ஞாயிறு, 2 நவம்பர், 2014

உண்மை முகமறிவோம்; ஒன்றிணைவோம்

உண்மை முகமறிவோம்; ஒன்றிணைவோம்


காந்தியை பெரும் சகாப்தம் என்றும் மகாத்மா என்றும் சிலாகிப்பவர்கள் கூறுவது அவர் தீண்டாமையை எதிர்த்தார் என்பது தான். ஆனால் காந்தி அதை இந்து சமயத்தில் இருந்தபடியே செய்யவேண்டுமென்றும் சாதி அமைப்பு தொடர வேண்டுமென்றும் வாதிட்டார். அவரின் உண்மை முகத்தை கிழித்தெறிந்து வெட்ட வெளிச்சமாக்கினார் அம்பேத்கர். அவ்வப்போது காந்தியைப் போன்றே பார்ப்பானுக்கு நோகாமல் சாதிப் புரட்சி செய்பவர்கள் அவ்வப்போது ஏதேனும் உளறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பார்ப்பானின் பதிவு கீழே..

//மாணவர்களை சாதி பிரச்சனையில் இழுப்பது எந்த மாதிரியான அரசியல்என்று எனக்கு புரியவில்லை ... சில மாதங்களுக்கு முன்னர் ஈழத் தமிழர் நலன் என்கிற ஒரு குடையின் கீழ் அனைத்து மாணவர்களையும் கொண்டு வர முடிந்ததை சிதைக்கும் செயலாகத் தான் இது அமையப் போகிறது ... மாணவர்களும் சாதி ரீதியாக பிரிக்கப்பட்டு , அவர்களிடம் உள்ளஒற்றுமையை சிதைக்கும் செயல் தான் இது ... இதை தூண்டிடும் நபர்களை அரசாங்கம் எப்படி விட்டு வைத்திருக்கிறது?//

ஈழத் தமிழர் நலன் சார்ந்த போராட்டத்தில் மாணவர்களின் ஒன்றிணைப்பு மெச்சப்படவேண்டியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தேர்தல் அரசியல் ஒன்றையே மையமாகக் கொண்டு ஈழம் ஈழம் என்று கூவி கட்சிகள் யாவும் ஓட்டுப்பிச்சை எடுத்த நிலையில் மாணவர்களின் தன்னிகரற்ற ஒருங்கிணைப்பே எல்லோருக்குள்ளும் தீயாய் ஈழ உணர்வை பரவச் செய்தது.

காங்கிரஸே சரணம் என்று அது காலால் எட்டி உதைத்தும் கூட கட்டிக் கொண்டு கிடந்த திமுக , காங்கிரஸைக் கை கழுவ காரணம் மாணவர்களின் போராட்டம் தான். ஏன் இப்போதுகூட மகளின் ராஜ்யசபா சீட்டுக்காக யார் யார் காலிலோ விழுந்து கடைசியில் காங்கிரஸிடமே சரணாகதி அடைந்தாலும், தேர்தல் முடிந்ததும் , அய்யய்யோ! காங்கிரஸுடன் கூட்டணியெல்லாம் இல்லை என்று அலறியடித்து அறிவிக்கவும், எந்த கணமும் மீண்டும் புயலடிக்க காத்திருக்கும் மாணவர்களின் போராட்டம்தான் காரணம்.

நிற்க, மாணவ ஈழப் போராட்ட காலங்களில் பரவலானக் குரல் ஒன்று பலரிடமிருந்தும் வெளிப்பட்டது. அது, இதே அர்ப்பணிப்போடு மாணவர்கள் சாதி ஒழிப்பிற்காகவும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். சாதி ஒழிப்பிற்காக ஒன்றிணையும் மாணவர்கள் சாதி ரீதியாக பிளந்து நிற்பார்கள் என்பது ஏற்கவொண்ணா வாதம். மாணவர்களின் ஈழப் போராட்ட காலங்களில் கூட அவர்களை பிளவுப்படுத்தி கட்சி ரீதியான ஆதாயம் தேட பலரும் முனைந்தனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் மாணவர்கள் எல்லாக் கட்சிகளையும் புறந்தள்ளி களத்தில் நின்றனர். அதே போல் இப்போதும் ஏன் மாணவர்கள் ஒன்றிணையக் கூடாது? உண்மையில் அப்படி மாணவர்கள் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பதுதான் பார்ப்பன தேசியவாதிகளின் கனவாகவும் இலட்சியமாகவும் இருக்கிறது.

அரசு எப்படி இவர்களை விட்டு வைத்திருக்கிறது என்ற பார்ப்பன பதிவரின் ஆதங்கம் நியாயமானதே. ஏனெனில் நடப்பது அவாளின் ஆட்சி. மாணவர்கள் சாதி ஒழிப்பென்று கிளம்பிவிட்டால் அவாள்களின் கூட்டம் எப்படி பிழைப்பை ஓட்டுவது? அவர்களை முளையிலேயே ஒடுக்கவேண்டியது அவாள் அரசின் கடமையல்லவா என்ற அவரின் ஆதங்கத்தை நம்மால் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ்தேசியவாதிகளின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ளவும் ஆகப் பெரிய சந்தர்ப்பமாகவே இதைக் கருதுகிறேன். இதுவரை இளவரசன் படுகொலை குறித்து சீமான், பழ நெடுமாறன் உள்ளிட்ட யாரும் வாய்திறக்கவே இல்லை. திருமுருகன் காந்தி மட்டுமே, சக மனிதனை நேசிக்க உரிமையில்லா ஒரு சமூகத்தை தமிழன் ஆண்டாலென்ன, சிங்களவன் ஆண்டாலென்ன என்று எல்லோர் முகத்திலும் காறி உமிழ்ந்தார்.

பார்ப்பனனை ஒழித்தாலொழிய தமிழன் விடுதலை அடைய முடியாது என்று முழங்கிய பெரியாரை புறந்தள்ளும் இவர்கள் சாதி ஒழிப்பிற்காக முன்னெடுக்கும் விஷயங்கள்தான் என்ன? வெற்று கூச்சல் மட்டுமே. பார்ப்பனர்களை அரவணைத்துக் கொண்டே சாதியை ஒழித்துவிடுவார்களாம்...! இவர்களின் திராவிட எதிர்ப்பிற்கு காரணம் வெறுமனே கலைஞர் மீதான வெறுப்பும் அவரின் குடும்ப ஆதிக்க அரசியலின் மீதான அருவருப்பும் என்பதுபோல் மேலோட்டமாக தெரிந்தாலும் அதன் உள்ளே பல்லிளிப்பது சாதி தான்.

சாதி ஒழிப்போம் என்ற வெற்றுக்கூச்சலிடுவதன் மூலம் மட்டுமே சாதியை ஒருக்காலும் அழித்துவிட முடியாது. இதை தமிழ்தேசியம், இந்திய தேசியம் பேசுகிற யாரும் உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களுக்கு சாதி ஒழியவும் கூடாது, சாதி ஒழிப்பாளர்கள் போலவும் காட்டிக்கொள்ள வேண்டும், அவ்வளவே.

சாதி ஒழிய வேண்டுமாயின் சாதியின் ஊற்றுக்கண்ணை அழித்தொழிக்க வேண்டும். சாதியின் ஊற்றுக்கண் எது? இந்துமதமும் அதன் வேத சாஸ்திரங்களும் புராணங்களும் தான். வேதங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் பார்ப்பனர்களால் மிக கவனமாக தங்கள் மேட்டிமையை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையிர் நிர்மாணிக்கப்பட்டவை. இன்று நான் வன்னியன், நான் நாடான், நான் முக்குலத்தான், எனவே உங்களை விட உயர்ந்தவன் என்று மார்தட்டிக்கொள்ளும் யாரும் ஒரு உண்மையை புரிந்தபாடில்லை அல்லது புரிந்தும் மறைத்துக் கொள்கிறார்கள். அது, நீங்கள் என்ன சாதி என்று மார்தட்டிக் கொள்கிறீர்களோ அந்த கணமே நீங்கள் பார்ப்பானை விட தாழ்ந்தவர்கள் என்றும் அவன் கூறுவதுபோல பார்ப்பானைத் தவிர மற்றனைவரும் வேசியின் மகன்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதுதான்.
இதை தெளிவாக அண்ணலும் பெரியாரும் உணர்த்தியிருக்கிறார்கள்.

வேசியின் மகன் என்று சொல்பவனைக் கோபம் பொங்கியெழ வேண்டாமா? ஆனால் அப்படி எழவிடாமல் இந்த ஏணிப்படி சாதி அமைப்புமுறை தடுத்துவிடுகிறது. நாம் பார்ப்பான்களுக்கெதிராக ஒன்றிணைவதில் காட்டவேண்டிய சக்தியை நமக்குள் சண்டையிடுவதிலேயே செலவிட்டுக்கொள்கிறோம்.

பெரியாரை எதிர்ப்பவர்கள் சொல்லும் ஒரே காரணம், அவர் தெலுங்கன் என்பது. அட அவர் அண்டார்டிகா பிரதேசத்தை சார்ந்தவராக கூட இருந்துவிட்டுப்போகிறார். ஆனால் அதுவல்ல அவர்களுக்கு விஷயம். நாம் பார்ப்பனர்களுக்கெதிராய் ஒன்றிணைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே.. சூழ்ச்சியறிவோம். சாதி ஒழிக்க கரம் சேர்ப்போம் வாருங்கள். உங்களின் ஒன்றிணைப்பின் ஆற்றலை சமூகம் உணர வேண்டிய தருணம் இது.

-லியோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக