திங்கள், 24 நவம்பர், 2014

மறந்தவர்களின் கதை

நேற்று பள்ளி முடிந்து பேருந்தில் திரும்புகையில் சில திருநங்கை சகோதரிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருக்கையில் அமர்ந்து வர, நானும் மற்றொரு ஆசிரியரும் நின்றபடி பயணம் செய்து கொண்டிருந்தோம்.எனக்குஅருகிலிருந்த ஆசிரியர் இருக்கை கிடைத்ததும் சற்று தொலைவில் போய் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் எனக்கு இந்த சகோதரிகளுக்கு பக்கத்து இருக்கையிலேயே இடம் கிடைக்க அமர்ந்தேன். ஒரு திருநங்கை சகோதரி என்னை அழைத்தார். எங்கள் உரையாடல் தொடங்கியது. " உங்க பக்கத்துல நின்னிட்டிருந்தாரே, அவர் உங்களுக்கு என்ன வேணும்?" " அவர் சார் மா" " நீங்க?" " நானும் சார் தான். அவர் கூடத்தான் வொர்க் பண்றேன்" " அவர் கூடவா? அவர் விழுப்புரத்துல ------ ஸ்கூல்லதான வொர்க் பண்றாரு" " உங்களுக்கு எப்படி தெரியும் அவரை? அவர் போன வருஷம்தான் கடலூருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தாரு" " அவர் கிட்டதான் நான் படிச்சேன். 9th, 10th அவர் தான் எனக்கு கிளாஸ் டீச்சர்" நான் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். " அவரை பார்த்து நான் சிரிச்சேன் சார்.. விஷ் பண்ண ட்ரை பண்ணேன். ஏனோ அவர் கண்டுக்கவே இல்ல. அடையாளம் தெரியலயா இல்லதெரியாத மாதிரி அவாய்ட்பண்ணிட்டாரானு தெரியல சார்" நான் இன்னமும் மௌனமாக அந்த சகோதரியை பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரே தொடர்ந்தார். " நான் ஒரு முட்டாள் சார்.. எனக்கும் இதே விழுப்புரம்தான்சொந்த ஊர். வீட்டை விட்டு துரத்திட்டாங்க.இப்போ தனியா ரூம் எடுத்து தங்கியிருக்கேன். ரத்த சொந்தங்களே அருவருப்பா துரத்தறப்ப அவர் என்ன பண்ணுவார்?" சொல்லி முடிக்கையில் இதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாததாய் இரு துளி கண்ணீர் வழிந்தோடியது. எனக்கு நன்றாகவே புரிந்தது அந்த கண்ணீர்இந்த ஆசிரியரின் புறக்கணிப்புக்கு மட்டுமானதல்ல என்று. அது ஆயிரம் வடுக்களை, அவமானங்களை, புறக்கணிப்புகளை, வலிகளை கரைத்தொழிக்க செய்கிற முயற்சி.. இரு சொட்டுக் கண்ணீரில் சோகமெல்லாம் கரைந்துவிடுமெனில் இந்த மானிட வாழ்வுதான் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும் எல்லோருக்கும்....? சிறிய ஆசுவாசத்திற்கு பின் மீண்டும் தொடர்ந்தார். " ஆனா அவரை எனக்கு ரொம்பபிடிக்கும் சார். ரொம்ப அழகா பாடம் நடத்துவார். ஆனா அப்போலாம் அவர் எங்கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்" " நீங்க எத்தனயாவது வரைக்கும் படிச்சிருக்கீங்க?" " பன்னெண்டாவது வரைக்கும் படிச்சேன் சார். அதுக்கப்றம் என்னால இரட்டை நிலைல தொடர முடியல. திருநங்கையாகிட்டேன்.. ஆனா எனக்கு படிக்கணும்னு கொள்ளை ஆசை சார். இப்பதான் ஏதோ கவர்ண்மெண்ட்ல ரூல்ஸ் போட்டிருக்காங்கபோல திருநங்கைகளையும் சேர்த்துக்கணும்னு..." " சரி இப்போ என்ன பண்ணறீங்க?" "தெரு கூத்து பண்றேன் சார். இப்போ கூட போய் குளிச்சு ரெடி ஆகணும். செஞ்சி பக்கம் தேவதானம்பேட்டைல நைட் தெரு கூத்து..." அதற்குள் நாங்கள் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. " என்னோட பேசிட்டு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார். இங்க இருக்கற எல்லார் பார்வைலயும் ஒரு ஏளனம் இருக்கு. ஏன் எங்கூட பேசிட்டு வந்த உங்க மேலயும் அந்த ஏளனப் பார்வை இருக்கு. ஆனா இப்படி அன்பா கனிவா ஒருபுது ஆள் எங்கிட்ட இதுவரைக்கும் பேசனதில்ல. வரேன் சார்..." அந்த சகோதரி இறங்கி போய்விட்டாள். எனக்குள்தான் பல நினைவுகளும் பாடாய்படுத்தியது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று வாய் கிழியபேசுகிறோமே, என்றாவது நான் இவர்களையெல்லாம்நினைத்தேனும் பார்த்திருக்கிறேனா? நான் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவன். அந்த சகோதரி பாலின ரீதியாக ஒடுக்கப்பட்டவள். வேறென்ன பெரும் வித்தியாசம்? அட எனக்குகூட ஓட்டரசியலுக்காகவாவது கூப்பாடு போட நாலு கட்சிகள் இருக்கின்றன. சொந்த வீடும் புறக்கணித்து சொந்த மண்ணிலேயே அகதியாய் வாழ்பவர்களுக்கு? நேற்றிரவு அந்த சகோதரியின் தெருக்கூத்து நடிப்பு பலரின் கைத்தட்டலை வாங்கியிருக்கலாம். விடியலற்ற இருள் போர்த்திய வாழ்க்கையை இன்னும் எத்தனைநாள்தான் சுமந்து கிடப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக