வியாழன், 8 அக்டோபர், 2015

மதத்தைக் கொன்று மனிதம் வளர்ப்போம்

மதத்தை கொன்று மனிதம் வளர்ப்போம்!
மாட்டுக்கறி தின்பவனை அடித்துக்
கொல் என்கிறீர்கள்..
அப்படியே கொன்றவனை
ஆஹாவென உச்சி முகர்கிறீர்கள்..
இந்து தேசமெனும்
இட்டு கட்டிய பொய்யை
ரத்தத்தில் நனைத்தெழுதி
வரலாறென்கிறீர்கள்
தீண்டப்படாதவன்
ரத்தத்தை குடிக்க
காவு கேட்கும் காட்டெரிகளை
கடவுளர்கள் என்கிறீர்கள்..
கொல்வதொன்றும்
புதிதில்லை உங்களுக்கு.. கொலை
தொழில் ஒன்றே
நீங்கள் மதம் வளர்க்கும் போக்கு..
அஸ்வமேத ராஜ சூய யாகங்களில்
கொல்லப்பட்டவை யாவும் முஸ்லீம்
குதிரைகளாக இருக்கலாம்.. கிறிஸ்தவ
யானைகளாக இருக்கலாம்.. தீயில்
வென்ற யானை குதிரைகளைக் கண்டு
லட்சுமி பத்ரகாளியாய் பார்த்து
சிரித்திருக்கலாம்..
பசுவில் மட்டுமே இருக்கிறாள்
லட்சுமி - அதன்
மூத்திரம் புனிதம் சாணமும் புனிதம்
முப்பது முக்கோடி தேவர்களும் பசு
மயிரிலும் பங்குபோட்டு வசிக்கிறார்கள்
இத்தனை பேர் இருந்தென்ன லாபம்
இந்த(து) சாமிகளை காக்க ரத்த
வெறியோடு நீங்கள்
அலையத்தான் வேண்டும்..
தன்னை காக்க
துப்பில்லாத சாமிக்கு
தரித்திரவான்கள்
சூலம் ஏந்தி காவு கேட்கிறார்கள்..
மாட்டுக்கறி தின்பவனை
கொன்று புனிதம் காக்கும் உங்கள் கைகளில்
மனித கறி கவுச்சை -
எல்லா சாமிக்கும்
ரொம்ப பிடித்தமோ?
சாதி பேசும் வேதத்தை
சாக்கடையில் போட்டு
சமூக நீதி பேசி மலர்ந்தெங்கள்
சமணமும் பவுத்தமும்..
மதவெறியை
கூர் தீட்டி கழுவேற்றினீர்கள் காற்றில்
இன்னும் கரைந்தபாடில்லை மரண ஓலம்!
சிவனை கும்பிடு.. இல்லையில்லை நீ
விஷ்ணுவை கும்பிடு..
மறுத்தவரெல்லாம் மண்ணுக்குள்
போனார்கள்..
கடைசி ஆசையும்
கேட்கப்படாமல்..
துடித்தவர் ஒலம்
எட்டவுமில்லை
நினைத்தவோர் கடவுள்துணை
கிட்டவுமில்லை
பட்டையும் நாமமும் பக்தனுக்குத் தான்..
சம்பூகனும் நந்தனும் காலம் தோறும்
துள்ள துடிக்க கொல்லப்படுகிறார்கள்
பார்ப்பன தர்மம் காக்க..
அன்பே உருவான கடவுள்கள்
ஆற அமர ரசித்தபடி..
பசு புனிதம் பார்ப்பன புனிதம் ஆறாம் வகுப்பிலேயே
உரக்க சொல்கிறது
ஆரிய திராவிட நாகரிகம்..
ஆறறிவிருந்தும்
தெளிந்தோமில்லை
'அவாளு'க்கு இணையாக
எந்த கடவுளுமில்லை..
ஆரிய நாடென்று ஆர்ப்பரித்தான் பாரதி..
வேதியர் முதலான
நால்வகை குலம் போனால்
வெந்தழியும் பூமியென்று
வேத சாபமிட்டான்..
மாட்டுக்கறி தின்னும் புலையரென்று
மட்டமிகு கவி எழுதி
பார்ப்பன தர்ம
பாடமெடுத்தான் அவன் பசுவுக்காய்
பதைபதைத்தான்..
மகா காவி அவன்
மகா பாவி..
ராமன்கள் சம்பூகன்களை கொல்ல
சூலத்தோடு அலைகிறார்கள்..
தீட்சிதன்கள் நந்தன்களுக்காய்
தீச்சட்டியோடு யாகம் வளர்க்கிறார்கள்..
மகா காவிகள் முண்டாசுக்குள்
ஒளிந்தபடி
மநு தர்மம் பேசுகிறார்கள்..
மதம் பிடித்து மதம் வளர்க்க
மனிதர்களை கொல்பவர்களே.. உங்கள்
நரமாமிச கடவுளர்களுக்கு படைக்க
இன்னும் எஞ்சியிருப்பது
மதம் மட்டும் தான்..
அதை கொல்வோம் நாங்கள்
மனிதம் வளர்க்க...!
- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக