வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

இந்தியாவில் சாதி நிலைப்புக்கான காரணம் எ‌ன்ன? - ஆசிரியர் திரு.லெனின்

பொதுஉடமைக்காரர்கள் சார்பில் நான் :

இந்தியாவில் சாதிமுறை எவ்வாறு தோன்றியது அது தொடரக் காரணமென்ன?

இந்தியாவில்,ஐரோப்பாவைப் போன்று அரசர் காலத்தில் நிலங்கள் வில்லங்கமில்லா பட்டா நிலங்களாக நிலப்பிரபுகளுக்கு சொந்தமாக இல்லை.அதாவது நிலத்தில் நிலப்பிரபுத்துவ நில உடைமை முறை தோன்றவில்லை. அவ்வாறு தோன்றியிருந்தால்,ஐரோப்பாவை போன்று இங்கும் நிலப்பிரபு பண்ணையடிமை என்ற இரு எதிர்எதிர் வர்க்கங்களே தோன்றியிருக்கும். சாதிமுறை தோன்றயிருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு இந்தியாவின் தனித்தன்மைக்கு ஏற்ப சிக்கலான தேங்கிய சமூக நில உடைமை முறை நீண்ட காலம் தொடர்ந்தது. இதன் விளைவாய்

1.சுயதேவைக்கிராமங்கள்
2.குலத்தொழில் (இதன் தேவையிலிருந்து)
3.அகமணமுறை
4.சாதிமுறை
5.சாதி குடியிருப்புகள்
6.சாதி பண்பாட்டு உளவியல்

ஆகியவைகள் தோன்றின.

இவைகளும் ஒன்றாக சேர்ந்து,குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும்,ஒருமொழி பேசுவோர்,ஒரு தேசிய இனஉணர்வைப் பெறுவதில்,இனமாக உருவாவதிலும் ஒரு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு வர்க்கசமுதாயமும் (ஆண்டான்_அடிமை.
நிலபிரபு_பண்னையடிமைமுறை.
முதலாளி_தொழிலாளி.
தனியுடைமையற்ற சோசலிச சமுதாயம்.)
ஒரு குறிபிட்ட பொருளியல் உற்பத்தி முறையின் வெளிப்பாடே ஆகும்.எனவே அந்த குறிப்பிட்ட உற்பத்தி வளர்ச்சிமுறையில் அல்லது தேங்கிய நிலையில்,ஏற்படும் எந்த ஒரு தனித்தன்மையும்,சமுதாய வாழ்க்கை முறையிலும் (உற்பத்தி உறவுகளிலும்) தனித்தன்மையை உருவாக்கவே செய்யும்.

சாதியின் தோற்றத்திற்கும்,நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறுகாரணங்களில்,ஆட்சியாளர்களின் (அந்நிய ஏகாதிபத்தியம்,அவர்களின் உள்நாட்டுத் தரகர்கள்,மற்றும் கிராமப்புற நிலபிரபுத்துவ ஆதிக்க சக்திகள்)
சுரண்டல் ஆதிக்கநலனில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட மூலதனம்,தொழில்நுட்பம்,இயந்திரங்கள் மூலம் உற்பத்திசக்திகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாய்

1.சுயதேவைக் கிராமங்கள்
2.குலத்தொழில் ஆகியவை மட்டும் மங்கி மறைந்துள்ளன.

ஆனால் அந்நிய சுரண்டல்காரர்களுக்கும் அவர்களின் உள்நாட்டு தரகர்களுக்கும் கிராமப்புற ஆதிக்ககாரர்களுக்கும் சாதியின் தோற்றத்திற்கும் நிலைப்புக்குமான மேற்கண்ட ஆறு காரணங்களையும் ஒழிக்கவேண்டிய அவசியமில்லை சமுதாயத்தில் ஒரு அடிப்படைமாற்றத்தையும் உருவாக்கவேண்டிய அவசியமும் இல்லை.

இதனால் இன்றும் சாதியின் நிலைப்புக்கான கீழ்கானும் 4 சமூகக்காரணங்கள்.
1.சாதிமுறை
2.சாதிக்குடியிருப்புகள்
3.அகமணமுறை
4.சாதியப்பண்பாட்டு உளவியல்

தொடர்கின்றன.அழிந்துவிட்ட சுயதேவைக்கிராமங்கள் குலதொழில் ஆகியவற்றின் இடத்தை பல்வேறு வழிகளில் சாதிக்கட்சிகள் நிரப்பிக்கொண்டன. கூடவே சாதியை பயன்படுத்தும் கட்சிகளும் ஆட்சியாளர்களாலும  இவைகள் பாதுகாக்கப்படுகின்றன.

எனவே சாதிக்கும் சாதிமோதலுக்குமான சமூகக் காரணங்களில் பெரும்பான்மையானவை தொடர்வதால் ஒரு அடிப்படை சமூக மாற்றமின்றி சாதிக்கு முடிவு கட்டுவது என்பது ஒரு பகற்கனவே.

எங்கே உங்களுடைய ஜேஎன்யூ? - மருதன்

#மதிப்புக்குரிய_இந்துத்துவர்களே... எங்கே உங்களுடைய #ஜேஎன்யு?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை வெறுப்பதற்கான எல்லா நியாயங்களும் பாஜகவுக்கு இருக்கின்றன. ஜேஎன்யு-வால் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருக்கிறதா என்று சீறி விழுவதற்கும், ஜேஎன்யு தேசவிரோதிகளின் கூடாராமாகத் திகழ்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கும்கூட இந்துத்துவர்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது.

அவ்வளவு ஏன், ஜேஎன்யுவை இழுத்து மூடவேண்டும் என்று அவர்களில் ஒரு பகுதியினர் துள்ளிக்குதித்து கூப்பாடு போடுவதையும்கூட கொஞ்சம் அவர்கள் பக்கம் நின்று பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்!

மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜான் காட்டன் என்னும் கிறிஸ்தவ குருமார் ஒருவர் வாழ்ந்து வந்தார். பி.ஏ., எம்.ஏ என்று படித்தவர். மிகுந்த பேரும் புகழும் பெற்று தேவாலயத்தில் பணியாற்றிவந்தார். பல நூல்களைக் கரைத்துக் குடித்தவர். கற்றறிந்த ஞானி என்று போற்றப்பட்டவரும்கூட. இவ்வளவு செல்வாக்குடன் இருந்த இந்த காட்டன்,  தனது நூல் ஒன்றில் இப்படி எழுதி வைத்தார். ’அதிகம் படிப்பவர்களும் அதிக அறிவாற்றல் கொண்டவர்களும் சாத்தானுக்குப் பணியாற்றுவதற்கே தகுதியானவர்கள்!’

அவரே படித்தவர்தான் என்றாலும் அதிகம் படிப்பவர்களைக் கண்டு காட்டன் எரிச்சலடைந்ததற்குக் காரணம் அவர்கள் பைபிள், இறையியல் என்று மட்டும் திருப்தி கொள்ளாமல் அறிவியல், வரலாறு, புவியியல் என்றெல்லாம் கண்டபடி தேடிப் படித்ததுதான். இந்தத் துறைகள் எல்லாம் அவரைப் பொறுத்தவரை தேவையற்றவை மட்டுமல்ல, ஆபத்தானவையும்கூட. காரணம் இவற்றையெல்லாம் படிக்கும் ஒருவர் இறைவனின் இருப்பையும் தேவலாயத்தின் அதிகாரத்தையும் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்.

எதையும் சந்தேகிக்கும் குணம், எதையும் நம்ப மறுக்கும் பழக்கம், யாரையும் எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆற்றல் வளர்ந்துவிடும். புண்ணியத்தைத் தேடித்தரும் பக்தியைக் கைவிட்டுவிட்டு தீங்கு விளைவிக்கும் அறிவை நாடிச் செல்பவர்கள் சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்தான். இல்லையா?

ஜேஎன்யுவுக்கு வருவோம். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சங் பரிவாரங்களும் இன்னபிற இந்துத்துவர்களும் ஜேஎன்யுவை  கண்டு எரிச்சல் கொள்வது ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும். அறிவைத் தேடிச் செல்பவர்களை,  ஜான் காட்டனைப் போல் ஏன் அவர்கள் வாய்க்கு வந்தபடி சபிக்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கும். அறிவுத் தேடலுடன் உள்ளவர்களை வெறுக்கும் போக்கு கிட்டத்தட்ட உலகம் தழுவியது.

ஓராண்டு முழுக்க ஒரு புத்தகத்தைக் கூடப் புரட்டாமல் காலம் கழித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 28 சதவிகிதம். அதே அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர்  இன்னமும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியலை வெறுப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கே குறைவில்லை.

ஜான் காட்டன் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறார். இந்தியாவில் அவர் இந்துத்துவர் என்று அறியப்படுகிறார்.  காஷ்மீர் அவருக்குப் புனிதமானது என்பதால் எல்லோரும் அதை ஒரு புனிதப் பொருளாகப் பாவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பும் ஜேஎன்யு மாணவர்களை அவர் மனதார வெறுக்கிறார். உடன்படுபவர்களையும் வழிபடுபவர்களையும் மட்டுமே அவர் தேச பக்தர்கள் என்று கருதுகிறார்.  முரண்படுபவர்கள், சந்தேகிப்பவர்கள் தேச விரோதிகள். சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்.

மேலும் மேலும் முரண்பாடுகள் முளைக்காதிருக்க வேண்டுமானால், காஷ்மீர் போல் மேலும் பல புனிதங்கள் சிதறடிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், மேலும் பல கன்ஹையா குமார்களும் உமர் காலித்துகளும் பெருகாமல் இருக்கவேண்டுமானால், ஜேஎன்யு என்னும் சாத்தானின் கோட்டை அகற்றப்பட்டாகவேண்டும். எனவேதான் ஜான் காட்டன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களை அச்சுறுத்துகிறார். ஜேஎன்யு-வுக்கு முடிந்த அளவுக்கு இழிபெயரை வாங்கித் தந்துவிடமுடியாதா என்று தலைகீழாக நின்று பிரயத்தனப்படுகிறார்.

இந்துத்துவ நண்பர்களே, ஜேஎன்யுவை இந்த வழிகளில் எல்லாம் வீழ்த்துவது சாத்தியமில்லை. ஜான் காட்டனைப் போல் சபிப்பதிலும் பலனில்லை. உங்கள் விருப்பு, வெறுப்புகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் கோபத்தையும் எரிச்சலையும் கையறு நிலையையும் தாற்காலிகமாக மறந்துவிட்டு நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.

ஜேஎன்யு,  இடதுசாரிகளின் கோட்டையாக மாறிவிட்டது என்று வெறுமனே குற்றம் சுமத்தாமல்,  அந்தப் பல்கலைக்கழகத்தின் அமைப்பையும் அடித்தளத்தையும் ஆராய்ந்து பாருங்கள். ஊர் பேர் தெரியாத ஒரு கன்ஹையாவுக்காக எங்கிருந்தோ நோம் சாம்ஸ்கியால் எப்படிக் குரல் கொடுக்க முடிகிறது? ஜேஎன்யு வளாகத்துக்குள் காவல் துறையினர் நுழைந்ததை இலக்கியத்துக்கான நோபல் பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் ஏன் கண்டிக்கிறார்? தற்போதைய அரசு எதேச்சதிகார போக்குடன் செயல்படுவதைக் கண்டிக்கிறேன் என்று ஜுடித் பட்லரால் எப்படி அறிக்கை வெளியிடமுடிகிறது?

கொலம்பியா பல்கலைக்கழகம், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், சான் மார்டின் பல்கலைக்கழகம் என்று தொடங்கி உலகின் பல மூலைகளில் இருந்தும் பேராசிரியர்களும் அறிவுஜீவிகளும் போராடும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக எப்படிக் கூட்டாக இணைகிறார்கள்? நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று எப்படி அவர்களால் ஒரே குரலில் சொல்லமுடிகிறது?

கடைசியாக இப்படியொரு ஆதரவை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? விமானத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரியையும் நாங்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொன்னபோது எத்தனை பல்கலைக்கழகங்களில் இருந்து உங்களுக்கு ஆதரவு திரண்டுவந்தது? எவ்வளவு கற்றறிந்த அறிஞர்கள் உங்களுடன் இசைந்தார்கள்?  

சாவர்க்கரும், ஹெட்கேவாரும்,  கோல்வால்வரும் ஏன் உலகின் கவனத்தை இன்றுவரை ஈர்க்கவேயில்லை என்பதை நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களுடைய இந்துத்துவா ஏன் உலகால் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? உலகை விடுங்கள், நாக்பூரைத் தாண்டினால் எவ்வளவு பேருக்கு சாவர்க்கர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தீன்தயாள் உபாத்யாயாவை எவ்வளவு தென்னிந்தியர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நேருவைத் தாக்குகிறீர்கள். அவர் பெயர் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தையும் தூற்றுகிறீர்கள். தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரேயொரு தலைவரையாவது உங்களால் இதுவரை உருவாக்கமுடிந்திருக்கிறதா? சர்தார் வல்லபபாய் படேலைக்கூட முழுமையாகச் சொந்தம் கொண்டாடமுடியாமல், நீங்கள் ஏன் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இன்றைய தேதி வரை ஏன் சாவர்க்கரை உங்களால் சஞ்சலமின்றி முன்னிறுத்த முடியவில்லை? ஏன் அவர் கருத்துக்களை மக்களிடம் பிரசாரம் செய்யமுடியவில்லை? என்ன தயக்கம்?

கடைசியாக ஓர் இந்துத்துவர் எழுதி வெளியிட்ட ஓர் ஆய்வு நூல் என்ன? அந்நூல் சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா? வரலாற்றை இடதுசாரிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று முழங்க முடிந்த உங்களால், ஏன் ஒரு ரொமிலா தாப்பரை, ஒரு இர்ஃபான் ஹபீப்பை, ஒரு ரஜனி கோத்தாரியை உருவாக்கமுடியாமல் இருக்கிறது? இன்னொரு ஆர்.சி. மஜும்தாரைக்கூட ஏன் காணமுடியவில்லை?

அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், அரசியல் சித்தாந்தவாதிகள், தத்துவவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று அறிவுத்துறையின் எந்தக் கதவைத் திறந்தாலும் அங்கே இடதுசாரிகள் அணிவகுத்து நிற்பது ஏன்? வலதுசாரி சிந்தனையோட்டம் இங்கே ஒரு படி கூட வளராமலே இருப்பதால்தானே? இதை நீங்கள் எப்போதாவது நேர்மையுடன் எண்ணிப் பார்த்ததுண்டா?

அறிவுசார் துறைகளுக்குக்கூடப் போகவேண்டாம். உங்கள் இருப்புக்கும் லட்சியங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் மதத்தையே எடுத்துக்கொள்வோம். இஸ்லாத்தை, கிறிஸ்தவத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, அந்த மதங்களைச்  சேர்ந்தவர்களைப் பகைச் சக்திகளாகப் பார்க்க உங்களால் முடிந்தது. என்றேனும் இந்துக்களை நீங்கள் நட்புச் சக்திகளாகப் பார்த்ததுண்டா? இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பிளவுகளையும் சாதி மோதல்களையும் நீங்கள் எதிர்த்ததுண்டா? அடித்தட்டு தலித் மக்களை இந்துத்துவத்தின் பெயரைச் சொல்லி அரவணைத்துக் கொள்ளமுடிந்ததா? இந்துவாகப் பிறந்தேன், ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று அறிவித்து இந்து மதத்தைத் துறந்த அம்பேத்கரை இன்று சொந்தம் கொண்டா விரைந்தோடி வரும் உங்களால் அம்பேத்கரை அன்று ஏற்கமுடிந்ததா? அவருடன் உறவு பேண முடிந்ததா? அவரை இந்து மதத்தில் தக்க வைக்கமுடிந்ததா?

வரலாற்றுக்குப் போகவேண்டாம்... இன்று நடப்பது என்ன? ரோகித் வெமுலாவின் அப்பாவின் சாதி என்ன, அவருடைய மூதாதையரின் சாதி என்ன என்னும் அளவுக்குத்தான் உங்கள் ஆய்வுப் பார்வை வளர்ந்திருக்கிறது என்பது உண்மையிலேயே அவமானகரமானது இல்லையா? இன்று உங்களுக்கு அதிகாரம் கைகூடியிருக்கிறது. உங்கள் பலம் கட்டற்ற முறையில் வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்தப் பலத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள். இதைத்தான் நீங்கள் செய்ய விரும்பினீர்களா? ஒரு பல்கலைக்கழகம்தான் உங்கள் எதிரியா?

உண்மையில், ஜேஎன்யு-வை நீங்கள் எதிரியாகப் பாவிப்பது தவறில்லை. ஆனால் ஜேஎன்யு-வுடன் போரிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? உங்கள் அதிகார பலத்தையோ அரசு பலத்தையோ அல்ல, அறிவு பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கவேண்டும். ஜேஎன்யு எந்த அடித்தளத்தின் மீது எழுந்து நிற்கிறதோ அப்படியொரு அடித்தளத்தில் நீங்களும் ஏறி நின்று உரக்கப் பேசியிருக்கவேண்டும். அறிவு என்பது அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. அதைத் தனியே பிரயத்தனப்பட்டுதான் வளர்த்துக்கொண்டாகவேண்டும். கடினமானதுதான், ஆனால் அதைத்தவிர வேறு வழியில்லை. சிக்கல் என்னவென்றால் ஜேஎன்யு-வை நீங்கள் இதைக்கொண்டு மட்டுமே எதிர்கொண்டாகவேண்டும்.

ஜேஎன்யு என்பது பாபர் மசூதி அல்ல. எனவே, இடிப்பதைப் பற்றி யோசிக்காமல் உருவாக்குவதைப் பற்றி யோசியுங்கள்.

எங்கே உங்களுடைய ஜேஎன்யு?

உங்களால் ஒரு ஜேஎன்யுவை உருவாக்கமுடியுமா? முடியுமென்றால் அதை உருவாக்கிக் காட்டிவிட்டு பிறகு அங்கிருந்து உரையாடத் தொடங்குங்கள். அப்சல் குரு, காஷ்மீர், தேச பக்தி, தேச விரோதம், இந்து தேசியம், இந்துத்துவம், சாவர்க்கர் என்று நீங்கள் பேச விரும்பும் எதையும் அங்கிருந்தபடி பேசுங்கள். உங்கள் தரத்தை உயர்த்திக்கொண்டு, உங்கள் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு உரையாடுங்கள். உங்களால் ஏற்கமுடியாத கருத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆதாரங்களுடன் மறுத்து உங்கள் தரப்பை முன்வையுங்கள். விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் நடத்துங்கள். போராடுங்கள். கோஷமிடுங்கள்!

நீங்கள் வெறுத்தொதுக்கும் இடதுசாரிகள் அனைவரும் இதைத்தான் செய்தார்கள்.

இறுதியாக ஒன்று. ஜான் காட்டன் தோற்கடிக்கப்பட்டவர் என்பதை மறந்துவிடவேண்டாம்!

                                   #மருதன்

நான் உமர் காலித்

நான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை!
==========================================

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான உமர் காலித், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், ஜே.என்.யூ. மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.

கடந்த பத்து நாட்களாக என்னை பற்றி எனக்கே தெரியாத பல விசயங்களை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றாலும், நான் பாகிஸ்தான் சென்று வந்ததாக அறிந்தேன். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகள் என்றாலும், நான்தான் மாஸ்டர் மைண்ட் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 18 பல்கலைக்கழகங்களில் நான் இந்த (அப்சல் குருவைத் தூக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்தேனாம். எனக்கு இந்த அளவுக்கு ஆற்றல் உள்ளது என்று எனக்கே தெரியாது.

கடந்து இரண்டு மூன்று மாதங்களாகவே நான் இதற்கு திட்டமிட்டு வந்தேனாம் . கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா? அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா? விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்களுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.

நம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .

நான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.

எனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிறிஸ்தவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள். தோழர் கண்ஹையாவின் அன்றைய உரையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

என் தந்தையிடம் விசாரணை என்ற பெயரில் அவரது பழைய செயல்பாடுகளை எடுத்து, அதை வைத்து என் மீது முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். அதாவது, எப்படியாவது குற்றம் சுமத்திவிட வேண்டும் என்ற முனைப்பு. சிலர் ஜீ நியூசில் இருக்கிறார்கள், டைம்ஸ் நவ்வில் ஒரு அண்ணன் இருக்கிறார், அவரின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை, மேலும் சில ரிப்போர்ட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீது இவ்வளவு வெறுப்பும், கோபமும் எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. இவ்வளவு வெறுப்பு எப்படி வந்தது?

என் மேல் நடந்த ஊடக விசாரணையை பற்றி ஒரு சிறிய செய்தி ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள். நான் பாகிஸ்தான் கவிஞர் ஒருவரின் ஓரிரு வரிகளை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.

”இந்துஸ்தானும் எங்களது,

பாகிஸ்தானும் எங்களது,

இரு நாட்டின் மீது அமெரிக்காவின் கரம் இறுகியுள்ளது,

நீங்களோ அந்த கரம் பற்றிக் கொண்டு அலையும்

அமெரிக்காவின் தரகர்கள் ஆவீர்கள்”

தரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வகுப்பிற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளனமாக்க முடியாது.

தோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய இடங்கள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனது தோழன் நிர்பான் பிப்ரவரி 10-ஆம் நாள்ஊடகங்களில் கூறினார் “தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.” ஒருவேளை இப்படியான வழிமுறைகளின் வழியாக எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் பெரிய மாயை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

நான் ஏற்கனவே கூறியதை போல, தவறான பல்கலைக்கழகத்தில் கை வைத்துவிட்டீர்கள். ஏற்கனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த முயன்று வருகிறீர்கள். பூனே திரைப்பட கல்லூரியாகட்டும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக இருக்கட்டும், ரோஹித் வெமுலா மற்றும் அவரது தோழர்களுக்கு நிகழ்ந்த அடக்குமுறைகளாகட்டும், ரோஹித் வெமுலா கொலை செய்யப்பட்டதாக இருக்கட்டும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சந்தீப் பாண்டேக்கு நேர்ந்ததாக இருக்கட்டும்... அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறோம்.

ஒவ்வொரு போராட்டத்தையும் தெருவுக்கு தெரு மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் கடமை என்ன என்பது புரிந்துதான் இருக்கிறது. ஜேஎன்யூ போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக ஜேஎன்யூவை ஒழித்து கட்டுவோம் என்று முடிவு செய்திருந்தீர்கள் என்றால், உங்களை போல பலர் வந்து சென்றார்கள், அவர்களே முடிந்து போனார்கள் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒருவேளை, நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கக் கூடும். எமெர்ஜென்சிக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மன்மோகன்சிங்கை மறந்து போயிருக்கக் கூடும். அவர் நேருவின் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இதே பல்கலைக்கழகம் போராடியது. ப.சிதம்பரம் இந்த பல்கலைகத்திற்கு வந்த போது, மாணவர்கள் அவரை வரவேற்பார்கள் என்று கருதினார். ஆனால், மாணவர்கள் யார் பக்கம் என்பதையும், அவருடைய இடம் எது என்பதையும் மாணவர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள். ஜேஎன்யூ என்றுமே விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பக்கம்தான் நிற்கும். உங்களின் கீழ்த்தரமான உத்திகளால் நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை.

தோழர்களே, இவை அனைத்தும் நம்மை உளவியல் ரீதியாக சீண்டி பார்க்கும் திட்டம் கொண்டது. அவர்கள் நாம் பயந்து விடுவோமோ என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அவர்களின் சவாலை நாம் ஏற்றுக் கொண்டு, நாம் அஞ்சமாட்டோம், மாறாக, எதிர்த்து போராடுவோம் என்பதை அவர்களுக்கு உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் அனைத்து முனைகளிலிருந்து உங்களை எதிர்ப்போம்.

எந்தவித அச்சமும் இல்லாமல், அனைத்து பிரச்சினையிலும், எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும். தோழர்களே, இவர்கள் பெரும் கோழைகள். அவர்களின் மாணவர் அமைப்பு அகில பாரதிய வித்யா பரிஷத் (ஏ.பி.வி.பி.) இந்த வளாகத்தின் குரங்கு படை. அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உங்களது செயல்திட்டம் முன்னுக்கு வரவில்லையா? குழப்பம் விளைவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர், ரிஜிஸ்டிரார், காவல்துறை, எம்.பி என அனைவரும் உங்கள் பக்கம் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.

அப்பாராவுக்கு பதிலாக ஜக்தீஷ் குமாரை நியமித்ததாகட்டும், தத்தாத்ரேயாவுக்கு பதிலாக மகேஷ் கிரியை நியமித்ததாகட்டும் அவர்களுடைய செயல்வடிவம் ஒன்றே ஒன்றுதான்.

இனிமேலும், ரோஹித்துக்கு நடந்தது எங்கும் நடக்காது. நாங்கள் எங்கள் உடனடி அடையாளத்தோடு சுருங்கமாட்டோம். நாங்கள் இதற்கு தொடக்கமாக இருப்போம், சிறகு விரித்து பறப்போம், எதிர்கொள்வோம். நாங்கள் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த சுதந்திர வெளி நாங்கள் உருவாக்கியது. அதில் ஒரு இன்ச் இடத்தைக் கூட உங்களுக்கு தர மாட்டோம். நீங்கள் இந்த வெளியை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.

ஏ.பி.வி.பி.-க்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும், அவர்களால் மக்களிடம் சென்று, மக்களை அணி திரட்ட முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்களின் வழியாக, இத்தனை ஊடக விசாரணைக்கு பிறகும், பரப்புரைகளுக்கு பிறகும், பத்து நாட்களுக்கு முன் உறங்கி கிடந்ததை போல தேசபக்தியை எழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகும், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு ஆதரவான போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கிறார்கள். இங்கே பதினைந்தாயிரம் பேர் திரண்டார்கள். ராகுல் காந்தி இந்த வளாகத்திற்கு வந்திருந்த போது ச்சீ(ஜீ) நியூஸ் தொலைக்காட்சி, மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதை கவனித்தேன். ஆனால், இந்தப்பக்கம் 3000 பேரும், அங்கே பத்து பன்னிரெண்டு பேரும்தான் இருந்தார்கள் என்று அதற்கு பிறகுதான் தெரியவந்தது.

செய்திகளை திரிப்பதற்கு கொஞ்சம் கூட வெட்கமின்றி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்ற திறன் இவர்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. தோழர்களே, இந்த பல்கலைக்கழகம்தான் நமக்கு கற்பித்திருக்கிறது. இங்கிருந்துதான் மாணவர் போராட்டங்களை நடத்தினோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எந்த பல்கலைக்கழகம் மாற்று கருத்துக்கு இடமளிக்க மறுக்கிறதோ, அது பல்கலைக்கழகம் அல்ல, அது சிறை. நம் பல்கலைக்கழகங்களை சிறைக்கூடங்களாக மாற்றும் இவர்களின் செயல்திட்டங்களை நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்று கண்டிப்பாக தோற்கடிப்போம்.

நாம் நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் மாற்றுக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி விவாதித்து முடிவை எட்டுவது என்பது நமக்கு தெரியும். தோழர் அசுதோஷ், தோழர் அனந்த்தின் அமைப்பு ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, அல்லது நாம் ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, நமக்குள்ளேயே எதிரெதிராக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எந்த நிகழ்ச்சியிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏனென்றால், மக்களை சந்திப்பது எப்படி என்பது நமக்கு தெரியும். இவர்களின் உத்திகளுக்கு நாம் கண்டிப்பாக அடிபணிய மாட்டோம்.

இந்த தாக்குதல் பல்கலைக்கழத்திற்கு எதிரானது மட்டும்தான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். என் உரையை முடிக்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

"நாடு முழுக்க பல்வேறு தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், சோனி சோரியின் மீதும், ஜக்தல்பூர் சட்ட உதவிக் குழுவின் மீதும் நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நாம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஜேஎன்யூவின் இந்த பண்பாட்டை உயர்த்தி பிடிக்க வேண்டும்."

நன்றி!

https://minnambalam.com/k/1456099254