ஞாயிறு, 2 நவம்பர், 2014

தமிழ் உணர்வும் சாதியமும்

தமிழ் உணர்வும் சாதியமும்
சென்னை கிரிக்கெட் கிளப்பில்
வேட்டி அணிந்து வர
தடை என்பதை கேள்விப்பட்டு பலரும்
பொங்கியெழுகிறார்கள். தமிழ்
கலாச்சாரத்திற்கு இவ்வளவு தான்
மதிப்பா,அத்தகைய
கிளப்களை உடனே மூடுங்கள் என
பலரும் முஷ்டி உயர்த்துவதைக் கண்ட
பின்னும் இந்த பதிவு எழுத கொஞ்சம்
தயக்கமாகத்தான் இருக்கிறது. இந்த
பதிவின் முடிவில் நான் தமிழின
துரோகியாக பட்டம் கட்டப்படலாம்,
அதனாலென்ன, அம்மா வாழ்க, சீமான்
வாழ்க, மாவீரன் பிரபாகரன் வாழ்க என
மூன்றுமுறை மூச்சு முட்ட,
நரம்பு புடைக்க கத்தினால்
என்னை தமிழன்தான் என மீண்டும்
அங்கீகரித்துக் கொள்வார்கள் என்ற
நம்பிக்கையோடே இதை தொடர்கிறேன்.
சென்னை கிரிக்கெட் கிளப்பில்
வேட்டி அணிந்து நுழைய
தடை என்பது உண்மையில்
இங்கிருப்பவர்களுக்கு இன்று தான்
தெரியுமா என்பது என் முதல் கேள்வி.
அதே சென்னை கிளப்புக்கு கோட்டு சூட்டு அணிந்து பலரும்
இத்தனை காலம்
அளாவளாவிக்கொண்டிருந்த போதெல்லாம்
ஊடகங்களின் தமிழ்
பற்று எங்கே போனது? இன்றைய
நிகழ்வை தமிழுக்கு , தமிழ்
கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட இழிவாக
பார்க்கிறார்களா,
அல்லது உயர்மிகு நீதிபதிக்கு ஏற்பட்ட
இழிவாகப் பார்க்கிறார்களா?
உங்கள் தமிழ் கலாச்சார உணர்வு கூட
மேட்டுக்குடி மக்களுக்கு ஏதேனும்
ஒன்றெனும் போதுதான் பொங்கியெழும்
என இதை நான் எடுத்துக்கொள்ளலாமா?
பிரிட்டிஷ்
காலத்து விதிகளையே இன்னும் நாம்
கட்டிக்கொண்டு அழலாமா என ஆவேசம்
காட்டுகிற தமிழ் உணர்வாளர்களின்
முன், கேட்டு கேட்டு புளித்துப்போன
என் அரதப்பழசான சில
கேள்விகளையே மீண்டும் முன் வைக்க
ஆசைப்படுகிறேன்.
எது தமிழ் கலாச்சாரம்? தமிழ்
கலாச்சாரமென்பது எதையெல்லாம்
உள்ளடக்கியவொன்றாக
கருதப்படுகிறது?
இன்று சென்னை க்ளப்பில்
வேட்டி அணிந்து நுழைய
தடை என்றதை கேட்டதும்
கொந்தளிக்கும் தமிழ் தேசிய
உணர்வாளர்களில் எத்துணைப் பேர்
இன்னும் பல கிராமங்களில் தலித்துகள்
வேட்டி அணியவும்
செருப்பு அணியவுமே மறுக்கப்படுகிறார்கள்
என்பதை அறிந்து நெஞ்சம்
கொதித்தெழுகிறார்கள்? ஆதிக்க
சாதி பிரிவு மக்கள் வாழும்
தெரு வழியாக கடக்கும்
பள்ளி சிறுவர்கள் தங்கள்
செருப்புகளை இரண்டு கைகளிலும்
தூக்கிக்கொண்டு நடந்த
காட்சியை இவர்கள் மனம் எப்போதேனும்
நினைத்துப் பார்த்திருக்குமா? ஜீன்ஸும்
கூலிங் கிளாஸும் போட்டு எங்கள்
பெண்களை ஏமாற்றுகிறார்கள் என
கூவுகிற அதே வாயாலாயே , தமிழ்
கலாச்சாரம் காக்கப்பட வேண்டும், இந்த
கிளப்புகளை சும்மா விடக்கூடாது,
உடனே இழுத்து மூட வேண்டுமென
வாய்வலிக்க பேட்டியுமளிக்க
முடிகிறதே எப்படி?
ஆம், தமிழ் உணர்வும் சாதி உணர்வும்
எப்போதும் சிறீதும் பிணக்கில்லாமல்
பின்னி பிணைந்து கொள்கிறது.
அதனால்தான் தமிழர்
பாதுகாப்பு இயக்கம் தொடங்க முடிகிற
ஒரு நபரால் தலித் அல்லாதோர்
சாதி கூட்டமைப்பையும் உருவாக்க
முடிகிறது. தமிழ்
பற்றி பேசும்போதே அதற்குள் எளிதாய்
சாதியத்தையும்
பூசி மெழுகிக்கொள்ளலாம்.
தமிழ் உணர்வாளனாயிருக்கும் ஒருவர்
சாதி மறுப்பாளராய் இருக்கவேண்டிய
அவசியமில்லாமல் போய் விடுகிறது.
இவர்கள் தமிழ், தமிழ் கலாச்சாரம்
என்று போற்றி பாதுகாப்பதெல்லாம்
சாதி, சாதி கலாச்சாரத்தை தான்
என்பது தெளிவு.
எது தமிழ் கலாச்சாரம்? உங்கள்
கலாச்சாரமென்பது உடை அடையாளம்
மட்டும் தானா? ஆரிய வேத
சடங்குகளும் எந்த இடை தரகர்களும்
இல்லாது தனக்கான
இணையை தானே தீர்மானித்துக்கொள்கி­
ற உரிமை ஆண், பெண்
இருவருக்குமே இருந்ததே , அதுதான்
தமிழ் கலாச்சாரம். ஆனால்
சாதிக்குள்ளே காதல் செய்தால்
மட்டுமே அது உண்மை காதல் என
பிதற்றி திரிகிறீர்களே,
அது சாதி கலாச்சாரம்!

பத்தாம் வகுப்பு படிக்கிற மாணவன்
சாதி வெறியர்களால்
கொடூரமாக தாக்கப்படுகிறான்.
தொடர்ந்து பதின்வயது சிறுமிகள்
பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்­
பட்டு சிதைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
உடைமைகளும் வீடுகளூம்
அடித்து நொறுக்கப்படுகின்றன.
பள்ளியில்
மாணவர்களுக்கு வைத்திருந்த நீர்
பானையில் நீரை மோந்து குடித்ததற்காக
ஆசிரியரால் ஒரு சிறுமி பிரம்பால்
தாக்கப்பட்டு பார்வை பாதிக்கப்படுகிறாள்.
ரேஷன் கடையில்
மற்றவர்களோடு வரிசையில்
நின்றதற்காக ஒரு பெண் மானப்பங்க
படுத்ணப்படுகிறாள்.. சொல்லி தீராத
ரணங்களென எங்கள் துயரங்களின் நீளம்
மிக அதிகம்.. ஆனால் இதையெல்லாம்
நீங்கள் கண்டும் காணாமல்
கண்மூடி கடந்தீர்களே,
எதை காப்பதற்காக? தமிழ்
கலாச்சாரத்தைக் காக்கவா,
இல்லை சாதி கலாச்சாரத்தைக்
காக்கவா?
தமிழ், தமிழினம், தமிழ் தேசியம், தமிழ்
கலாச்சாரம், தமிழ்
பண்பாடு என்றெல்லாம் கூவினால்
நரம்பு புடைக்கும்
உங்களுக்கு சாதி ஒழிப்பு,
சாதி மறுப்பு என்று பேசினால் மட்டும்
மோடியின் கசப்பு மருந்தைப் போல
குமட்டுகிறதே ஏன்?
நீங்கள் தமிழர்களாக
ஒன்றுபடுவதற்கு முன் மனிதர்களாக
ஒன்றிணையும் வழியைப் பாருங்கள்.
மதவெறி என்கிற
முகத்தை வளர்ச்சி என்கிற முகமூடிப்
போட்டு மறைக்கிற மோடிக்கும்
சாதிவெறி என்கிற முகத்தை தமிழ்
கலாச்சாரம் என்கிற
முகமூடி போட்டு மறைக்கிற
உங்களுக்கும் ஆக பெரிய என்ன
வித்தியாசமிருக்கிறது? முதலில் உங்கள்
குரல் சாதி ஒழிப்புக்காய்,
சாதி மறுப்புக்காய் உரக்க ஒலிக்கட்டும்.
சாதி கலாச்சாரத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு சாதியற்ற
சமூகத்தை கட்டியெழுப்ப என்ன
செய்யலாமென்பதை முன்னெடுங்கள்.
ஆம், அப்போது நாங்களும் இணைவோம்
தமிழ் கலாச்சாரம் காக்கப்பட
வேண்டுமென, வேட்டி எங்கள்
பாரம்பரியம்,
அதற்கு உரிமை வேண்டுமென!
அதுவரை நாங்கள் அறிந்தே இருக்கிறோம்
தமிழ்
கலாச்சாரமென்பதே எங்களை சவக்குழிக்குள்
அடக்கம் செய்கிற சாதி கலாச்சாரம் தான்
என்பதை! மோடிகள் எந்த வடிவில்
நின்றாலும் அதை ஒருபோதும்
ஆதரிக்கப்போவதில்லை!
- லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக