ஞாயிறு, 2 நவம்பர், 2014

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையும் பார்ப்பன சூழ்ச்சியும்

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணையும் பார்ப்பன சூழ்ச்சியும்


சாதிய அடுக்குவரிசையில் தங்களை எப்போதும் மேல்நிலையில் தக்கவைத்துக்கொள்ள காலங்காலமாக கடைப்பிடிக்கின்ற அதே சூழ்ச்சிதான் இப்போதும் இந்த பார்ப்பன அரசின் மூலமும் வெளிப்பட்டுள்ளது.

இடைநிலைச் சாதிகளை ஒன்றுக்குடன் ஒன்று மோதவிட்டு அவர்களை இடையறாது பகையுணர்வில் தொடரச்செய்வதன் மூலம் சாதியத்தை நிலைப்பெறச்செய்யும் தன் பூர்வாங்கத்திட்டத்தை சத்தமின்றி நிறைவேற்றிக்கொள்கிறது.

கடந்த இமானுவேல் சேகரன் அவர்களின் விழாவிற்கு முந்தைய நாட்களில் ஒரு தலித் சிறுவன் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டான். (அந்த வழக்கின் இன்றைய நிலை என்னவென்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. ) அந்த படுகொலையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அங்கே 144 தடையுத்தரவு பிறப்பித்தது.

காலங்காலமாக மக்கள் கொண்டாடி வரும் விழாவிற்கு தடையுத்தரவு போடுவதன் மூலம் பிரச்சினைக்கான முதற்படியை அரசே ஏற்படுத்தியது. ஒரு சாதி தலைவரை கைது செய்யக்கூட 5000க்கும் மேற்பட்ட போலீசாரை ஓரிடத்தில் குவிக்கும் இந்த அரசு, ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும் ஒரு நிகழ்விற்கு திடீரென தடையுத்தரவு பிறப்பித்ததே அதன் பிறகான எல்லாவற்றிற்கும் மூல காரணியாக விளங்கியது. மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதை கூட கணிக்கவியலாத முட்டாள் அரசாங்கமா இது? அதற்கேற்றபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால் எந்த ஒரு நிகழ்வானாலும் சரி, 144 தடையுத்தரவு பிறப்பிப்பதன் மூலமே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிடலாம் எனும் நினைப்பில்தான் இன்றைய அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

விழுப்புரத்தில் தடையுத்தரவு இருந்த காலத்தில் தான் அதிகமான கொலை வழக்குகள் பதிவாகின. இடிந்தகரையில் தடையுத்தரவு இருந்த நிலையில்தான் மக்களின் போராட்டம் தீவிர வடிவம் பெற்றது. எனில் பரமக்குடி சார்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதே சாதி கலவரத்திற்கு நெருப்பு மூட்டத்தானோ என எண்ண வேண்டியிருக்கிறது.

நிற்க, மக்கள் கட்டுக்கு அடங்கவில்லை, கலவரத்தில் இறங்கினார்கள் , அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை விட சாதிய சக்திகள் தங்கள் ஆதிக்க விஷத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் கக்குவதற்கான வாய்ப்பாகவே அந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் சான்றாகத்தான் அந்த படுகொலைகள் நிகழ்ந்தன. அதுவுமல்லாமல் அந்த படுகொலைகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென வழக்கு தொடரப்பட்டு விசாரணை இன்றளவும் நிலுவையில் இருக்கிறது. அப்படியிருக்க சம்பத் கமிஷன் விசாரணை அறிக்கையை இப்போது அவசர அவசரமாக தேவர் பூஜை தினத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய அவசியம் என்ன? ஒரு வழக்கு குறித்து சிபிஐ விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே மாநில அரசு, அப்பிரச்சனையில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை தாக்கல் செய்ய காரணம் என்ன?

இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே துப்பாக்கி சூடு நிகழ்த்தி ஆறு உயிர்களை கொன்று குவித்தோம் என இறுமாந்து பதில் சொல்லும் ஜெ அரசு , தேவர் பூஜை தினத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழக்கும் வகையிலான அறிக்கையை சட்டமன்றத்தில் யாரை சந்தோஷப்படுத்த? இரு பிரிவினரிடையே மீண்டும் மோதலை தூண்ட செய்யும் பார்ப்பன அரசின் மறைமுக சதியே இது.

தனது பார்ப்பன ராஜகுருக்களின் ஆலோசனைப்படி இடைநிலை சாதிகளிடையே தீமூட்டி அதில் ஓட்டு குளிர் காய விரும்பும் பார்ப்பன சூழ்ச்சி அறிவோம்!

- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக