ஞாயிறு, 2 நவம்பர், 2014

கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும் --வே.மதிமாறன்

கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்
--வே.மதிமாறன்
மகாத்மா காந்தி அரிஜன் என்று அழைத்ததை போன தங்கம் இதழில் விமர்சித்திருந்தீர்கள். நீங்கள் என்ன குறை சொன்னாலும் ஏழைகளைப் போல், இடுப்பில் வெறும் கதர் ஆடையை அணிந்து வாழ்ந்த அவரின் எளிமையை வேறு எந்த தலைவரிடம் பார்க்க முடியும்?
-டி. கார்த்திகேயன், திருச்சி.
ஒரு தலைவர் கோவணம் கட்டி வாழ்கிறாரா? கோட் சூட் அணிந்து வாழ்கிறாரா? என்பதை விடவும் அவர் யாருக்காக வாழ்கிறார் என்பதுதான் முக்கியம்.
1919 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த காந்தி, செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரைக்கு சென்றார். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண் சேட்ஜி என்பவரின் பங்களாவில் தான் ஓய்வு எடுத்துள்ளார். சேட்ஜி வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, விவசாயிகள் இடுப்பில் மட்டும் துண்டு கட்டிக் கொண்டு போனதை பார்த்துதான், காந்தி அரை ஆடைக்கு மாறினார் என்று சொல்வார்கள். ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரி கூட இதை குறிப்பிட்டிருக்கிறார்.
ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, அவர்களைப் போல் குடிசையில் வாழவில்லை. மார்வாடி வீட்டு மாடி, பிர்லாவோட மாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள், இது போன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்.
ஆக, காந்திக்கு ஏழைகளின் உடை; தன் எளிமையை பிரச்சாரம் செய்ய பயன்பட்ட காஸ்டீயும்தானே (COSTUM) தவிர, ஏழ்மையை ஒழிப்பதற்கான குறியீடு அல்ல.
ஏழைகளின் மேல் அக்கறை கொண்ட தலைவன், ஏழ்மையை ஒழிக்க முயற்சிப்பானே தவிர, அதையே வாழ்நாள் முழுக்க அடையாளமாக்க மாட்டான். ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, ஓரு போதும் ஏழ்மையை ஒழிக்க முயற்சித்ததில்லை.
கோவணம் கட்டிய காந்தி, கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.
கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தார்.
*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக