினைக்க முடியவில்லை. அனைத்து கட்சி மற்றும் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த அரசு உடனடியாக இந்த இரு வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்து உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். யுவராஜ் இத்தனை நாட்களாக போலீஸிடம் சிக்காமல் தப்பிக்கும் பின்னனியில் யார் இருந்தது என்பதையும் மக்களுக்கு சொல்லியாக வேண்டும்.
மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் டார்ச்சர்களால் அரசு அதிகாரிகளே தற்கொலைக்கு தள்ளப்படுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்படுகொலைகளுக்கு உள்ளாவதும் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய அரசு எந்திரம் சாதி அகோரப்பல் காட்டி சிரிப்பதும் த்தூ த்தூ த்தூ வென இந்த ஒட்டுமொத்த அரசின் மீதும் நம்மை காறி உமிழ வைக்கிறது. இனியேனும் இந்த அரசு நேர்மையான விசாரணைக்கு ஆவன செய்து தன் மீதான எச்சிலை துடைத்துக்கொள்ளட்டும்!
- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக