குமுதம் ரிப்போர்ட்டரின் சாதிய வன்மம்
14.07.2013 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் இளவரசன் படுகொலையை தற்கொலை என்று திரித்து செய்தி வெளியிட்டு அதற்கிணையாக புரட்டுகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
இளவரசனின் படுகொலையை தற்கொலை என்று நிறுவுவதற்கு பெரும்பாலான சாதியவாதிகளும் காவல்துறையும் சுட்டிக் காட்டும் ஒரே ஆயுதம் இளவரசனால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கடிதம் தான். அது ஏன் இளவரசனை மிரட்டி எழுதவைக்கப்பட்டிருக்கக் கூடாது? ஒரு படுகொலையை தற்கொலை என்று மூடிமறைக்க ஒரே ஒரு கடிதம் மட்டுமே போதுமா? விடை காணப்படாத பல கேள்விகளுக்கு காவல்துறை என்ன பதிலை வைத்திருக்கிறது?
அதே ரிப்போர்ட்டர் இதழில் தோழர் பாலபாரதி அவர்களால் எழுதப்படும் எரிதழல் பகுதியில் இளவரசனின் மரணம் தொடர்பாக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது மரணம் நிகழ்ந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்லப்படும் நேரத்தில் அந்த ரயில்பாதை வழியே எந்த ரயிலும் செல்லவில்லை. அப்படியிருக்க வரவே வராத எந்த ரயிலில் அடிபட்டி இளவரசன் இறந்துபோனார்?
' குர்லா எக்ஸ்பிரஸில் மோதியிருந்தால் உடல் சிதறுண்டும் உள்ளுறுப்புகள் உருக்குலைந்தும் போயிருக்கும். எந்த எக்ஸ்பிரஸாக இருந்தாலும் அடுத்த ஸ்டேஷனில் நிறுத்தி நடந்த விபத்து குறித்து தெரிவிப்பதோடு ரயிலின் எந்த பாகம் மோதியது என்பதை அறிந்து அடையாளமிட்டு அதைப் பதிவு செய்வார்கள். இத்தகைய எந்த நடைமுறையும் அங்கே பின்பற்றப்படவில்லை....... '
இளவரசனின் உடலை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த எவரும் அவரது ஆடை எந்த கசங்கலுமின்றி கிடப்பதையும் ஒருக்களித்து குப்புறக் கவிழ்ந்து கிடந்ததையும் கவனித்திருக்கலாம். ஒரு சிறுகுழந்தை கூட இதை ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்று சொன்னால் ஏளனப்பார்வையோடு கடந்துவிடும். ஆனால் இந்த கொடூர சாதிய படுகொலையை அரசும் காவல்துறையும் ஆதிக்கவெறி சாதிகளுக்கு ஆதரவாக மூடி மறைக்க முயல்கிறது.
இந்த சில நாட்களில் தொலைக்காட்சிகளையோ செய்தித் தாள்களையோ கவனிக்கின்ற எவருக்கும் ஒரு செய்தி நிச்சயம் எட்டியிருக்கும். இளவரசனின் மரணம் நிகழ்ந்தவுடன் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது. அதில் இளவரசனின் பெற்றோர் விரும்புகிற மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக் குழுவில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. தர்மபுரி மாவட்ட எஸ்பி யை நேரிலும் சந்தித்தை இதே கோரிக்கை வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் இளவரசனின் பெற்றோர் வலியுறுத்திய மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு வந்து சேர்வதற்கு முன்பே அவசர அவசரமாக காலையிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த செய்தி பெரும்பாலான நாளேடுகளில் வந்திருக்கிறது. அப்படியிருக்க குமுதம் ரிப்போர்ட்டர் தனது செய்தியில் இளவரசனின் பெற்றோர் வலியுறுத்திய மருத்துவர்களும் தடயவியல் நிபுணர்களும் வந்தபிறகே பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டதாக ஆகாசப்புளுகு ஒன்றை அவிழ்த்துவிட்டிருக்கிறது. முந்தையநாள் பதியப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனை நிகழாமல் இருந்தால் இளவரசனின் பெற்றோர் கூறுவதுபோல அவர்கள் விரும்பும் மருத்துவர்களை பிரேதப் பரிசோதனைக் குழுவில் இடம் பெற உத்தரவிடலாம், ஆனால் பிரேதப்பரிசோதனை முடிந்துவிட்டது. பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட வீடியோ பதிவை இளவரசனின் பெற்றோரிடம் வழங்க வேண்டும். சந்தேகமிருப்பின் மறுபிரேத பரிசோதனைக்கு அணுகலாம் என்று உத்தரவிடுகிறது. குமுதம் ரிப்போர்ட்டர் சாதிய வன்மத்தோடு செய்தியை எவ்வாறு திரித்து வெளியிடுகிறது என்பதற்கு இது ஒரு சான்று.
தந்தை பெரியார் கூறியது போல, பார்ப்பன பத்திரிகை முதலாளிகள் தங்களுக்குள் தொழில்போட்டி இருந்தபோதும் நம்மை ஒடுக்கவேண்டும் என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. உண்மை வெளிவரும்வரை உரக்கக் குரல் கொடுப்போம். சாதிப் பேயை இல்லாதொழிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக