அரசியல் பேசுவோம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரில்லை தான். ஆனால் அவரை விமர்சிப்பவர்களின் உள்நோக்கம் வெள்ளிடைமலையாக தெரிகிறது.
ஆதிக்க சாதியினரின் விமர்சனங்களில் , இவனால் தானே இந்த பற பயலுவலாம் நமக்கு சமமா அரசியல் செய்ய, பேச செய்கிறார்கள் என்ற ஜாதி வன்மமும் சில தாழ்த்தப்பட்ட பிரிவினர்களின் விமர்சனங்களில் தங்கள் சொந்த சாதியின் மீதான சுய ஜாதி போதையும் தான் பீய்ச்சியடிக்கிறது.
மற்றபடி தலைவர் திருமாவளவனை விமர்சிக்கும் முன், அவருக்கு மாற்றாக , அவரைவிட எல்லா வகையிலும் சிறந்த ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடிகிறதாவெனில், இல்லை.
இன்று என்னைப் போன்ற சாதாரண பாமரன்களும் அரசியல் பேச முடிகிறதெனில் அதற்கு அண்ணல் அம்பேத்கரின் ஒளியை சேரி இருட்டில் பாய்ச்சிய தலைவர் திருமாவளவன் தான் காரணம்.
விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிறை குறைகளோடு தான் அதனை ஆதரிக்கிறோம். எங்களுக்கு தெரியும் இது போதுமானதல்ல என்று. ஆனால் நாங்கள் கரையேற இந்த துரும்பை விடவும் இப்போது வேறு மாற்று இல்லை எனும் போது அதை இறுகப் படிப்பதே எங்கள் அறிவார்ந்த பாதையாக இருக்க முடியும்.
தலைவர் திருமாவளவன் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என சிலர் குற்றப்பட்டியல் வாசிக்கிறார்கள். சமூக நீதி, சமத்துவம் பேசி பல ஆண்டுகளாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திராவிடக் கட்சிகளால் பட்டியலின மக்களுக்கு மிஞ்சியது துரோகம் மட்டுமே.
திராவிடத்திற்கு மாற்று என கூவும் தமிழ்தேசியவாதிகளின் சாதி நோய் முற்றி நாற்றமெடுத்து ஓட வைக்கிறது. அப்படி இருக்க எங்களுக்கான எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடி வெல்ல வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தே இருக்கிறோம்.
எந்த குறிப்பிட்ட சாதியையும் தன் அடையாளப்படுத்தாமல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஏன் இதர பிற்படுத்தப்பட்ட , முன்னேறிய சாதிகளின் பெயரால் கட்சி நட த்துகிற தலைவர்களின் வஞ்சிப்பிற்கு உள்ளாகிற மக்களுக்காகவும் சேர்த்தே பாடுபடுகின்ற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் தான்.
எங்கள் கைகளை ஒன்றிணைத்து அதை பலப்படுத்துவது தான் எங்கள் முன் உள்ள பணியே அல்லாமல் நீலி கண்ணீரோடு தலைவர் திருமாவளவனை எங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடலாம் என எண்ணி பொய்யுரைகளை புழுதிவாறி தூற்றினால் நாங்கள் மயங்கி போவோம் என எண்ணியிருப்பின், உங்களுக்கு பரிசளிக்க எங்களிடம் ஏமாற்றம் மட்டுமே இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக